தூய்மைப் பணியில் மாணவர்களை பயன்படுத்தக் கூடாது!

– பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மூலம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் தூய்மைப் பணியை புகைப்படம் எடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத் தூய்மை குறித்து மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் திடீரென சோதனையிடலாம். அப்போது, தூய்மையின்றி உள்ள பள்ளிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, அனைத்துப் பள்ளிகளும் தூய்மையை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பள்ளிகள் மட்டுமின்றி, தாம் வசிக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் சில பள்ளிகளில் மாணவர்கள் கழிவறையை தூய்மை செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

மாணவிகள் தண்ணீர் பிடித்து வகுப்பறைக்குள் கொண்டு சென்று வைக்கும் வீடியோக்களும் வெளியானது.

பலரும் இந்த வீடியோக்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் எக்காரணம் கொண்டும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும், பள்ளிகளை தூய்மைபடுத்த 100 நாட்கள் வேலைத்திட்ட பணியாளர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Comments (0)
Add Comment