மறைந்திருக்கிறார் நெல்லை கண்ணன்.
நெல்லைத் தமிழை லாவகமாகவும், நையாண்டியாகவும், இலக்கியத் தரமாகவும் பேசிக் கொண்டிருந்த அவருடைய உரையாடல் நின்று போயிருக்கிறது.
காங்கிரசில் இருந்தாலும், அதைக்கடந்து பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் நெருக்கம் பாராட்டி வந்தவர். சங்க இலக்கியங்களை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர். ‘தமிழ்க்கடல்’ என்றழைக்கப்பட்டவர்.
நெல்லையப்பர் கோவிலுக்கு அருகில் பாரம்பரியமான வீட்டில் வாழ்ந்துவந்த நெல்லை கண்ணன் 77 ஆவது வயதில் காலமாகி இருக்கிறார்.
நெல்லையில் அவருடைய வீட்டிற்குப் போகிறவர்கள் யாரையும் சிரிப்பும் நக்கலாகவும் வரவேற்பார். உபசரிப்பார். சமயங்களில் ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவார்.
குமுதம் பத்திரிகையில் பணியாற்றிய போது பல சந்தர்ப்பங்களில் அவருடைய வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு போனாலே குறைந்தது இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு மேல் நீளும் பேச்சில் நிறைய அனுபவங்களை, வாசிப்பின் சுகந்தத்தைப் பகிர்ந்து கொள்வார். பெரும்பாலும் பலரை ஒருமையில் தான் பேசுவார்.
அவர் பாணியில் வேகத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது எதிரில் இருப்பவர்கள் குறுக்கிட முடியாத அளவுக்கு ஈர்ப்புடன் இருக்கும் அவருடைய பேச்சு.
காங்கிரசில் இருந்தாலும், காங்கிரஸ் தலைவர்களை கவிஞர் கண்ணதாசனைப் போலவே சிரித்தபடியே விமர்சிப்பவர். மற்ற கட்சியினரைப் பற்றி மேடையில் பேசும்போது, அவருடைய வெளிப்படையான பேச்சு பலமுறை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. நவீன இலக்கியங்கள் வரை அவருடைய வாசிப்பு நீண்டிருக்கிறது.
கலைஞர் சென்னையில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்ற போது, அவருடைய பிரச்சாரம் உச்சிக்குச் சென்றது.
பட்டிமன்றம் துவங்கிப் பல மேடைகளில் அவருடைய பேச்சு கலகலக்க வைத்தாலும், விஜய் தொலைக்காட்சியில் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான ‘’தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’’ என்கிற தொடருக்கான நடுவராக இருக்க அவரை அழைக்கச் சென்றபோது உற்சாகமானார்.
‘’என்னய்யா.. பணத்தைப் பத்தி பேசுறீரு.. நான் கலந்துக்குறேன். அந்தத் தொலைக்காட்சியிலே என்ன கொடுக்கணுமோ, அதைக் கொடுக்கட்டும்..’’ என்றவர் அந்தத் தொடர் முடிகிற வரை, சென்னைக்குச் சரியான நேரத்தில் வந்து இரண்டு நாட்களில் ஒரு மாதத்திற்கு வேண்டிய எபிஸோடுகளுக்கான பணிகளை முடித்துவிட்டுக் கிளம்பும்போது காசோலையைப் பெற்றுக் கொள்கிறபோது கிண்டலடித்தபடியே சிரிப்பார்.
அவருடைய வீட்டுக்குப் போய்விட்டுக் கிளம்பும்போது எப்போதும் இருட்டுக் கடை அல்வா அடங்கிய பையைக் கையில் கொடுத்துப் புன்னகையுடன் அனுப்பி வைப்பார்.
அந்த நெல்லைத் தமிழ் அமைதியாக அடங்கியிருக்கிறது.
- மணா