கலைவாணர் கிருஷ்ணன் நடத்தும் காந்தி மகான் சரித்திர வில்லுப்பாட்டும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்நாட்டில் சில காலமாகப் பிரசித்தியடைந்திருக்கின்றன.
வில்லுப்பாட்டு என்பது தென்பாண்டிய நாட்டுக்குத் தனி உரிமையான ஓர் அபூர்வ கலை. வில்லடிக்கும் நாதமும், பானையடிக்கும் முழக்கமும், உடுக்கையின் சத்தமும், பக்கப்பாட்டுக்காரர்களின் அட்டகாசமும் துணைசெய்ய, வில்லுப்பாட்டு வித்வான் கவியாகவும் வசனமாகவும் கதை சொல்லி, கேட்பவர்களை ஆவேச வெறி ததும்பும் ஒரு புது உலகத்துக்குக் கொண்டு போய்விடக்கூடிய கலை.
ஏறக்குறைய அழிந்து போய்விட்டது என்ற நிலையில் இருந்த அந்தக் கலைக்கு ஸ்ரீ என்.எஸ். கிருஷ்ணன் புத்துயிர் கொடுத்துக் காந்திமகான் கதையைச் சொல்லி வருகிறார். நல்ல தம்பி என்னும் படத்தில் நல்ல தம்பி காந்தி மகாத்மா படத்தைக் காட்டி “இவர் என் கடவுள்” என்று சொல்லுவது நேயர்களுக்கு நினைவிருக்கலாம்.
அத்தகைய பக்தியுடன் மகாத்மா காந்தியின் சரித்திரத்தைக் கலைவாணர் கிருஷ்ணன் வில்லுப்பாட்டு மூலம் பிரசாரம் செய்து வருகிறார். மெத்தப் படித்த அறிவாளிகளும் படிப்பில்லாத பாமரர்களும் ரசித்து அனுபவிக்கும்படியான முறையில் வில்லுப்பாட்டுக் கலையைக் கையாளுகிறார்.
சாதி உணர்ச்சிகளைப் போக்கிக் கல்வியின் பெருமையை நிலைநாட்டும் ‘கிந்தனார் காலட்சேபம்’ எத்தனை தடவை கேட்டாலும் அலுப்பதில்லை. அவ்வளவு கற்பனையும் ரசனையும் அதில் பொருந்தியிருக்கின்றன.
சமீப காலத்தில் கலைவாணர் கிருஷ்ணன் உதவிக் கச்சேரிகள் நடத்திக் ஸ்தாபனங்களுக்கும் மற்றும் பொதுநலக் காரியங்களுக்கும் பணம் சேகரித்துக் கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.
கடவுள் அருளால் தமக்குக் கிடைத்திருக்கும் கலைத்திறனை இப்படிப் பொது மக்களின் நன்மைக்காக அவர் உபயோகப்படுத்தி வருவதைத் தமிழ் உலகம் பெரிதும் பாராட்டுகிறது.
வலது கையினால் கொடுப்பது இடது கைக்குத் தெரியாதபடி பல தர்மங்களைச் செய்திருப்பவர் ஸ்ரீ என்.எஸ். கிருஷ்ணன். ஆனால் அவரே மறைக்க முயன்றாலும் மறைபடாத வண்ணம் ஒரு அரும்பெரும் கைங்கரியமும் அவர் செய்து முடித்திருக்கிறார்.
நாகர்கோவிலில் காந்திமகானின் ஞாபகார்த்தமாக நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் ஒரு ஸ்தூபம் அமைத்து அதன் அடிப்பகுதியில் மகாத்மாவின் போதனைகளை எழுது வித்திருக்கிறார்.
கலைவாணர் கிருஷ்ணன் சிறந்த தமிழ் அன்பர். அவர் படங்களில் நடிக்கும்போது தூய தமிழ் மொழியைக் கையாண்டு தெளிவாகப் பேசுகிறார். படங்களின் மூலமாகவும், வில்லுப்பாட்டுக் காலக்ஷேபங்களின் மூலமாகவும் நல்ல தமிழைப் பரப்புவதற்குப் பேருதவி செய்திருக்கிறார்.
திருவள்ளுவர் வரலாற்றை வில்லுப்பாட்டில் அமைத்துக் கச்சேரி செய்யப் போவதாக அவர் தெரிவித்திருப்பது தமிழ் மக்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
சிறந்த கலைத் திறனையும், உயர்ந்த நகைச் சுவையையும். முதிர்ந்த தமிழன்பையும் ஸ்ரீ என்.எஸ். கிருஷ்ணனுக்கு அளித்த இறைவன் அவருக்கு ஸ்ரீ டி.ஏ.மதுரத்தையும் அளித்திருக்கிறார்.
கலைவாணர் கிருஷ்ணனின் வாழ்க்கையும் கலைத் திறனும் பொதுநலத் தொண்டும் ஸ்ரீமதி டி.ஏ.மதுரத்தின் கூட்டுறவின் மூலமாகச் சுடர்விட்டு ஒளிர்கின்றன. பரோபகாரத்துக்கே பிறந்த இந்தத் தம்பதிகள் நீடூழி வாழ்ந்து கலைத் தொண்டு புரிந்து வருவார்களாக!
– கலைவாணர் பற்றி கல்கி