பான் இந்தியா படம் பற்றி இப்போது அதிகம் பேசி வருகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகும் படங்களுக்கு இப்படியொரு பெயர். சில வருடங்களுக்கு முன் இதை மல்டி-லிங்குவல் படம் என்றார்கள்.
ஒரே படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாக்குவது பான் இந்தியா திரைப்படங்கள். ‘பாகுபலி’க்கு பிறகு பான் இந்தியா முறையில் உருவாகும் படங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்தப் படங்களில் ஹீரோ ஒருவராக இருப்பார். ஹீரோயின், மற்ற நடிகர்கள் அந்த மொழியில் இருந்து ஒருவரோ, இருவரோ இடம்பெற்றிருப்பார்கள்.
ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்று தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கிறது. இப்படி ஐந்து மொழிகளில் உருவான முதல் இந்தியப் படமும் அதுதான். அந்தப் படம் ‘மலைக்கள்ளன்’!
அத்தனை மொழிகளிலும் இயக்கியவர் ஒருவரே! ஆனால், இதை ‘பான் இந்தியா’வுக்குள் கொண்டு வர முடியாது. ஏனென்றால், இந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் மற்ற மொழிகளில் உருவானது.
தமிழ் தவிர, தெலுங்கில் அக்கி ராமுடு, மலையாளத்தில் தஸ்கர வீரன், கன்னடத்தில் பெட்டாட கல்லா, இந்தியில் ஆசாத், சிங்களத்தில் சுரசேனா என்ற பெயரில் இந்தப் படங்கள் உருவாகின.
இந்தப் படத்துக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. முதன்முதலாக குடியரசுத் தலைவர் விருது பெற்ற திரைப்படம் இதுதான். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் 150 நாட்களுக்கு மேல் ஓடிய படம் இது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி, எம்.ஜி.சக்கரபாணி, டி.எஸ்.துரைராஜ் பி.எஸ்.ஞானம், சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர்.
1954 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியது கருணாநிதி. கோவை பட்சி ராஜா பிக்சர்ஸ் அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து, இயக்கிய இந்தப் படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார்.
“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”, “தமிழன் என்றொரு இனம் உண்டு” உட்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம் மலைக்கள்ளன்.
இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டரில் முதலில் நடித்தவர் பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன். சில நாட்கள் ஷூட்டிங் நடத்திய பிறகு அவர் நடிப்பு அந்த கேரக்டருக்கு பொருந்தவில்லை என்பதால், எம்.ஜி.சக்கரபாணியை நடிக்க வைத்தார்கள்.
இதில், முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சிவாஜி கணேசன். அவரைதான் கோவை பட்சி ராஜா பிக்சர்ஸ் அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு நடிக்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
ஆனால் அப்போது சிவாஜி பிஸி. மூன்று, நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அவரால் இதில் நடிக்க முடியாமல் போனது. பிறகுதான் இந்தப் படத்துக்குள் எம்.ஜி.ஆர் வந்தார். அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் சிவாஜி என்கிறார்கள்.
– அலாவுதீன்