இடதுக்கு ஒரு வந்தனம்!

ஆகஸ்ட் 13 – உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் தினம்

இடமிருந்து வலமாக எழுதும் மொழிகளில் முதன்மையானது தமிழ். ஆனாலும், தமிழறிந்த பலரும் வலம் சார்ந்தவற்றுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். காரணம், வலம் என்பது வணக்கத்திற்குரியது என்ற எண்ணம்தான்.

வழக்கத்திற்கு மாறான எந்தவொன்றுமே எப்போதும் கவனிப்புக்கு உட்படும். அந்த பார்வையில் பெரும்பாலும் குதர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கும்.

செக்கில் பூட்டிய மாடுகள் போல, நாம் நன்கறிந்த பழக்கங்களுக்குள் சுற்றி வருவதே நமக்கு உவப்பைத் தரும். அதிலிருந்து சற்று பிசகினாலும், எவ்வளவு அன்புக்குரிய உறவுகளும் விலகலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதற்கு மிகமிகச் சிறிய உதாரணம், இடதுகைப் பழக்கம்.

வலமே மங்கலம்!

‘வீட்டுக்குள்ள மொத தடவை வர்றீங்க, வலது காலை எடுத்து வச்சு வாங்க’ என்ற வார்த்தைகள் நமக்கு பரிச்சயமானவை. மறந்துபோய் இடதுகாலை எடுத்துவைத்துவிட்டால், அது குறித்த எண்ணம் சுற்றிச் சுழன்று நம் மனதை அமிலம் ஊற்றிய தரை போலாக்கியிருக்கும்.

பொது இடத்தில் யாருக்காவது, எதையாவது கொடுக்க வேண்டியிருந்தால் கூட, வலது கையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

சமூகம் வகுத்து வைத்திருக்கிற அவ்விதியை மீறினால், ‘என்னப்பா, அந்த கை வராதா’ என்ற பேச்சைக் கேட்க வேண்டியிருக்கும் பதிலுக்கு, ‘ஏங்க, ஒண்ணு போதுமா உங்களுக்கு’ என்று கிண்டலாகக் கூட கேட்டுவிட முடியாது.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்தியாவில் இடது கையால் வழிபாடு மேற்கொள்ள முடியாது.

அவ்வளவு ஏன், ஏதேனும் விழாக்களில் கலந்துகொள்ளும்போது மூத்தோரின் பாதங்களை யாரேனும் ஒரு பிரபலம் இடது கையால் தொட்டு வணங்கினால் அவ்வளவுதான்.

அதை வைத்தே சமூக வலைதளங்கள் சில மணி நேரங்களை உருட்டிக் கொண்டிருக்கும்.

ஒருமுறை பேருந்தொன்றில் பயணிக்கும்போது, வலது கையில் ஏதோ ஒரு பையை வைத்திருந்ததால் டிக்கெட் வாங்க இடது கையால் பணம் கொடுத்தேன்.

அதைக் கவனித்ததும், அந்த நடத்துனரின் முகம் மாறியது.

தன் இடது கக்கத்தில் இருந்த பணப்பையை வலது பக்கத்துக்கு மாற்றிவிட்டு, இடது கையால் டிக்கெட்டையும் மீதிச் சில்லறையையும் தந்தார்.

அவர் முகத்தில் ‘பழிக்குப் பழி’ என்ற டைட்டில் மட்டும்தான் ஓடவில்லை. மற்றபடி கண்களில் நெருப்பு மேலெழுந்து அடங்கிக் கொண்டிருந்தது.

அந்த இடத்தில், இடது கை பழக்கமுள்ளவர்கள் இருந்திருந்தால், இன்னமும் நொந்து போயிருப்பார்கள்.

இப்போதும், திரைப்படங்களில் நாயகன் வீர வசனம் பேசும்போது ‘வலது கையை வெட்டிட்டா, கழுவுற கையாலாதான் சாப்பிட வேண்டியிருக்கும்’ என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அதாகப்பட்டது, மலம் கழித்தால் கழுவுவதைத் தவிர வேறெந்த பயனும் இடது கைக்கு கிடையாது என்பதே இதன் அர்த்தம்.

உலக மக்கள் தொகையில் சுமார் 10% பேர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என்றறிந்த பிறகும், இந்த வசனம் பயன்படுத்தப்படும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

தொட்டில் பழக்கம்!

உலகமே வியக்கும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் திரை ஆளுமைகளில் ஒருவரான அமிதாப் பச்சன்,

‘இப்படியொரு ஆளா நாமும் ஆக முடியாதா’ என்று ஏங்க வைக்கும் வர்த்தகரான பில் கேட்ஸ் உட்பட நமக்கு நன்கு தெரிந்த பல சாதனையாளர்கள் இடது கை பழக்கமுள்ளவர்கள்தான்.

குழந்தைப் பருவத்தில் இவர்களது பெற்றோர், ‘ஏய் என்ன இடது கைய யூஸ் பண்ணிக்கிட்டு’ என்று அதட்டியிருந்தால், இவர்கள் என்னவாயிருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான். காரணம், இயல்பு மிளிரும்போது தான் சாதனைகள் துளிர்க்கும்.

இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு வலது பக்க மூளையின் செயல்பாடு அதிகமிருக்கும். எண்ணம், செயல், நடத்தை, பிறருடனான உறவு என்று இவர்களது ஒவ்வொரு அம்சமும் தனித்துவமானதாக இருக்கும்.

உண்மையில், ஒரு குழந்தை தவழும்போதே இடது கை பயன்படுத்துகிறதா என்பதைக் கண்டறிந்து விடலாம்.

நம் முன்னோர்கள் அதனைத் திருத்தாமல் இருந்திருந்தால், இடது கை பழக்கமுள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும்கூட அதிகமிருக்கும்.

இயல்பை மாற்றும்போது, அவர்களிடம் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் இடம் மாறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருவேளை இடது கை பழக்கத்தை ஊக்குவித்தால், நம் வீட்டு குழந்தைகளும் சச்சின், பச்சன் ஆகக்கூடும்!

எங்கும் வலது!

இப்போதுவரை பெரிய பெரிய கட்டடங்கள், தியேட்டர்கள், மால்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனிப்பாதைகள் கிடையாது. பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட அவர்கள் ஏறவும் இறங்கவும் பிரத்யேக படிக்கட்டுகள் அமைக்கப்படுவதில்லை.

இந்த லட்சணத்தில், இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு ஏற்றவாறு அத்தியாவசியப் பொருட்கள் வடிவமைக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பது அசட்டுத்தனம்.

தினசரி பயன்பாட்டில் இடம்பெறும் அனைத்து பொருட்களையும் இடது கையால் பயன்படுத்தினால் எப்படியிருக்கும் என்று யோசித்தால், இதன் அவசியம் புரியும்.

நமது சட்டையில் பொத்தான்கள் இடப்புறம் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசிப்பது இதற்கொரு உதாரணம்.

பெரும்பாலானோருக்கு மட்டுமே இந்த உலகம் இயங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அல்லது பெரும்பாலும் இதையே பின்பற்ற வேண்டுமென்று எதையாவது திணிப்பது பாசிசம்.

தெரிந்தோ, தெரியாமலோ, ஒரு சமூகமாக நம்முடன் வாழும் இடது கையாளர்களிடம் நாம் பாசிசத்தை தான் வெளிப்படுத்தி வருகிறோம்.

அதனை ஒழிக்க, இரு கைகளையும் பயன்படுத்தும் வழக்கத்திற்கு நாமனைவரும் மாறலாம்.

இடது என்பது அவமானகரமானது என்ற சிந்தனை இனிமேலாவது அகற்றப்பட வேண்டும். குறைந்தபட்சம் யாராவது இடது கையால் வணக்கம் செலுத்தினாலோ, கை குலுக்க முன்வந்தாலோ, ‘இரண்டு கைகளும் சமம்’ என்ற எண்ணமே நமது மனதில் முதலில் எழ வேண்டும்.

அதனை ஏற்கும் விதமாக, இடது கையை உயர்த்த வேண்டும். முடியாவிட்டால், ‘என் வழக்கமிது’ என்று வலது கையை முன்னகர்த்தலாம்.

முடியாது என்பவர்கள், வலது கையை மட்டுமே பயன்படுத்தி வாழலாம். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் என்றாலும், காலம் காலமாகத் தொடரும் மனவோட்டத்தைத் தடுக்க இதுவே சிறந்த வழி!

-உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment