ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களில் முக்கால்வாசி ‘த்ரில்லர்’ வகையறாதான்.
அதுவும் வழக்கத்திற்கு மாறாக, கோரம் நிறைந்த அல்லது திரையரங்குகளில் வெளியாவதற்கான தணிக்கை விதிகளுக்கு உட்படாத காட்சிகள், வசனங்கள், கருத்துகள் நிறைந்த படைப்புகளாகவே இவை அமைந்திருப்பதும் கண்கூடு.
அமலா பால் தயாரித்து பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கடாவர்’ திரைப்படமும் இந்த வரிசையிலமைந்திருக்கிறது.
அபிலாஷ் பிள்ளையின் எழுத்தாக்கத்திற்கு திரையில் உயிர் தந்திருக்கிறார் இயக்குனர் அனூப் பணிக்கர்.
ஆதித் அருண், அதுல்யா ரவி, ரித்விகா, முனீஸ்காந்த், ஹரீஷ் உத்தமன், வினோத் சாகர், வேலு பிரபாகரன், நிழல்கள் ரவி, தெலுங்கு நடிகர் ரவி பிரகாஷ் உட்பட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
நல்ல தொடக்கம்!
சென்னையைச் சேர்ந்த ஒரு முன்னணி மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் சலீம் ரஹ்மான் (ரவி பிரகாஷ்), மர்மமான முறையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். காருக்குள் வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கிடைக்கிறது.
சலீம் ரஹ்மான் மரணத்திற்கு முன்னதாகவே, அவரது உருவத்தை சுவரில் வரைகிறார் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கைதியான வெற்றி (ஆதித் அருண்).
இதனால், போலீசாருக்கு குழப்பம் மேலிடுகிறது.
பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவரான பத்ரா (அமலா பால்), இவ்வழக்கில் போலீசாருக்கு உதவும் நோக்கில் நியமிக்கப்படுகிறார்.
ஐபிஎஸ் அதிகாரியான விஷால் (ஹரீஷ் உத்தமன்) தலைமையில் இவ்விசாரணை நடைபெறுகிறது.
விசாரணையின்போது, வெற்றியின் காதல் மனைவி ஏஞ்சல் (அதுல்யா ரவி) மரணம் பற்றி தெரிய வருகிறது.
ஏஞ்சல் மரணிப்பதற்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் டாக்டர் சலீம் ரஹ்மான் பணியாற்றி இருக்கிறார் என்பதுதான் முன்னதற்கும் பின்னதற்குமான தொடர்பு.
ஆதலால், ஏஞ்சல் மரணத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று அறியும் முயற்சியின்போது டாக்டர் ஆபேல் (நிழல்கள் ரவி) என்பவர் கொலை செய்யப்படுகிறார். இதன் தொடர்ச்சியாக, அடுத்ததாக கொலை செய்யப்படும் நபர் யார் என்பதைக் கண்டறிகிறார் பத்ரா.
ஆனால், அதனை மறுக்கும் விஷால் அடுத்ததாக சலீம் ரஹ்மானின் தந்தை அலி (வேலு பிரபாகரன்) தான் கொல்லப்படுவார் என்கிறார். அதனைக் கேட்டு பத்ரா புன்னகைக்கிறார்.
உண்மையில் வெற்றியின் பெயரைச் சொல்லி கொலைகளை நிகழ்த்தும் நபர் யார்? பத்ராவுக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? கொலைகளுக்கான காரணம் என்ன என்று நீள்கிறது திரைக்கதை.
பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில், அங்கிருக்கும் துர்நாற்றத்தைப் பொருட்படுத்தாமல் பத்ரா உணவு உட்கொள்வதாக தொடக்க காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சடலம் எப்படிப்பட்ட நிலையில் கிடைத்தாலும் நிகழ்ந்தது இயற்கை மரணமா, கொலையா, தற்கொலையா என்பதை வெளிப்படுத்தும் தகவல்களை பத்ரா சொல்வதாக இன்னொரு காட்சி உள்ளது.
அவற்றின் தொடர்ச்சியாக, மர்மமான முறையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் சொல்லப்படுகிறது. இவையனைத்தும் சேர்ந்து படத்திற்கு நல்லதொரு தொடக்கத்தைத் தருகிறது.
ஆனால், முன்பாதியில் மிக இறுக்கமாக நகரும் திரைக்கதை பின்பாதியில் கதை முடிச்சுகளை அவசரகதியில் அவிழ்த்த காரணத்தால் தறிகெட்டு ஓடுகிறது.
குற்றமும் தண்டனையும்!
எல்லா குற்றங்களுக்கும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதையின் மையம். ‘பழிக்குப் பழி’ வகையறா திரைக்கதையில் இறுதி முடிச்சு விடுபடும்போது, பார்வையாளர்கள் சுவாரஸ்யத்தின் உச்சத்தைத் தொட வேண்டும்.
ஆனால், இதில் அம்முடிச்சு ‘த்ரில்’ சார்ந்ததாக அல்லாமல் ‘சென்டிமெண்ட்’ சார்ந்து அமைக்கப்பட்டிருப்பது பலவீனமாகத் தோன்றுகிறது.
என்னதான் ஆதித் அருண், அதுல்யா, வினோத் சாகர், ரித்விகா என்று அரை டஜன் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்தாலும், கதை என்னவோ அமலா பாலை சுற்றியே நகர்கிறது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் குறித்த தகவல்கள் பெரியளவில் திரைக்கதையில் சொல்லப்படமாலிருப்பது மிகப்பெரிய பலவீனம்.
போலவே, ஹரீஷ் உத்தமன் மற்றும் முனீஸ்காந்தின் பாத்திரங்கள் வெறுமனே திரையில் வந்துபோவதாக வடிவமைக்கப்பட்டிருப்பது துருத்தலாகத் தெரிகிறது.
சீனியர்களான நிழல்கள் ரவி, வேலு பிரபாகரன் மற்றும் ரவி பிரகாஷுக்கு பெரிதாக காட்சிகள் இல்லாததும் ஒரு குறை.
இவற்றை மீறி, அனைத்து நடிகர் நடிகைகளும் வெறுமனே பாத்திரங்களாகத் தோன்றியிருப்பது அழகு. அவர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இப்படியொரு கதையில் கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்தில் அமலா பால் வந்திருப்பது போல அவரது பாத்திரத்திற்கான முன்கதை ஒன்றையும் வடிவமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கின் ‘மினி டீடெய்ல்ஸ்’ ஷாட்கள் ஒரு த்ரில்லர் திரைக்கதைக்கு துணை நிற்கின்றன. அவரது சமீபகால படங்கள் அனைத்தும் ‘த்ரில்லர்’களாக அமைந்திருப்பது தற்செயலா திட்டமிட்டதா என்று தெரியவில்லை.
சான் லோகேஷின் படத்தொகுப்பு சீராக கதை சொல்ல உதவினாலும், அபிலாஷின் திரைக்கதையாக்கம் அதற்கேற்றவாறு அமையவில்லை. இதனால், ஒரே காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்படும்போது குழப்பம் மேலோங்குகிறது.
சர்தாஜின் கலை வடிவமைப்பு கவனம் ஈர்க்கிறது. ரஞ்சின் ராஜின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
இறுதிக்காட்சிகளில் அமலா பாலின் பின்னணியில் ‘ஐங்கிரி நந்தினி’ ஸ்லோக மெட்டு கேட்க நன்றாக இருந்தாலும் கதையின் போக்கோடு பொருந்தவில்லை.
அதற்கேற்ற காட்சிகளோ தகவல்களோ முன்னதாகத் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.
இப்படியொரு டைட்டிலுக்கு, கதைக்கு ஏற்றவாறு படம் முழுக்க பிரேதப் பரிசோதனை குறித்து அருவெருப்பு ஏற்படாத வகையில் பல்வேறு தகவல்கள் காட்சிகளில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதனைச் செய்யத் தவறியிருக்கிறார் இயக்குனர் அனூப். போலவே, திரைக்கதையில் எந்த முடிச்சு எந்த இடத்தில் விடுபட வேண்டுமென்று தீர்மானிப்பதிலும் லகானை தவற விட்டிருக்கிறார்.
அதனால், ‘கடாவர்’ என்ற வார்த்தைக்கான விளக்கம் கூட பார்வையாளர்கள் மனதில் தங்காமல் உடனடியாக வெளியேறி விடுகிறது.
-உதய் பாடகலிங்கம்