ஒரு மனிதன் எவ்வளவு உழைத்தாலும் எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் தன் வாழ்க்கையில் தன் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும்.
ஒரு நாட்டிற்கு பிரதமராக இருந்தாலும் சரி மொத்த உலகிற்கே பிரதமராக ஆனாலும் சரி தனது குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒரு மனிதன் செய்து தான் ஆக வேண்டும்.
அதேபோல பிரபல நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுடன் பல ஆலோசனைகளுக்குப் பிறகு அவர் நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு அறிவிக்கவில்லை.
வெறும் நியூஸிலாந்தின் ஒப்பந்தத்தில் இருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆகையால் வரும் காலத்தில் நியூசிலாந்து அணிக்கு இவர் விளையாடுவது சந்தேகம் தான் இருப்பினும் டி20 லீக்குகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்ட் போல்ட் இதுவரை…
33 வயதான ட்ரெண்ட் போல்ட் இதுவரை 78 டெஸ்ட் ஆட்டங்களிலும், 93 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 44 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
இவர் எளிதாக 100 டெஸ்ட் ஆட்டங்களிலும், 100 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி சாதனை படைத்திருக்கலாம் ஆனால் அவர் தற்போது எடுத்துள்ள முடிவினால் இந்த சாதனைகள் சாத்தியமாகாது.
மேலும் அவர் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் நிச்சயமாக 400 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
கிரிக்கெட் போர்டு ஒப்பந்தத்தில் இருந்து விடுவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுடன் வீரர்கள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தற்பொழுது ட்ரெண்ட் போல்ட் ஓய்வு அறிவிக்காமல் வெறும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் ட்ரெண்ட் போல்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படாது.
நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுடன் பல கட்ட பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகு தான் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு ட்ரெண்ட் போல்டை விடுவிக்க சம்மதித்தது.
இதுகுறித்து ட்ரெண்ட் போல்ட் கூறுகையில், “என்னை ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க சம்மதித்த நியூசிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு நன்றி.
எனது தாய் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது என்னுடைய சிறுவயது கனவாக இருந்தது. நான் எனது நாட்டுக்காக விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்.
என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு வழங்கி உள்ளேன்.
என்னுடைய 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சக வீரர்களின் ஆதரவினால் பல சாதனைகளை முறியடித்தேன். என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு என் உடனிருந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்தார்.
மேலும், “எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
என்னுடைய குடும்பம் எனக்கு எப்பொழுதுமே ஒரு பெரிய உந்துதலாக இருந்துள்ளது.
12 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு தற்பொழுது என்னுடைய குடும்பத்திற்கு நான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
அதனால் தான் இந்த முடிவு.” என்று கூறினார்.
தொடர்ந்து ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார்…
ஐபிஎல் தொடரில் முதல் முதலாக டெல்லி அணிக்கு விளையாடிய ட்ரெண்ட் போல்ட் பிறகு மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். தற்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார்.
அவருடைய கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் முடிவு வெறும் சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அடுத்தடுத்து ஐபிஎல் தொடர்களில் அவர் விளையாடுவதை பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் அணியில் கூட அவருக்கு இனி வாய்ப்பே அளிக்கப்படாது என்று கூறுவதும் சரியல்ல. ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அவருக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படாது, அவ்வளவுதான்.
அவர் அணிக்கு தேவை என்று கருதப்பட்டால் அவர் மீண்டும் அழைக்கப்படலாம் அல்லது அவரே நான் நாட்டுக்காக விளையாடு தயாராக இருக்கிறேன் என்று அறிவித்தால் நியூசிலாந்து அணி அவரை மறுபடியும் சேர்த்துக் கொள்ளலாம்.
பல வருட காலம் கடுமையாக உழைத்து நாட்டுக்காக விளையாடிவிட்ட பிறகு முழுமையாக ஓய்வெடுப்பதை விட ட்ரெண்ட் போல்ட் எடுத்திருக்கும் முடிவு பல கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும்.
தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கும் ட்ரெண்ட் போல்ட் சிறிது காலம் கழித்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தான் கிரிக்கெட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு அளிக்கவில்லை என்பதுதான் ஒரே ஒரு ஆதரவான விஷயம்.
மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்புவாரா?
நியூசிலாந்து அணிக்காக சர்வதேச அளவில் அவர் தற்பொழுது விளையாடாமல் இருப்பதால் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் அவர் விளையாடும் பொழுது அவருடைய முழுமையான,
ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்க்கலாம் என்பதால் அவர் பந்துவீச்சு சந்திக்கும் பேட்ஸ்மேன்கள் மிக கவனமாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நிச்சயம் அவர் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகையில் அவருடைய ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் காணலாம்.
என்னவாக இருந்தாலும் சிறிது காலம் கழித்து அவர் நியூசிலாந்து அணிக்கு திரும்புவார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
– இளவரசன்