எளியோரை வலியோர் நசித்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று முறையிடும் இடமாக இருப்பது நீதிமன்றம். அங்கும் எளியோர்க்கு எளிதில் நீதி கிடைத்துவிடுகிறதா?
இந்த கேள்விக்குப் பதில்களை அள்ளித் தருகிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’ மலையாளத் திரைப்படம்.
உண்மையைச் சொன்னால், பெருமலையைத் தகர்க்கும் சிறு உளி போல கதை அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.
மாட்டிக்கொண்ட திருடன்!
ஒரு பெட்ரோல் பங்கில் திருடிவிட்டு வரும்போது, கொழுமல் ராஜீவனும் (குஞ்சாக்கோ போபன்) அவரது நண்பரும் போலீசாரிடம் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதிக்கின்றனர்.
அக்கரையிலுள்ள ஒரு வீட்டு வாசலில் படுத்துறங்குகின்றனர். அங்கு தமிழ்ப் பெண்ணான தேவியும் (காயத்ரி சங்கர்) அவரது தந்தையும் வசிக்கின்றனர்.
தேவியின் வீட்டில் நடைபெறும் கிணறு தோண்டும் பணியில் சேரும் ராஜீவன், மெல்ல தேவியின் மனதில் குடியேறுகிறார். இந்த காதல் தேவியின் வயிற்றில் ஒரு கருவை வளரச் செய்கிறது.
இந்த சூழலில், ஒருநாள் அருகிலிருக்கும் கோயில் திருவிழாவைப் பார்க்கச் செல்லும் ராஜீவன் எம்.எல்.ஏ. வீட்டில் திருட முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்படுகிறார். சுவர் ஓரமாக சிறுநீர் கழிக்கச் சென்றதாகவும், அப்போது தன் மீது ஒரு ஆட்டோ மோத வந்ததாலேயே எம்.எல்.ஏ. வீட்டில் எகிறிக் குதித்ததாகவும் சொல்கிறார் ராஜீவன். போலீசார் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறும்போது, அந்த சாலையில் ஒரு குழி இருந்ததாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் அதன் காரணமாக பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் கே.பி.பிரேமனை வழக்கில் சேர்க்க வேண்டுமெனவும் சொல்கிறார் ராஜீவன். அதற்கு மாநில அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும் என்கிறார் நீதிபதி.
இதையடுத்து, முதலமைச்சரிடம் தன் கோரிக்கையை முன்வைக்கிறார் ராஜீவன். அதனை அவர் ஏற்றுக்கொள்கிறார். இதனால், மாநில அரசியலில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
இத்தனை களேபரங்களுக்கும் நடுவே, தனக்கு குழந்தை பிறக்கும்போது கணவர் திருடன் இல்லை என்று அனைவரும் அறிய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார் தேவி. அதன்பிறகு என்னவானது? சம்பவ தினத்தன்று எம்.எல்.ஏ. வீட்டையொட்டிய சாலையில் நடந்தது என்ன? திருடன் எனும் பழியில் இருந்து ராஜீவன் தப்பித்தாரா என்று சொல்கிறது ‘ன்னா தான் கேஸ் கொடு’ திரைப்படத்தின் மறுபாதி.
முதலில் நகைச்சுவையாக நகரும் திரைக்கதை இறுதியில் மிக சீரியசான கட்டத்தை நோக்கிச் செல்வது ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த அம்சம்தான், ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் இயக்கியுள்ள ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தை இவ்வாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.
அபாரமான கூட்டுழைப்பு!
வழுக்கைத் தலையில் மெல்லப் படர்ந்த கேசம், வெயிலால் கருத்த சருமம், சற்று தளர்ந்த நடை என்று ஒரு நாற்பது வயது மனிதனை கண் முன்னே நிறுத்துகிறார் குஞ்சாக்கோ போபன். அவரது பின்பக்கத்தை நாய்கள் குதறிவிட, அந்த வலியோடும் வேதனையோடும் நீதிமன்றத்தில் அவர் பேசும் காட்சிகள் சிரிப்பை வரவழைப்பது அவரது திறம்பட்ட நடிப்புக்கான சான்று.
இதர கலைஞர்கள் மலையாளம் பேச, காயத்ரி மட்டும் தமிழில் பேசுகிறார். அவரது தந்தையாக வருபவர் கூட மலையாளத்தில் உரையாடுகிறார். மாமனிதன், விக்ரம் வரிசையில் இதுவும் காயத்ரிக்குப் பெயர் சொல்லும் ஒரு திரைப்படம்.
வெள்ளந்தியாக பேசுவது போலத் தோன்றினாலும், சாமான்யர்களுக்கு நீதி கிடையாதா என்ற தொனியிலமைந்த காயத்ரியின் வசனங்களே திரைக்கதை திருப்பங்களுக்கு காரணமாக இருப்பது அழகு.
ராஜீவனை கைது செய்யும் போலீசார், ஓய்வுக்குப் பின் வழக்கறிஞராகும் முன்னாள் போலீஸ்காரர், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ஆட்டோ ஓட்டுபவராக வரும் ராஜேஷ் மாதவன், அவரது காதலியாக நடித்தவர், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பிரேமனாக நடித்தவர்கள் உட்பட அனைவரும் பாத்திரங்களாக மட்டுமே தோன்றியிருப்பது சிறப்பு.
அதிலும் மாஜிஸ்திரேட்டாக வரும் குஞ்சிகிருஷ்ணனின் ஒவ்வொரு முகபாவனைக்கும் வசனத்திற்கும் தியேட்டரே அதிர்கிறது. இப்பட்த்தில் நடித்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள் என்பது இன்னொரு ஆச்சர்யம்.
குஞ்சாக்கோ போபனின் கூட்டாளியாக வருபவரை அம்போவென விட்டிருப்பது திரைக்கதையில் ஒரு திருஷ்டிப் பொட்டு.
ஜோதிஷ் சங்கரின் கலை வடிவமைப்பு, உண்மையிலேயே காசர்கோடு வட்டாரம் இப்படித்தான் இருக்குமோ என்ற எண்ணத்தை விதைக்கிறது.
ராகேஷ் ஹரிதாஸின் ஒளிப்பதிவு யதார்த்தமாக ஒரு நிகழ்வைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்த, அதற்கேற்றாற்போல கண்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தாமல் காட்சிகளை அடுக்கியிருக்கிறது மனோஜ் கன்னத்தின் படத்தொகுப்பு.
’ஆடலோடகம்’ பாடல் தென்றல் என்றால், ‘தேவதூதர் பாடி’ மெலிதாய் நமக்குள் துள்ளலை ஏற்படுத்துகிறது. தேவதூதர் பாடலில் குஞ்சாக்கோ போபன் ஆடும் ‘டான்ஸ்’ ஏற்கனவே சமூகவலைதளங்களில் வைரலாகிவிட்டதால் அக்காட்சி தரும் உற்சாகத்தைச் சொல்வதற்கில்லை.
போலவே பின்பாதியில் வரும் ‘டிஸ்கோ’ பாடலும் அருமை. இப்படியொரு படத்தில் திரைக்கதைக்கு தகுந்தாற்போல பின்னணி இசை அமைவது மிக முக்கியம். அதனைச் செவ்வனே செய்திருக்கிறார் இசையமைப்பாளர் டான் வின்சென்ட்.
தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக் கலைஞர்களை வழக்கத்திற்கு மாறாக வேலை வாங்கிய வகையில் பெருஞ்சவாலொன்றைத் திறம்படக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன்.
அற்புதமான ட்ரீட்மெண்ட்!
முதல் படமான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர் 5.25’லேயே அனைவரது கவனத்தையும் தன்னை நோக்கித் திருப்பியவர் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். அப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் இப்படியும் கூட காட்சிகளை நகர்த்தலாமா என்று ஆச்சர்யம் கூட்டியது. இதிலும் அப்படியே!
’ன்னா தான் கேஸ் கொடு’ படத்தின் கதை மெலிதானாலும், அதன் திரைக்கதை நூல் பிடித்தாற்போல அமைந்திருக்கிறது.
திலேஷ் போத்தனின் ‘தொண்டிமுதலும் த்ரிசாக்ஷியும்’, மணிகண்டனின் ‘ஆண்டவன் கட்டளை’ உட்பட பல படங்கள் இதே போன்றதொரு திரைமொழியைக் கொண்டவைதான். அவற்றைப் போலவே மிக மெலிதான நகைச்சுவை வசனங்களை, சூழல்களை கொண்டு இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ரதீஷ்.
ஆனால், தனிமனிதனொருவன் எதிர்கொள்ளும் ஒரு சிறிய பிரச்சனை, எவ்வாறு மிகப்பெரிய ஊழல் பூதத்தை வெளியே கொணர்கிறது என்று சொன்ன விதத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார்.
திரைக்கதையில் முக்கிய விஷயங்களை அடிக்கோடிடாமல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து சென்றிருப்பது அபாரமான விஷயம். நீதிமன்றத்தினுள் புறாக்கள் மீது பாதாம் பருப்பை விசி எறியும் நீதிபதி, ராஜீவனை காப்பாற்றுவதற்காக சாட்சி சொல்லும் காதல் ஜோடியின் ‘டிக்டாக்’ வீடியோ பார்த்து புறாவொன்றை வளர்ப்பதற்காக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் காட்சி ஒரு உதாரணம்.
பெட்ரோல் விலை 74 ரூபாயாக இருக்கும்போது தொடங்கும் திரைக்கதை, அதன் விலை 101 ரூபாயைத் தொடும்போது முடிவடைகிறது. ஒரு வழக்கில் நீதி கிடைப்பதற்கான அவகாசம் அதிகமாக இருப்பதாகவோ அல்லது சாமான்யர்களுக்கு எட்டாத உயரத்தில் பெட்ரோல் விலை எகிறுவதாகவோ இடைப்பட்ட காலம் காட்டப்படுகிறது.
இடையிடையே கேரளத்தில் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளின் அட்ராசிட்டி, மாஜிஸ்திரேட்டை விட உயர்ந்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், சிறு திருடர்கள் மீது பாயும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் பெருந்தலைகளை சிறிய அளவில் கூட தீண்டத் தயங்குவது உட்பட பல விஷயங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.
‘ன்னா தான் கேஸ் கொடு’ என்ற பேச்சு வழக்கைத் தூய தமிழில் ‘என்றால் நீ வழக்கு தொடு’ என்று கொள்ளலாம்.
’வலியோரைக் கண்டு பயப்படும் எளியோர்கள் வழக்கு தொடுக்க மாட்டார்கள் அல்லது தொடுத்தாலும் வெற்றி கிடைக்காது என்ற மிதப்பில் தானே குற்றம் செய்தவர்கள் தைரியமாக இருக்கின்றனர்’ என்ற வசனம் இப்படத்தில் வருகிறது. இவ்வரிகள் கேரளாவுக்கு மட்டுமல்ல எவ்விடத்திற்கும் பொருந்தும். அப்படிப் பார்த்தால், இதனை தமிழிலும் ‘ரீமேக்’ செய்தால் நன்றாகயிருக்கும்!
அடுத்தாண்டு தேசிய விருதுகள் கிடைக்குமா இல்லையா என்பதைப் பொறுத்து விரைவில் செய்திகளில் அடிபடும் வாய்ப்புகளையும் கணிசமாக கொண்டிருக்கிறது ’ன்னா தான் கேஸ் கொடு’!
– உதய் பாடகலிங்கம்