திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று சினிமா ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் சமீபத்தில் பேசியிருந்தார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குமரன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், “சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை, சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைதான் விடுக்கப்பட்டது” என்றும் வாதிடப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன்,
“மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மோதலை உருவாக்கும் விதமாக மதங்களை பற்றியும் பேசியுள்ளதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.