பஞ்சாயத்து தலைவர்கள் சந்திக்கும் சவால்கள்!

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’! 

தொடர்- 2

“இத்தனை ஆண்டுகள் பஞ்சாயத்து அரசாங்கம் நடந்தும், அதற்கான எந்தத் தாக்கத்தையும் இந்தப் பஞ்சாயத்தில் பார்க்க முடியவில்லை.

காரணம் தொடர்ந்து மக்களை மிரட்டி மேய்த்துக் கொண்டிருந்தார்களே தவிர மக்களுக்கு எந்த சேவையும் நடைபெறாத நிலைமைதான் இருந்தது.

அந்த இக்கட்டான சூழலில்தான், தன் செவிலியர் பணியைத் துறந்துவிட்டுத் தான் பணி செய்த நிறுவனத்தின் ஆதரவுடன் களத்தில் இறங்கித் தேர்தலைச் சந்திப்பதற்குத் தயாரானார்.

தன்னை எதிர்ப்பவர் என்பவர் ஒரு பினாமி, அவருக்கும் பின் ஒரு பெரும் சக்தி இயங்கி வரும் நிலையில் ஒரு பெரு நிறுவனத்தின் ஆதரவு இன்றி சவால்களைச் சந்திப்பது மிகச் சிரமமான ஒன்று.

தான் பணி செய்த நிறுவனம் மக்களுடன் இரண்டறக்கலந்து செயல்படுவதால் அந்த நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாயத்து அரசாங்கத்தைச் செயல்பட வைக்க முடிவெடுத்தார்.

பஞ்சாயத்து அரசாங்கம் என்பது மக்களுக்கானது, அது மக்களுக்குக் கடமைப்பட்டது, மக்களுடன் சேர்ந்து செயல்படுவது, மக்களுக்குக் கட்டுப்பட்டது, மக்களுக்கு அடிப்படை மாற்றத்தை கொண்டு வருவது. இவை அனைத்துக்கும் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்.

இந்த விழிப்புணர்வைப் பழங்குடி மக்களிடம் கொண்டுவருவது என்பது நெருப்பாற்றில் நீச்சலிடுவதுபோல் ஆகும். இந்த பஞ்சாயத்தில் 80% மக்கள் பழங்குடிகள்.

இவர்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுவார்களேயன்றி அரசாங்கத்தை தங்களுக்குப் பணி செய்ய வைக்கத் தெரியாது.

அது மட்டுமல்ல கடந்தகால பஞ்சாயத்தும் மக்களை அப்படி மிரட்டியே கையெழுத்து வாங்கி மக்களுக்குச் சேவை செய்யாமல் மக்களைச் சுரண்டும் அமைப்பாக இருந்த காரணத்தால் இந்தப் பணி என்பது எதிர் நீச்சல் போடும் பணியாகத்தான் இருந்தது.

“எங்கள் மக்களிடம் பணி செய்து காண்பிக்காமல் எந்த நம்பகத்தன்மையும் பஞ்சாயத்தின்மேல் மக்களுக்கு உருவாக்க முடியாது” “அதுதான் எங்களுக்குக் கிடைத்த புரிதல்” என்று ஒரு விளக்கத்தை தந்தார்.

பஞ்சாயத்தை அணுகி வந்த மக்கள்

அந்த அடிப்படையில்தான் பஞ்சாயத்து அலுவலகத்தைத் திறந்து, தூய்மைப்படுத்தி, வண்ணம் பூசி காலையிலிருந்து மாலைவரை செயல்பட வைத்து மக்களின் குறைகளைக் கேட்க ஆரம்பித்தார்.

அவர்களின் குறைகளை களைய ஆரம்பித்து மக்களிடம் இங்கு யாராவது நம் பிரச்சினைக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை மக்களுக்கு உருவாக்கி மக்களிடம் முதலில் பஞ்சாயத்தின் மேல் நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளார்.

“42 கிராமங்களைக் கொண்டது சிட்லிங். இந்த 42 கிராமங்களையும் சுற்றிவர 52 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

முதலில் ஊர்களைச் சுற்றி எல்லா கிராமங்களையும் ஒரு பருந்துப்பார்வையில் பார்த்து புரிந்து கொண்டு, மக்களின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்து களத்தில் இறங்கினோம்.

அப்பொழுது பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்குத் தேவைப்படுவதாக உணர்ந்த அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்று முடிவு செய்தோம். அந்த நிலையில் மக்களிடம் குறைகளை கேட்டு அவைகளைத் தீர்க்க முனைந்தோம்” என்றார்.

“தண்ணீர் இல்லாத இடத்திற்குத் தண்ணீர் தர முனைந்தோம், சாலை வசதியற்ற கிராமங்களுக்குச் சாலை உருவாக்கினோம்.

மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாவதைக் கவனித்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்பட்டது.

ஒரு ஒதுக்குக்குட்பட்ட மலைக் கிராமத்திற்கு 7 கி.மீ. சாலையும் மின் வசதியும், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தியது மக்களின் நம்பிக்கையைக் கூட்டியது.

75 ஆண்டில் நடைபெறாதது இன்று நடந்துவிட்டது. பஞ்சாயத்தை செயல்பட வைத்தது மட்டுமல்ல, மக்களையும் செயல்பட வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராம சபையைக் கூட்ட மக்களைத் திரட்டினோம், உங்கள் குறைகளைத் தெரிவிக்கக் கிராமசபைக்கு வாருங்கள் என்றழைத்து கிராமசபையில் பங்கேற்க வைத்து, அவர்கள் கொடுத்த கோரிக்கைக்கு விடைகாண முனைந்து விடியல் தேடினோம்.

அதன் விளைவு பஞ்சாயத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது. 100 நாள் வேலை எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

100 நாள் வேலையை முடுக்கி விட்டதன் விளைவு வெளியூர் பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் மீண்டும் கிராமம் நோக்கிப் படையெடுத்து வந்தனர். இது ஒரு இமாலயச் சாதனையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

“தேர்தல் முடிந்த நாளிலிருந்து அரசு நிர்வாகத்தைக் கட்டமைக்க முதலில் நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்துக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுதலும், பஞ்சாயத்தில் சேவைகளைத் துவக்கி மக்களிடம் செயல்படும் போது ஒவ்வொரு நிலையிலும் மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கிக் கொண்டே செயல்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை எதற்கும் பஞ்சாயது அலுவலகத்தை அணுகலாம் என்பது பிறந்தது.

இதுவரை பஞ்சாயத்துக்கு எவ்வளவு வரவு எவ்வளவு செலவு என்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையை மாற்றி வரவு செலவு என்பதை பொது வெளியில் நோட்டிஸ் மூலம் பரப்பியது மக்களைக் கவர்ந்தது.

அது மட்டுமல்ல எங்கெல்லாம் என்னென்ன பணிகள் பஞ்சாயத்தின் மூலம் நடந்து கொண்டுள்ளன என்பதை அச்சிட்டு வழங்கியபோது மக்களுக்கு ஓர் உற்சாகம் பிறந்தது” என்றார்.

“இந்தச் செயல்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை பெற்றது மட்டுமல்ல, நாங்கள் இதுவரை ஏமாற்றப் பட்டு விட்டோம் என்ற மன நிலையில் மக்கள் செயல்பட ஆரம்பித்தனர். மிகக்குறுகிய காலத்தில் பஞ்சாயத்து அமைத்துத் தந்த சாலைகளும், குடிதண்ணீரும் மக்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தன.

பஞ்சாயத்து நல்ல தலைவர்களின் கையிலிருந்தால் நம் அடிப்படைத் தேவைகளுக்காக அலைய வேண்டியது இல்லை என்ற உணர்வு வர வர, பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.”

பள்ளிக்கல்வியில் பங்கெடுத்த பஞ்சாயத்து

“இந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 12 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அதில் 1037 மாணவர்கள் படிக்கின்றனர். நம் ஊரில் பொதுப் பள்ளிகள் என்றாலே ஏழைகளுக்குத்தான். ஏழைகள் படிக்கின்ற பள்ளி என்றால் அதுவும் ஏழைகள் போல் வசதியற்றதாக, கவனிப்பாரற்றதாக இருக்கும்.

அந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உருவாக்குவது, அவைகளைப் பராமரிப்பது என்பது ஒரு மிக முக்கியமான பணி.

பஞ்சாயத்துகளுக்கு பிரதிநிதிகளாக வருகின்ற ஒவ்வொரு ஏழைக்கும் ஒரு பார்வை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டாலே பொது பள்ளிகள் சீரடையும். அங்கு ஏழைக் குழந்தைகள் நல்ல வசதிகளைப் பெற்று தரமான கல்வியை பெறுவர்.

அங்குக் குடிதண்ணீர், தூய்மை, கழிப்பறைகள், அவைகளுக்குத் தேவையான தண்ணீர், வகுப்பறைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க ஆரம்பித்தால் ஆசிரியர்களுக்கு ஓர் புதுப் பார்வை வந்துவிடும்.

அது மட்டுமல்ல, பள்ளி மேலாண்மைக் குழுவைச் செயல்பட வைத்து ஊர் மக்கள் அதில் பங்கேற்க ஆரம்பித்தால் மிகப் பெரிய மாற்றங்களைப் பள்ளிகள் மூலம் கிராமத்தில் வந்துவிடும்” என்றார்.

“நம் ஊர் குழந்தைகள் படிக்கின்றது என்ற உணர்வுடன் செயல்பட்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுக் கொடுத்துச் செயல்பட்டது அனைத்தும் ஒரு மூலதனமாகச் செயல்பட ஆரம்பித்தது.

மக்கள் நம்பிக்கையுடன் பஞ்சாயத்தை நோக்கி வருகின்றனர். என்னிடம் அதிகாரம் உள்ளதா இல்லையா என்று பார்க்காமல் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மக்களுடன் அரசு அலுவலகங்களுக்குள் சென்று செயல்பட்டது அடுத்த முக்கிய மைல் கல் நிகழ்வாகும்” என்று விவரித்தார்.

மக்களின் மனமாற்றம்!

“பள்ளி மேலாண்மைக் குழுவைச் செயல்பட வைத்தது, பள்ளி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டது அனைத்தும் மக்களின் கவனத்தைப் பஞ்சாயத்து மீது திருப்பியது.

பள்ளிகளில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்தது அனைத்தும் கொடையாளர்களை இந்தப் பஞ்சாயத்தின் பக்கம் திரும்ப வைத்தது.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் 40 லட்ச ரூபாய் பஞ்சாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கிடைத்தது என்பது ஒரு அங்கீகாரம் இந்தப் பஞ்சாயத்துக்கு.

இதுவரை பஞ்சாயத்து நிர்வாகத்தை தடம் புரளச் செய்த பஞ்சாயத்து எழுத்தரை மாற்றியது பெரும் செயல் என்று மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். பஞ்சாயத்து கிளார்க் என்பவர் முடிசூடா மன்னனாகவே செயல்பட்டு மக்களைச் சுரண்டி வாழ்ந்தார்.

அவரை மாற்றியதே பெரும் சாதனையாகப் பார்த்தனர். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள். இந்த ஆளுகைக்கான கட்டமைப்பை உருவாக்கப் பிடித்துள்ளன.

க.பழனித்துரை

18 மாற்றுத் திறனாளிகளுக்கும், 122 விதவைகளுக்கும் அரசுத் திட்டத்தில் என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் பெற்றுத் தந்தது பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது மக்கள் மத்தியில்.

பள்ளியில் அனைவரையும் சேர்த்தது மட்டுமல்லாது எவரையும் இடைநிறுத்தம் செய்யாது பார்த்துக் கொண்டது ஒரு பஞ்சாயத்துப் பணியில் ஒரு மைல்கல். இதற்கான பார்வை ஒவ்வொருவருக்கும் வேண்டும்” என்றார் பஞ்சாயத்து தலைவர்.

தொடரும்…

Comments (0)
Add Comment