மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அறிவியலும் தோன்றிவிட்டது. ஆனால் மனிதன் தோன்றும் முன்பே இயற்கை தோன்றிவிட்டது. மனித வாழ்க்கையில் இயற்கை முக்கியமா அறிவியல் முக்கியமா என்று பார்க்கும் பொழுது ஒரு சரியான விடை எப்போதும் கிடைப்பதில்லை.
மனிதன் தோன்றிய பொழுது இயற்கையின் பிடியிலேயே இருந்தான். அவன் வாழ்வாதாரம், உணவு, தங்கும் இடம் ஆகிய எல்லாம் இயற்கையின் சுழற்சி முறையை ஒத்திருந்தது. அறிவியல் வளர்ச்சி அடைய ஆரம்பித்த பிறகு இயற்கையின் பிடியில் இருந்த மனிதன் தப்ப ஆரம்பித்தான்.
அறிவியல் வளர்ச்சிக்கு முன்பு மனிதன் தன்னை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக காலநிலை மாற்றம், மற்ற உயிரினங்கள் மற்றும் அவனுடைய உணவு.
மனிதனின் அடிப்படைத் தேவைக்கு இயற்கை சான்று இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அறிவியல் வளர்ச்சிக்கு பின்பு மனிதனின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். இரண்டு கற்களை உரசி தீப்பொறி வந்த பொழுது மனிதனுக்கு வந்த ஆச்சரியம் தற்பொழுது உள்ள பல விஷயங்களில் அது இருப்பதில்லை.
முன்பு குளிர்காலம் வருவதற்கு முன்பே மனிதன் அதற்கு தயாராகி விடுவான், இப்பொழுது எல்லாம் வீட்டில் ஹீட்டருக்காக ஒரு ஸ்விட்ச் ஆன் செய்தால் போதும். அறிவியல் வளர்ச்சியை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை மிக சுலபமாக மாற்றியமைக்க ஆரம்பித்தது. ஆனால் அது எந்த அளவுக்கு சோம்பேறித்தனத்தை ஊக்கப்படுத்துகிறது என்பதுதான் இங்கு கேள்வி.
தற்பொழுது மனிதன் அறிவியலில் பல மடங்கு வளர்ச்சி அடைந்து விட்டதாக உணர்கிறான். ஆனால் இயற்கை சீரழிவதை பார்த்தும் அதற்காக ஏதும் செய்யாமல் அறிவியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறான்.
இயற்கை என்பது இயல்பாகும், அந்த இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளே அறிவியல் எனப்படுகிறது. இயற்கை சார்ந்த பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே உலகிற்கு உணர்த்துவது அறிவியல் என்று அழைக்கப்படுகிறது.
உண்மைகள் முழுமையாக தெரிய அதை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது மனித இயல்பு. அறிவியலின் உதவியால் தொழில்நுட்ப வளர்ச்சி அடைய மனிதனின் வாழ்க்கை முறையே முழுமையாக மாறிவிட்டது. மனிதனுக்கு எப்போதுமே உற்பத்தி திறன் மற்ற உயிரினங்களை விட அதிகம்.
இதை அறிந்ததும் மனிதன் தனக்கு தேவையான விஷயங்களை தானாகவே உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். இதன் மூலம் மனிதன் கூட்டுக் கூட்டாக வாழ ஆரம்பித்த போது தான் சமூகம் என்று ஒன்று உருவாகியது.
சமூகம் என்று ஒன்று உருவானால் சமூக அறிவியல் என்று ஒன்றும் உருவாகி தானே ஆக வேண்டும். சமூகமாக ஒன்றாக வாழ வேண்டும் என்ற சமூக அறிவியலை உருவாக்கிய அதே மனிதன் தான் சமூக அரசியலையும் உருவாக்கினான். அதனால்தான் இப்பொழுது அறிவியலை விட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
என்னதான் மனிதன் சமூகமாக வாழ்ந்தாலும் அதில் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருப்பதில்லை. அறிவியல் மூலம் பல தொழில்நுட்பங்கள் உருவானாலும் அது சமூகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் சென்றடைவதில்லை. குறிப்பாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்பொழுது கூட மின்சாரம் இல்லாத பல கிராமங்கள் உலகத்தில் உண்டு.
ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சி என்று மனிதன் ஓடிக்கொண்டிருக்க இன்னொரு புறம் சுற்றுச்சூழலை பாதுகாக்க சில மக்கள் போராடி வருகின்றனர்.
மனித முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை அழித்துவிட்டு, இயற்கை தரும் சேவைகளை செயற்கையாக உருவாக்கிக் கொள்ள மனிதன் போராடி வருகிறான். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு கூட அறிவியலை சார்ந்திருக்காமல், சமூகமாக இயற்கையை சார்ந்து இருந்தாலே அதற்கான தீர்வை சுலபமாக அடைய முடியும்.
இயற்கை என்பது எப்போதும் இலவசம். ஒரு விஷயம் இலவசமாக கொடுக்கப்பட்டாலே அதன் மதிப்பு மனிதனுக்கு தெரியாது, அது போல தான் இயற்கையும்.
இன்று மனிதன் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னேற்றம் அடைந்து விட்டதாக கருதுகிறான் ஆனால் அவன் உற்பத்தி திறன் மூலம் உருவாக்கிய அனைத்து விஷயங்களுமே இயற்கை மூலமாக இலவசமாக கிடைக்கிறது என்பதுதான் உண்மை.
அறிவியல் வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை சீரழிப்பதால் காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றம் என்று இயற்கை சீரழிந்து கொண்டே செல்கிறது.
இதனால் மனிதனுக்கும் பெரும் அளவில் பாதிப்பு உண்டு, இருப்பினும் அதிலிருந்து விடுபட அறிவியல் ஒன்று தான் தீர்வு என்று மனிதன் மட்டும் அறிவியலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்.
இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது. அதற்காக இயற்கையை முதன்மையாக்கி மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு வாழ வேண்டும் என்று அர்த்தமல்ல. அறிவியலில் முன்னேற்றம் அடைந்து கொண்டே இயற்கையோடு ஒத்து வாழ மனிதன் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அறிவியல் மூலம் அடையும் அனைத்து முன்னேற்றங்களும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதில்லை. இயற்கை ஒன்றுதான் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் அறிவியல் முன்னேற்றங்களில், இயற்கையோடு ஒத்து வாழ்வது குறித்து பல மாற்றங்கள் ஏற்படுத்தினால் இயற்கை சீரழிவு குறைந்து மனித வாழ்க்கை மேம்படும்.
– இளவரசன்