பிரதமர் பதவிக்கு காய் நகர்த்தும் நிதிஷ்குமார்!

பீகார் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், மீண்டும் 3 ஆம் முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என கனவில் மிதந்தார் மோடி. ஒரே நாளில் அந்த கனவை பொசுக்கி விட்டார் நிதிஷ்குமார்.

புதிய சாதனை

லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து இதுவரை 7 முறை பீகார் முதலமைச்சராக இருந்தவர் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்.

இப்போது 8 ஆம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார் 71 வயதான இந்த மூத்தத் தலைவர்.

2000-ம் ஆண்டு மார்ச் மாதம் நிதிஷ்குமார், முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

அதன்பின் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டுகள்:

2 ஆம் முறை – 24-11-2005
3 ஆம் முறை – 26-11-2010
4 ஆம் முறை – 22-02-2015
5 ஆம் முறை – 20-11-2015
6 ஆம் முறை – 27-07-2017
7 ஆம் முறை – 16-11-2020

நேற்று 8 ஆவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் நிதிஷ்குமார்.
இந்தியாவில் 8 – வது தடவையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரே அரசியல் தலைவர் இவர் தான்.

பிரதமர் நாற்காலிக்கு குறி

முதலமைச்சர் நாற்காலி நிதிஷுக்கு சலித்து விட்டது. இதனால் பிரதமர் பதவிக்கு குறி வைத்துள்ளார் அவர்.

காங்கிரசை தவிர்த்து, எதிர்க்கட்சியில் ஏற்கனவே பல பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரே அவர்கள்.

இப்போது புதிதாக களத்தில் குதித்து விட்டார் நிதிஷ்.

மம்தா, சந்திரசேகரராவ், அரவிந்த் கெஜ்ரிவாலை விட அனுபவஸ்தரான நிதிஷுக்குள்ள இன்னொரு சாதகமான அம்சம் – அவர் பிரதமரை தீர்மானிக்கும் இந்தி பெல்ட்காரர்.

நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரா? என்ற விவாதம் இப்போதே எழுந்து விட்டது.

பாட்னாவில் பேட்டி அளித்த ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவிடம் இது
குறித்து கேட்டபோது, ’’நிதிஷ்ஜி தான் இது பற்றி பதில் சொல்ல வேண்டும்’’ என நழுவி விட்டார்.

ஆனால், ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள், நிதிஷ் தான் பிரதமர் வேட்பாளர் என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பவர் உபேந்திர குஷ்வாகா.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நமது நிதிஷ்ஜிக்கு புதிய பொறுப்பு காத்திருக்கிறது- தேசம் அவரை எதிர்நோக்கி உள்ளது’’ என பதிவிட்டு, பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

‘’பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது ஓர் இனிய ஆரம்பம். – எதிர்க்கட்சிகளுக்கு அவரது விலகல் புதிய நம்பிக்கையை அளிக்கிறது’’ என கருத்து கூறியுள்ளார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்.

எதிர்க்கட்சிகள் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.

மோடி என்ன செய்யப்போகிறார்?

-பி.எம்.எம்.

Comments (0)
Add Comment