நமது சமூகம் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைய எல்லா முயற்சிகளையும் மாநில அரசுகளும், மத்திய அரசும் எடுத்து வருகின்றன.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் முதலீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் சமூக வளர்ச்சி கண்டிப்பாக தென்படும் என்பதில் சிறிது அளவு கூட சந்தேகமில்லை.
ஆனால், சமூகத்தின் ஒரு பகுதி வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கையில் மற்றொருபுறம் வீழ்ச்சியும் அடைந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போதும் நமது மாநில அரசு கேட்ட கேள்வி “நமக்கு வளர்ச்சி வேண்டாமா?” என்பதுதான்.
ஒரு அணுமின் நிலையம் அமைப்பதால் அதன் சுற்றுவட்டாரப் மக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தக்க பாதுகாப்பு அம்சங்களோடு அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனாலும் மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் போது அது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
தெளிவான விளக்கம் என்பது வெறும் அறிக்கையை வெளியிடுவது மட்டுமல்ல மக்களுக்கு சரிசமமாக இறங்கி அவர்களுக்கு புரியும் விதத்தில் விளக்கம் அளிப்பது தான்.
இந்த வளர்ச்சி என்பது முதன் முதலில் ஆரம்பித்தது இரண்டாம் உலகப் போர் முடிவில் தான். போரின் முடிவில் ஐரோப்பிய நாடுகளுக்கு கீழ் வசம் இருந்த மற்ற நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்க ஆரம்பித்தது.
அப்பொழுது புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சமூக வளர்ச்சி திட்டங்களை வகுக்க ஆரம்பித்தன. அங்குதான் பிரச்சினையே ஆரம்பமானது.
அந்த நாடுகளுக்கு வளர்ச்சியே தேவை இல்லை என்று கூறவில்லை ஆனால் ஒரு சமூகத்தின் தியாகம் தான் இன்னொரு சமூகத்தின் வளர்ச்சி என்பதுதான் இங்கு தவறாக உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கடந்த 1949ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஹென்றி ட்ருமன், புதிதாக விடுதலை அடைந்த நாடுகளை ‘வளர்ச்சியடையாத’ அல்லது ‘வளர்ச்சி குன்றிய நாடுகள்’ என்று அறிவித்தார். மேலும் அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்தார்.
இது உலக அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது, ஆனால் இங்கு கவனிக்கப்படாதது என்னவென்றால் இந்த நாடுகளுக்கு அமெரிக்கா உதவுகிறது என்ற பெயரில் முதலாளித்துவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது என்பதுதான் உண்மை.
என்னதான் வளர்ச்சி அடையாத அல்லது வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா பெரும் அளவு உதவி செய்தாலும், இந்த நாடுகளின் வளர்ச்சி அமெரிக்காவின் வளர்ச்சியை சார்ந்தே இருந்தது.
இதில் அமெரிக்காவை மட்டுமே குறை கூற முடியாது, அவர்களுடன் சேர்ந்து கொண்டு மற்ற மேற்கத்திய நாடுகளும் இந்த சந்தர்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டன.
இது காலப்போக்கில் அந்தந்த நாடுகளில் முதலாளித்துவத்தை பிரபலப்படுத்தியது. எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒரு பகுதி மக்கள் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது.
இது போன்ற சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அந்தந்த நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் கொடுத்த தியாகம் ஒப்பிட முடியாத ஒன்று.
கூடங்குளம் அணுவுலையின் மூலம் இந்தியாவே மின்சாரம் பெற அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்ய மாட்டார்களா என்று கேட்கப்பட்டது. ஆனால் சென்னையின் வளர்ச்சிக்கு எண்ணூரும், மணலியும் தியாகம் செய்யப்பட்டது என்பது குறித்து யாரும் பேசுவதில்லை.
அதேபோன்று சமீபத்தில் சிங்காரச் சென்னை 2.0 வளர்ச்சி திட்டத்திற்கு ஆர்.ஏ.புரத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் தியாகம் தேவைப்படுகிறது.
இங்கு ஒரு மனிதராக நாம் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏன் இந்த தியாகங்களை அடையாறு அல்லது மயிலாப்பூர் போன்ற இடங்களில் உள்ள மக்கள் செய்வதில்லை என்பதுதான்.
வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட ஆரம்பித்தாலே அவர்கள் சமூக வளர்ச்சிக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதே நமது மனப்பான்மையாக உள்ளது.
வளர்ச்சியை மட்டுமே நாம் சுவைப்பதால் முதலாளித்துவத்தின் தந்திரத்தை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
சமூக வளர்ச்சிக்காக நம்மிடம் வந்து நாம் தங்கும் இடத்தை தியாகம் செய்யுமாறு யாராவது கேட்டால் அதை உடனே தாரை வார்த்து கொடுத்து விட மாட்டோம் என்பதே உண்மை, ஆனால் இதுவே ஒடுக்கப்பட்ட மக்கள் செய்தால் அதைத் தவறு என்கிறோம்.
இந்த சமூகத்தில் முதலாளித்துவத்தை எதிர்க்க மிக எளிமையான மக்களால் மட்டுமே முடிகிறது.
ஆனால் அவர்களால் வெறும் குரல் கொடுத்து மடிய முடிகிறதே தவிர இந்த போராட்டத்தில் வெற்றி காண முடியவில்லை.
இதற்கு ஒரே காரணம் சமூகம் என்று சொல்லிக் கொண்டு அனைவரும் தனித்தனி வாழ்க்கையை வாழ்வதுதான்!
– இளவரசன்