இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரமாக பதிவாகி வருகிறது.
எனினும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் படியும் ஒன்றிய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கிற பண்டிகை காலங்களில் பெருமளவில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட தொற்று நோய்களின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பருவகாலம் என்பதால் தொற்று ஏற்படுவதற்கான மற்றும் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், உணவு மற்றும் நீர் சார்ந்த தொற்றுகள் மற்றும் சுவாசப் பகுதியில் தொற்றுகள் ஏற்படுவது ஆகியவற்றுக்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கும் என்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும்.
பண்டிகைகளை வீட்டில் குடும்பத்துடனேயே கொண்டாட அறிவுறுத்த வேண்டும்.
தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களும் போதிய பரிசோதனைகளை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.