எந்தவொரு நடிகருக்கும் ரசிகனின் மனதில் மிக எளிதாக இடம் கிடைத்துவிடாது. மீறி இடம்பிடித்துவிட்டால், குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பலவீனங்களைக் கூட பலமாகக் கருதும் போக்கு பெருகும்.
சில நேரங்களில் அப்படிப்பட்ட ரசிகர்களே மனம் வருத்தப்படும் நிலைமையும் கூட வரும். அந்த நட்சத்திரங்கள் முதுமையால் உடல் தளர்ந்து பொலிவை இழந்து திரையில் தோன்றுவது அவற்றில் ஒன்று.
முதுமையைத் தொட்டபிறகு, எப்படிப்பட்ட வேடங்களை ஏற்கின்றனர் என்பதை வைத்து சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களை ரசிகர்கள் கொண்டாடுவதும் தொடரும்.
சமகாலத்தில் அமிதாப் பச்சன் தொடங்கி ரஜினி, கமல் வரை பல உதாரணங்கள் உண்டு. மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சுரேஷ்கோபியும் அதிலொருவர். அவர் நடித்த ‘பாப்பன்’ தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அவர் திரையில் தோன்றும் நேர அளவும், காட்சிகளில் வெளிப்படும் நாயகத் தன்மையும், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெற்றி பெற்ற அவரது படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறது.
அந்த காரணத்தாலேயே, சுரேஷ் கோபியின் ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் திருப்தியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது ‘பாப்பன்’.
இன்னொரு விஜயகாந்த்!
சட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்கிற விஜயகாந்தின் படங்கள் எண்பதுகளில் தமிழ் திரையுலகில் கோலோச்சி வந்தன. கிட்டத்தட்ட தொண்ணூறுகளில் மலையாளத் திரைப்படங்களில் அந்த ட்ரெண்டை தனதாக்கிக் கொண்டவர் சுரேஷ் கோபி.
1996வாக்கில் அவரது ‘சிட்டி’ திரைப்படம் தமிழில் டப்பிங் ஆகி திருநெல்வேலி பூர்ணகலா தியேட்டரில் வெளியாகியிருந்தது.
’சூரசம்ஹாரம்’ டைப் கதைதான் என்றாலும், அதன் திரைக்கதையில் காரசாரம் அதிகம்.
குறிப்பாக, கிளைமேக்ஸில் இரண்டு வில்லன் கும்பலையும் மோதவிட்டு நாயகனான சுரேஷ் கோபி வேடிக்கை பார்ப்பார் என்பது இப்போதும் நினைவிலிருக்கிறது.
1998இல் மலையாளத்தில் வெளியான ‘பத்ரம்’ சில மாத இடைவெளியில் தமிழிலும் ரிலீஸானது. அப்படத்தில் கேரளாவிலுள்ள இரண்டு பெரிய தினசரி பத்திரிகை குழுமங்களிடையேயான மோதல் திரைக்கதையில் சொல்லப்பட்டிருக்கும்.
பின்னாளில் அந்த காரணத்திற்காகவே அப்படத்தை மலையாள மனோரமாவும் மாத்ருபூமியும் புறக்கணித்தன என்பதை அறிந்தேன்.
மஞ்சு வாரியர் மட்டுமல்ல, மலையாளத் திரையுலகில் மிக வித்தியாசமான படங்களைத் தருகிற பிஜு மேனனும் கூட எனக்கு அறிமுகமானது அப்படத்தில்தான்.
இவை தவிர கமிஷனர், ஏலம், எப்.ஐ.ஆர் என்று சுரேஷ் கோபியின் பல படங்கள் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் வெற்றியைச் சுவைத்திருக்கின்றன.
பெரும்பாலும் இவற்றில் போலீஸ் ஆகவோ அல்லது கேங்க்ஸ்டர் ஆகவோ நடித்திருப்பார் என்பது இன்னொரு சிறப்பு.
இப்படிப்பட்ட சுரேஷ் கோபி சம்மர் இன் பெத்லகேம், களியாட்டம், தென்காசிப் பட்டணம் என்று முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களில் நடித்திருந்தாலும், கேமிரா நோக்கி பக்கம் பக்கமாக வசனம் பேசும் படங்களே இன்றும் அவரது அடையாளமாகத் திகழ்கின்றன.
ஐ.வி.சசி, ஷாஜி கைலாஷ், ஜோஷி, ஜெயராஜ், கே.மது மற்றும் ரெஞ்சி பணிக்கர் என்று குறிப்பிட்ட இயக்குனர்களுடன் கைகோர்த்து பல வெற்றிகளைத் தந்திருக்கிறார்.
2010க்கு பின்னர் மம்முட்டியும் மோகன்லாலும் ஆண்டுக்கு ஐந்தாறு படங்கள் என்று வழக்கமான தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்தாலும், முதலில் திலீப் அதன்பின்னர் பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன் என்று அடுத்தடுத்த புதுவரவுகளால் சுரேஷ் கோபியின் படங்களுக்குப் பெரிதாக வரவேற்பு கிட்டவில்லை.
பழைய பாணியில் வசனங்களிலும் ஆக்ஷனிலும் அவர் காட்டிய அதிரடி எடுபடவில்லை. இடைப்பட்ட காலத்தில் பாஜகவில் சேர்ந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆகிவிட்டார்.
இந்த சூழலில்தான், தற்போது ஜோஷியின் இயக்கத்தில் மீண்டும் ‘பாப்பன்’ படத்தில் தோன்றியிருக்கிறார் சுரேஷ் கோபி.
சிறிய வித்தியாசம்!
கனத்த குரலில் சுரேஷ் கோபி பேசும் வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவை.
அவற்றில் சில ஆங்கில ‘ஒன்லைனர்’களாகவும் இருக்கும். ஆர்ஜே ஷான் கதை திரைக்கதை வசனத்தில் ‘பாப்பன்’ படத்திலும் அத்தகைய அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவர் ஆக்ஷனில் அதகளப்படுத்தவில்லை.
தொடர் கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணையாகவே ‘பாப்பன்’ திரைக்கதை விரிகிறது.
யார் அதைச் செய்தது, என்ன காரணம், இந்த வழக்கில் சுரேஷ் கோபியின் பாத்திரம் எந்த வகையில் சம்பந்தப்படுகிறது என்பதை வைத்து திருப்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
‘விக்ரம்’ பாணியில் இதிலும் சுரேஷ் கோபி இல்லாத இடங்களில் இதர பாத்திரங்கள் அவரது பாத்திரத்தின் புகழ் பாடுகின்றன.
விறுவிறுப்பான த்ரில்லருக்கே உரித்தான வகையில் காட்சிகள் தொடர்ச்சியாக அடுக்கப்படாமல், இதர பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் வெளிப்படும் வகையில் அவை அமைந்திருக்கின்றன.
இந்த வித்தியாசம்தான் சுமார் மூன்று மணி நேரம் ஓடும் படத்தை வெற்றியடையச் செய்து, மீண்டும் சுரேஷ் கோபியைக் கொண்டாட வைத்திருக்கிறது.
பெருந்தலைகளின் கவனத்திற்கு..!
வயதாகும்போது கன்னத்திலும் கழுத்திலும் சதைகள் மேலிடுவதும் உடலும் முகமும் பொலிவிழப்பதும் நடையில் தளர்ச்சி தென்படுவதும் நடிப்பில் பழைய தெம்பு மங்கிப் போவதும் இயல்பு.
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டில் இப்பிரச்சனைகளையே தனக்குச் சாதகமாக்கித் திரையில் இன்றும் நட்சத்திரமாக ஜொலிப்பவர் கிளிண்ட் ஈஸ்ட்வுட். பிக் பியும் அவ்வரிசையில் இடம்பெறுபவர்தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்ந்தவர்கள் சிலர் குணசித்திர நடிகர்களாகவும் வில்லன்களாகவும் மாறியிருக்கின்றனர்.
வெகுசிலர் மெதுவாக ஓய்வு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றனர். அரிதாகச் சில பெருந்தலைகள் மட்டுமே இன்றும் புகழ் வெளிச்சத்தில் வாழ்கின்றனர்.
ஆனால், தொடர்ச்சியாகப் படங்களில் நடிக்க வேண்டுமானால் தங்களது பழைய பாணியை கைவிட்டு வயதுக்கேற்ப, இன்றைய தலைமுறையின் எதிர்பார்ப்பிற்கேற்ப கதைகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
நடிகர்களுக்கு மட்டுமல்ல, இயக்குனர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் கூட இது பொருந்தும்.
அதனாலேயே, ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்ற மொக்க அனுபவத்தைத் தந்த பின்னும் (எனக்கு..) ஜோஷியின் இயக்கத்தில் ‘பாப்பன்’ திருப்தியைத் தரும்விதமாக உள்ளது.
நீதா பிள்ளை, கோகுல் சுரேஷ், விஜயராகவன், ஆஷா சரத், ஷம்மி திலகன் என்று பலரும் சுரேஷ் கோபிக்கு இணையாகத் திரையில் மின்னுகின்றனர். கனிகா மற்றும் அஜ்மலின் இருப்பு மட்டுமே மிகச்சிறிய அளவில் உள்ளது மட்டுமே குறை.
அஜய் கச்சபள்ளியின் ஒளிப்பதிவும் ஷ்யாம் சசிதரனின் படத்தொகுப்பும் ஜோஷியின் பழைய படங்களை நினைவூட்டுகின்றன. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மிரட்டல் ரகம்.
ஆர்ஜே ஷான் எழுத்தாக்கத்தை நம்பியே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் மெதுவாக நகர்ந்தாலும், குற்ற விசாரணையின் முடிவுப்புள்ளியை நோக்கியே திரைக்கதை பயணித்திருப்பது சிறப்பு.
ஒருகாலத்தில் நம் மனதுக்குப் பிடித்தமான படத்தைத் தந்த இயக்குனர் – நடிகர் காம்போ பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும்போது அதே மாயஜாலம் நிச்சயம் நிகழாது.
ஆனால், முற்றிலும் புதிய அனுபவமாக அது அமைந்தாலே பெருவெற்றிதான்.
ஜோஷி – சுரேஷ் கோபியின் ‘பாப்பன்’ பெற்றிருக்கும் வெற்றியானது தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளிலும் சீனியர்களாக திகழும் நட்சத்திரங்களை மீண்டும் ஆராதிக்க வழி வகுத்திருக்கிறது.
இதே போன்று தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி காம்போ மீண்டும் கைகோர்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆசை அவற்றில் ஒன்று. அது நிகழுமா?
-உதய் பாடகலிங்கம்