முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்து
தோனி… தோனி… என்னும் ரசிகர்களின் அதிரடி ஆரவாரத்தை கேட்காதவர்கள் அதிகம் பெயர் இருக்க முடியாது. கால்பந்து வீரராக ஆக வேண்டும் என்று நினைத்து கிரிக்கெட் உலகத்தையே ஆண்ட தலைசிறந்த வீரர் மகேந்திர சிங் தோனி.
இந்திய அணி தோற்கும் நிலைமையில் இருந்தாலும் சரி ஜெயிக்கும் நிலைமையில் இருந்தாலும் சரி தோனி களத்துக்குள் வந்தால் ரசிகர்களின் கூட்டம் கொண்டாடத் தொடங்கி விடும்.
மிகச் சிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி
இந்தியாவின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த கேப்டனாக பணியாற்றியவர் மகேந்திர சிங் தோனி.
கடந்த 2004 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் முதலாக களம் இறங்கினார்.
தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே ரன் ஏதும் குவிக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் தொடர்ந்து அவருக்கு பாகிஸ்தான் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே 148 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும், அவர் 148 ரன்கள் குவித்த போது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.
மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து நான்கு ஆண்டுகளிலேயே இந்திய சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன் பிறகு 2007 ஆம் ஆண்டில் முதல் டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டில் சர்வதேச உலக கோப்பை போன்ற பல கோப்பைகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
கிரிக்கெட் என்றால் சச்சின் தான் என்ற வழக்கம் போய் கிரிக்கெட் உலகமே தோனியை கொண்டாட ஆரம்பித்தது.
ஒரு நாள் போட்டியாக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி கேப்டனாக இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனியின் பங்கு அபாரமானது.
தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து கிரிக்கெட் உலகத்தில் பேசாத ஆளே இருக்க முடியாது. உலகத்தின் மிக வேகமான விக்கெட் கீப்பர் என்ற பெயரையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அவர் பெற்றார்.
தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தால் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேன் மிக கவனமாக விளையாட வேண்டிய நிலை ஏற்படும்.
ஏனெனில் அந்த பேட்ஸ்மேன் ஒரு சிறிய தவறு செய்தாலும் கூட தோனியிடம் தனது விக்கெட்டை பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
சர்வதேச போட்டிகளில் கலக்கியது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி சிறப்பான கேப்டனாக செயல்பட்டார்.
இதுவரை நான்கு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டங்களையும், இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி வென்றுள்ளார்.
தோனி ஒரு பெரிய ஆள் இல்லை
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனியை, விக்கெட் கீப்பராக அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, வெறும் பெயர்தான்.
விக்கெட் கீப்பராக நிறைய கேட்ச்களை அவர் விட்டிருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லடீஃப் கூறுகையில்,
“தோனி என்பது மிகப்பெரிய பெயர்தான். ஆனால், கிரிக்கெட்டின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது தான் அவர் எந்த அளவுக்கு சிறந்த விக்கெட் கீப்பர் என்பது தெரியும்.
கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்த மகேந்திர சிங் தோனி உலகிலேயே அதிக முறை கேட்சை விட்ட விக்கெட் கீப்பர் ஆவார். தோனி கேட்ச் விட்ட விகிதம் உலகிலேயே மிக அதிகமாக 21 சதவீதமாக ஆக உள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், “ஒப்பிடுவதற்கு என்னுடைய புள்ளிவிவரங்களை உபயோகிக்க முடியாது. ஏனெனில் இந்த குறிப்பிட்ட ரெக்கார்டுகள் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து தான் கணக்கிடப்பட்டு வருகின்றன.
நான் அதற்கு முன்பே எனது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி முடித்து விட்டேன். கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது குவிண்டன் டி காக் தான்.
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக தனது விக்கெட் கீப்பிங்கை வெளிப்படுத்தினர். மேலும் பேட்டிங்கிலும் தான் சிறந்த வீரர் என்பதை நிரூபித்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
தோனியின் கேட்ச் டிராப் விகிதம்
என்னதான் ரஷீத் லடீஃப் கூறிய கருத்து தோனி ரசிகர்களை சற்று கோபமடைய செய்தாலும், அவர் கூறிய புள்ளி விவரங்களை யாராலும் தவிர்க்க முடியாது.
கடந்த 15 ஆண்டுகளாக மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக 21 சதவீதம் அளவுக்கு கேட்சுகளை நழுவ விட்டிருக்கிறார். இதை சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் 21 சதவீதம் என்பது மிக அதிகம்தான்.
முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிரிஸ்டின் கேட்ச் டிராப் விகிதம் வெறும் 11 சதவீதம் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரும் சர்வதேச அளவில் விக்கெட் கீப்பராக சிறந்த புள்ளி விவரங்களை வைத்துள்ளார்.
இதன்படி பார்த்தால் மகேந்திர சிங் தோனியை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று சொல்ல முடியாது தான். ஆனால், தோனியை எல்லோரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது அவர் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதற்காக மட்டுமல்ல, சர்வதேச அளவில் அவர் ஒரு சிறந்த கேப்டன்.
ஒரு அணியை சரியான பாதையில் வழிநடத்துவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீரரும் களத்தில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய எல்லா யுக்திகளையும் கையாளும் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி.
சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கையில் யார் வேண்டுமானாலும் சிறந்த கிரிக்கெட் வீரராகவோ அல்லது சிறந்த கேப்டனாகவோ அல்லது சிறந்த விக்கெட் கீப்பராகவோ இருக்கலாம்.
ஆனால், மகேந்திர சிங் தோனியை போல கிரிக்கெட் ரசிகர்களின் மனதை ஆக்கிரமிப்பதற்கு இன்னொரு வீரர் பிறந்த தான் வர வேண்டும்.
– இளவரசன்