‘விழாவில் அளவென்பது கிடையாது. அது எவ்வளவு சிறப்பாக நடந்தது, எவ்வளவு மகிழ்ச்சியை தந்தது என்பதே முக்கியம்’ என்று ஒரு நாவல் வெளியீடு பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சரசுராம்.
கனவின் விதையொன்று முளைத்த நாளில் வரும் திருப்தியை எந்த நாளும் தருவதில்லை. மற்றும் நண்பரின் மகிழ்வென்பது அவருக்கானது மட்டுமல்ல. அது எனக்கானதும்தான்!
‘எல் நினோ’ – என் நண்பர் எழுதிய நாவல்! ஜோசப் செல்வராஜ் எழுத்தும் சரி சினிமாவும் சரி இரண்டுமே அவரிடம் மிக சரியாகவே இருக்கும்.!
அந்தத் திறமையும் அதற்கான தேடலிலும் அதற்கான அவரின் உழைப்பின் போதும் வெளிப்படும் வியர்வைக்குத்தான் வெறுத்துவிடும்.
அவர் சற்றும் அயர்ந்து நான் பார்த்ததில்லை. அந்தத் தேடலின் ஒன்றுதான் இந்த நாவல்! சென்னையின் ஒரு பெரும் மழைக்காலம் இதன் களமாக இருக்கிறது.
அதன் பின்னணியில் இயங்கும் மூன்று மனங்களின் அதீத காமம் நாவலாய் விரிந்திருக்கிறது.
அவரே சொல்கிறார் : ‘காமம் ஒரு பாவம். காமம் ஒரு நோய். காமம் ஒரு பேய். காமம் ஒரு கடவுள், இப்படி என்னவாக சொல்லிக் கொண்டாலும் காமம் தானே எல்லாம்’ எதையும் மறைப்பதனாலேயே அது இல்லை என்றாகிவிடாதுதானே! சொல்லக்கூடாது என்று எதுவுமில்லை.சரசுராம்
எதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் அது கலையாகவும் மாறுகிறது. அதை இந்த நாவலில் உணரலாம். இயக்குநர் சற்குணம் அலுவலகத்திலேயே வெளியீடு நடந்தது.
அவர் வெளியிட நானும் நண்பர் பொன்.சுதா அவர்களும் பெற்றுக்கொள்ள ஜோசப் செல்வராஜின் மகிழ்விலும் மற்றும் சில நண்பர்களின் பாராட்டிலும் விழா இனிதே நடந்தது.
எனக்கும் இது மிக மகிழ்ச்சியான நாள். போர்த்திய பொன்னாடை தந்த பெருமிதம் நிச்சயம் அவரது தேடலின் வேகத்தை இன்றே அதிகப்படுத்தியிருக்கும். அவரது மனத்தோட்டத்தில் பல விதைகள் விழுந்திருக்கும்.
விரைவில் இன்னும் பல பூக்களோடு வந்து நிற்பார். அதுதான் ஜோ! என் நண்பர் ஜோ! விரைவில் திரைத்துறையில் ஒரு நல்ல இயக்குனராகவும் வரப் போகிற அவருக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்” என்று எழுதியிருக்கிறார் சரசுராம்.