வைரலான டி.எஸ்.பி.யின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’

‘ஹர் கர் திரங்கா’ என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவிவருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடியுள்ளனர்.

பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இப்பாடலைத் தயாரித்துள்ளது.

இது பற்றிப் பேசிய டிஎஸ்பி, “இந்த வாய்ப்பை பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் நான் உணர்கிறேன்.

என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றி. என் இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும்” என்றார்.

“உலகெங்கிலும் நடைபெறும் என் அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய இந்தியக் கொடியுடன் மேடையில் தோன்றி தேசபக்திப் பாடல் ஒன்றை பாடுவேன்.

நம் தேசத்தின் மீது என் அன்பை வெளிப்படுத்தும் மிகப்பெரிய வாய்ப்பு இப்போது எனக்குக் கிடைத்துள்ளது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லா வயதினரையும், குறிப்பாக இளைஞர்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ள தேசபக்தி ததும்பும் பாடலின் மூலம், தான் உண்மையிலேயே ஒரு இசை மேஸ்ட்ரோ என்பதை டிஎஸ்பி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்பட ஆல்பத்தில் நாம் பார்த்ததுபோல் தனது பாடல்களால் பார்வையாளர்களை கவர்வதில் தனித்திறமை கொண்டவராக டிஎஸ்பி திகழ்கிறார்.

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment