சச்சினால் முறியடிக்க முடியாத 3 சாதனைகள்!

சச்சின் டெண்டுல்கர் என்னும் கிரிக்கெட் சகாப்தத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1989 ஆம் ஆண்டில், 16 வயதில் இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடத் தொடங்கியவர்.

தனது 24 வருட கிரிக்கெட் பயணத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்தவர்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர். இவருடைய ஸ்ட்ரெயிட் டிரைவுக்கு கிரிக்கெட்டில் பல ரசிகர்கள் உண்டு.

இவர் களமிறங்குகிறார் என்று தெரிந்தாலே போதும் கூட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ‘சச்சின்… சச்சின்’ என்று கோஷமிட்டு, ஸ்டேடியம் அதிர ரசிகர்கள் இவரை வரவேற்பார்கள்.

664 ஆட்டங்கள் விளையாடி 34,000க்கும் மேல் ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

அவர் ஓய்வு அறிவித்த போது இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உட்பட அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இதற்கு அவர் வெளிப்படுத்திய சிறப்பான கிரிக்கெட் ஆட்டமே காரணம்.

சச்சின் டெண்டுல்கரை போல இன்னொரு கிரிக்கெட் வீரர் உருவாகவே முடியாது என்பதுதான் அவருடைய ரசிகர்களின் கருத்து. ஏனெனில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாத சிலர் கூட சச்சின் டெண்டுல்கர் என்று கூறினால் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தெரியும்.

ஒருமுறை ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருக்கும் போது, சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுகையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட சுமார் 40 சதவீதம் பணிகள் முடங்குகிறது என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முச்சதம் அடிக்க முடியாத சச்சின்

இவ்வளவு சாதனைகள் படைத்து பல சாதனைகளை முறியடித்த சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்க முடியாத மூன்று சாதனைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

முதலில் சர்வதேச கிரிக்கெட் அளவில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரால் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு முறை கூட முச்சதத்தை அடிக்க முடியவில்லை.

சதமடித்து எதிரணிகளை வேட்டையாடும் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முச்சதம் அடிக்காதது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் குவித்த சச்சின் அதிகபட்சமாக 248 ரன்கள்தான் குவித்துள்ளார்.

டெண்டுல்கரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மட்டையாளர்களின் முதல் ஐந்து அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவர் மட்டுமே டெஸ்டில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சேவாக் இரண்டு முறை முச்சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினை முந்திய ராகுல் டிராவிட்

இரண்டாவதாக சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்க முடியாத சாதனை சற்று அதிர்ச்சி தரும் விதமாக தான் இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை விளையாடிய வீரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் இருக்கிறார்.

சச்சினின் சக வீரரும் அவரது நெருங்கிய தோழருமான ராகுல் டிராவிட் தனது 164 போட்டிகள் கொண்ட டெஸ்ட் வாழ்க்கையில் 31,258 பந்துகளை எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

உலக கோப்பையில் படைக்க முடியாத சாதனை

தனது 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் இதுவரை ஆறு உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக 2278 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் தான் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் அவர்.

உலகக் கோப்பை தொடர்களில் அதிக 50 களும் சதங்களும் அடித்த வீரரும் சச்சின் டெண்டுல்கர் தான். ஆனால் உலக கோப்பை தொடர்களில் அதிக போட்டிகள் விளையாடிய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

ரிக்கி பாண்டிங் இதுவரை உலக கோப்பை தொடர்களில் 46 ஆட்டங்களில் விளையாடி உலக கோப்பையில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ரிக்கி பாண்டிங் சச்சின் டெண்டுல்கரை விட வெறும் ஒரு ஆட்டம் அதிகமாக விளையாடிய ஒரே காரணத்தினால் சச்சினால் இந்த சாதனையை படைக்க முடியவில்லை.

என்னதான் உலகக்கோப்பை தொடர்களிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைக்க முடியவில்லை என்றாலும், அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனைகள் சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளன.

மற்ற வீரர்களை விட கம்மி ஆட்டங்களில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் யாரும் எட்ட முடியாத அளவிற்கு ரன்களை குவித்தது தான் அவருடைய சிறப்பு.

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க ஒரே தகுந்த வீரர் விராட் கோலி தான் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக தனது ஃபார்மை இழந்து மிக மோசமாக விளையாடி வருகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க இன்னொரு கிரிக்கெட் சகாப்தம் உருவாகி தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் கிரிக்கெட் என்னும் விளையாட்டு இன்னும் பெரிதாக வளரும்.

– இளவரசன்

Comments (0)
Add Comment