காங்கிரஸ் போராட்டம்: பிரியங்கா, ராகுல் கைது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்டவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து 3 வாரங்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுகின்றன.

இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

இதையடுத்து பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட எம்.பி.,க்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து ராகுல் தலைமையில் சில எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற ராகுல், சசி தரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.,க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது பேசிய ராகுல்காந்தி, “அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையை எழுப்புவதற்காக, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றோம்.

ஆனால் எங்களை இங்கிருந்து முன்னேற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். மக்களின் பிரச்னைகளை எழுப்புவதே எங்கள் வேலை, சில எம்.பி.,க்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டனர்” என்றார்.

காங்கிரஸ் போராட்டம் தொடர்பாக விளக்கமளித்த அக்கட்சி எம்.பி., ப.சிதம்பரம், “விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போராட்டம் இது. விலைவாசி உயர்வு அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அரசியல் கட்சிகள் என்ற ரீதியிலும், மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியிலும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். அதை தான் செய்து வருகிறோம்” என்றார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக செல்லக் கிளம்பினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Comments (0)
Add Comment