நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் ‘வேலைக்காரி’. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் ‘நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி’.

இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். பெற்றோர்: ராமபத்ர செட்டியார் குப்பம்மாள்.

சிறு வயதிலேயே படிப்பை விட நடிப்பே அவரை அதிகம் கவர்ந்தது. 7 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார்.

அங்கு 6 ஆண்டுகள் நடித்தார். பின்னர் அங்கிருந்து விலகி, டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் ‘குமாஸ்தாவின் பெண்’ என்ற நாடகம், 1935-ல் திரைப்படமாகியது.

அதில் கே.ஆர். ராமசாமி சிறு வேடத்தில் நடித்தார். அவருடைய முதல் படம் இதுதான். குமாஸ்தாவின் பெண் படத்தின் துணை இயக்குனர்களாகவும், எடிட்டர்களாகவும் இருந்த கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள், ‘பூம்பாவை’ என்ற படத்தை டைரக்ட் செய்தனர்.

அவர்களுடைய சிபாரிசின் பேரில் இந்தப் படத்தின் கதாநாயகன் வேடம் கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. கதாநாயகியாக நடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ‘தெய்வநீதி’, ‘கிருஷ்ண பக்தி’, ‘கங்கணம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

‘கிருஷ்ணன் நாடக சபா’ என்ற பெயரில் சொந்தத்தில் நாடகக் குழுவை தொடங்கினார். (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது பேரன்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அதனால், தன் நாடகக் குழுவுக்கு அவர் பெயரை வைத்தார்.) திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த இரண்டு நாடகங்களும் பெரிய வெற்றி பெற்றன.

புராணப் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை, தி.மு.க. கொள்கையின் காரணமாக கே.ஆர்.ராமசாமி ஏற்க மறுத்து விட்டார். நாடகமாக வெற்றி பெற்ற ‘வேலைக்காரி’யை, ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர்.

திரைக்கதை, வசனத்தை அண்ணா எழுதினார். படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார்.

படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. கதாநாயகி வி.என்.ஜானகி. மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், பி.கே.சரஸ்வதி ஆகியோர் நடித்தனர். வேதாசல முதலியார் (டி.பாலசுப்பிரமணியம்) பெரிய பணக்காரர்.

அவர் செய்த கொடுமையால் ஆனந்தனின் (கே.ஆர். ராமசாமி) தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இதற்குப் பழி வாங்க, ஆனந்தன் ஆள் மாறாட்டம் செய்து, வேதாசலத்தின் மகள் சரசாவை (வி.என்.ஜானகி) மணக்கிறான். அவளை கொடுமை செய்கிறான்.

பல திருப்பங்களுடன் கதை செல்கிறது. வேலைக்காரியை (எம்.வி.ராஜம்மா) காதலிக்கும் மூர்த்தி (எம்.என்.நம்பியார்) ஒரு போலிச்சாமியாரின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறான்.

போலிச்சாமியார் கொலை செய்யப்படுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்படும் மூர்த்தியை, வக்கீலாக வாதாடி விடுவிக்கிறான், ஆனந்தன். வேதாசல முதலியாரின் ஆணவம் அழிகிறது.

25-2-1949-ல் வெளியான வேலைக்காரி பெரிய வெற்றி பெற்றது. கே.ஆர்.ராமசாமியின் நடிப்பும் பாடல்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

குறிப்பாக, கோர்ட்டில் வக்கீலாக ஆஜராகி, “சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு“ என்று வாதாடும் காட்சியில் கைதட்டல் பெற்றார்.

பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்த ‘காஞ்சனா’வில் (எழுத்தாளர் லட்சுமியின் நாவல்) கதாநாயகனாக நடித்தார். அவருடைய மனைவியாக லலிதாவும், காதலியாக பத்மினியும் நடித்தனர்.

1954_ல் வெளிவந்த ‘சொர்க்கவாசல்’ படத்தின் கதை, வசனத்தை அண்ணா எழுதினார். கதாநாயகனாக கே.ஆர்.ராமசாமியும், வில்லனாக சிவாஜிகணேசனும் நடித்தனர்.

கே.ஆர். ராமசாமிக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய “எங்கே சொர்க்கம்”, “ஆகும் நெறி எது ஆகா நெறி எது”, “கன்னித்தமிழ்ச் சாலை ஓரம்” முதலிய பாடல்கள் ‘ஹிட்’டாக அமைந்தன.

ஆனால் படம் பெரிய வெற்றி பெறவில்லை. இதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘சுகம் எங்கே’ படத்தில் கே.ஆர்.ராமசாமியும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர்.

இது வெற்றிப்படம். “தென்றல் அடிக்குது, என்னை மயக்குது” என்று கே.ஆர்.ராமசாமி பாடிய பாடலில் தென்றல் வீசியது. ஏவி.எம். தயாரித்த ‘ஓர் இரவு’, ‘செல்லப்பிள்ளை’ ஆகிய படங்களில் ராமசாமி கதாநாயகனாக நடித்தார்.

ஓர் இரவு கதை, வசனத்தை அண்ணா எழுதினார். நாடகம் அடைந்த வெற்றியை திரைப்படம் அடையவில்லை.

செல்லப்பிள்ளை சுமார் ரகம். இதில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி சாவித்திரி. ‘நீதிபதி’ என்ற படத்தில் கே.ஆர். ராமசாமியுடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார்.

பின்னர் எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான ‘அவன் அமரன்’ என்ற படத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்தார். அவர் குரல் வளம் பாதிக்கப்பட்டதால், சீர்காழி கோவிந்தராஜன் பின்னணியில் பாடினார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி ராஜசுலோசனா.

கே.ஆர்.ராமசாமி கடைசியாக நடித்த படம் ‘நம் நாடு’. எம்.ஜி.ஆர். நடித்த இப்படத்தில் கவுரவ வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.

1960-ல் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக, சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.ஆர். ராமசாமி. நாடகத் துறையில் ஆற்றிய பணிக்காக, சங்கீத நாடக சங்கத்தின் (இயல் இசை நாடக மன்றம்) விருது பெற்றார்.

57- வது வயதில் கே.ஆர்.ராமசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவுக்குழாயில் சதை வளர்ச்சி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர், வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில காலம் சிகிச்சை பெற்றார்.

பிறகு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

5-8-1971 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. நள்ளிரவு 12 மணிக்கு காலமானார். கே.ஆர்.ராமசாமியின் மனைவி பெயர் கே.ஆர்.கல்யாணி. இவர் பிற்காலத்தில் வாரிய தலைவராக இருந்தவர். இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்

  • நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி முகநூல் பதிவு
Comments (0)
Add Comment