சிவாஜி தொடங்கி ஸ்ரீதேவி வரை
சினிமாவில் நடிகர்களாக நுழைந்து சாதித்தவர்களை இரண்டு ரகங்களில் வகைப்படுத்தலாம்.
வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள் ஒரு ரகம்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் இந்த பட்டியலில் அடங்குவர்.
சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் விளம்பரம், புகழ், பணம், செல்வாக்கு போன்றவற்றை பார்த்து கோடம்பாக்கத்துக்கு ரயில் ஏறியவர்கள் இரண்டாம் ரகம்.
ரஜினி, கமல், தொடங்கி விஜயகாந்த், வடிவேலு வரை இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.
சில ஸ்டார்கள், தாங்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த குடும்பத்தையே சினிமாவில் திணித்ததுண்டு.
சில ஸ்டார்களின் வாரிசுகள், தாங்களாகவே முயற்சி எடுத்து, செல்லூலாய்டு உலகில் முத்திரை பதித்ததுண்டு.
அவர்களில் ஜெயித்தவர்கள் யார்? தோற்றவர்கள் யார்? என்பதை அலசும் கட்டுரை இது.
சிவாஜி
சிவாஜி குடும்பத்திலிருந்து முதலில் சினிமாவுக்கு வந்தவர் இளைய மகன் பிரபு.
முதல் படம் சங்கிலி.
அவரது ஆரம்ப கால படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும், பின்னாட்களில் கை தேர்ந்த இயக்குநர்கள் கையில் சிக்கியதால், பிரபுவுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
அக்னி நட்சத்திரம், சின்னத்தம்பி போன்ற படங்கள் பிரபுவின் கேரியரில் முக்கியமானவை.
அண்ணன் ராம்குமார், பொழுது போக்குக்காக நடிக்கிறார். அவர், கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருந்தால், பிரபுவின் இடத்தை பிடித்திருப்பாரா? என்பது தெரியவில்லை.
சிவாஜியின் பேரப் பிள்ளைகள் துஷ்யந்த், விக்ரம் பிரபு சோபிக்கவில்லை.
எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதாவின் மூத்த மகன் வாசு, இறக்கும் வரை பிசியான நகைச்சுவை நடிகராகவே விளங்கினார்.
ராதாரவியும், ராதிகாவும் பெரும் வெற்றி பெற்றதோடு, இன்றும் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
நிரோஷா, சுமார் வெற்றி அடைந்தார்.
வாசு விக்ரம் ஓகே.ரகம்.
முத்துராமன்
முத்துராமனை விட அவரது மகன் கார்த்திக், வெள்ளித்திரையில் புதிய சிகரங்களை தொட்டார் எனச் சொல்லலாம்.
பாரதிராஜா, பாசில், மணிரத்னம், ஆர்.வி.உதயகுமார் என பல டைரக்டர்களால், பட்டைத் தீட்டப்பட்டதால், இன்றைக்கும் நிலைத்திருக்கிறார் கார்த்திக்.
ஆனால் அவரது மகன் கவுதம், சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றிப்படம் கொடுக்க தவறி விட்டார்.
கமலஹாசன்
கமல் மகள் ஸ்ருதிஹாசன், நட்சத்திரப் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். அக்ஷராஹாசன் பெரிய அளவில் சாதிக்கவில்லை.
அண்ணன் சாருஹாசன் இன்னும் நடிக்கிறார்.
அண்ணன் மகள் சுகாசினி, 80-களில் முதல் வரிசை நடிகையரில் ஒருவராக திகழ்ந்தார்.
சிவகுமார்
சிவகுமார் குடும்பத்தில் இரு மகன்களான சூர்யாவும், கார்த்தியும் கால்ஷீட் கொடுக்க இயலாத நிலையில் உயரத்தில் நிற்கிறார்கள்.
நாகேஷ்-பாக்யராஜ்
‘’பெரிய நடிகரின் மகன் – நல்ல டான்சர்’’ என்ற பலமிருந்த போதிலும் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
பாக்யராஜ் மகன் சாந்தனுவும் அப்படியே.
அசோகன் மகன் வின்செண்ட், பாலையா மகன் ஜுனியர் பாலையா ஆகியோரை எப்போதாவது படங்களில் பார்க்க முடிகிறது.
விஜயகுமார்
விஜயகுமார் குடும்பத்தில் இருந்து அருண் விஜய், வனிதா, ப்ரீதா என பலர் வந்தாலும் யாரும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை.
தியாகராஜன் மகன் பிரசாந்த் அவ்வப்போது சில வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும், ஸ்டார் அந்தஸ்தை எட்டவில்லை.
சத்யராஜ் மகன் சிபிராஜும் அப்படியே.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், பாண்டியராஜன் மகன் பிரிதிவிராஜ் போன்றோர் நாங்களும் சினிமாவில் இருக்கிறோம் என சொல்லிக் கொள்ளலாம்.
மேனகா மகள்
மேனகா சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை அடையவில்லை. ஆனால் அவரது மகள் கீர்த்தி சுரேஷ், வணிக ரீதியாக ஜெயித்ததோடு தேசிய விருதையும் அள்ளினார்.
லட்சுமி பெற்ற வெற்றியில் கால்வாசிகூட ஐஸ்வர்யா பெறவில்லை.
‘விஜயபுரி வீரன்’ ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி, கவர்ச்சி நடனங்களோடு தன்னை சுருக்கிக் கொண்டார்.
அவரது தங்கை லலிதா குமரி, கெஸ்ட் ரோல்களோடு சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ராதா மகளை ஓரிரு படங்களில் பார்த்தோம். இப்போது என்ன செய்கிறார் என தெரியவில்லை.
தேவிகா மகள் கனகா கரகாட்டக்காரனில் அறிமுகம் ஆனார். சில வெற்றிப் படங்களை கொடுத்தார். பிறகு காணாமல் போய்விட்டார்.
மனோரமா மகன் பூபதி, ஓரிரு படங்களில் வந்து போனார்.
ஜஸ்டின் மகள் பபிதா, அனுராதா மகள் அனு ஆகியோர் பத்து பதினைந்து சினிமாக்களில் ஆடினார்கள். அவ்வளவு தான்.
விஜய் – சிம்பு
இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக நீடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் – டி.ராஜேந்தர் வாரிசுகள் எப்படி?
விஜய், ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
சிம்பு, அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும், கால்ஷீட் சொதப்பல்களால் சறுக்கி விட்டார்.
– பி.எம்.எம்.