எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன.

தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை தாவணி மற்றும் சேலைகளில் வலம் வந்தது கண்ணைக் கவர்வதாக இருந்தது.

இந்நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.

இந்தத் திருவிழாவுக்காக சிறப்பாக அமைக்கப்பட்ட சிறு குளத்தில் பெண்கள் அகல் விளக்குகளில் தீபமேற்றி மிதக்க விட்டனர்.

மாணவிகள், பல்வேறு விதமான சாதங்கள் அடங்கிய சித்ரா அன்னம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பிற தின்பண்டங்களை பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் வளையல் கடை, மருதாணி சேவை, கிளி ஜோசியம் போன்ற கிராமத்துத் திருவிழாக் கடைகள் இடம் பெற்றிருந்தன.

மாணவிகளும் கைவினைப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் போன்ற கடைகளை அமைத்திருந்தனர்.

இது ரம்மியமான கிராமப்புற சூழ்நிலையை உருவாக்கியது.

இந்தக் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக, மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கும்மி இடம்பெற்றன.

அதுமட்டுமல்லாமல் கிராமப்புற கலாச்சார உடை அலங்காரம், உறியடி விளையாட்டு மற்றும் கோலப்போட்டிகள் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்த்தன.

ஒட்டுமொத்தத்தில் தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை நினைவுபடுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா குறித்துப் பேசிய டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன்,

“மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு, நமது பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பதுடன் வரலாற்றையும் அறிந்து கொள்வது அவசியம்.

இது போன்ற விழாக்கள் வாயிலாக, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நமது கலாச்சாரத்தின் மகத்துவத்தை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள்.

தமிழர் பண்பாட்டை, இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கம் தான் இந்தக் கொண்டாட்டங்கள்” என்று தெரிவித்தார்.

Comments (0)
Add Comment