தீர்ப்பு வழங்கும்போது மனிதாபிமானம் அவசியம்!

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பங்கேற்ற நகீந்தா் சிங் என்ற ராணுவ வீரா், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது.

அதற்கு எதிராக ராணுவப் படைகள் தீா்ப்பாயத்தில் அவா் முறையிட்டார். அதை விசாரித்த தீா்ப்பாயம் அவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது. அதற்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சுதான்ஷு துலியா ஆகியோரைக் கொண்ட அமா்வு நேற்று விசாரித்தது.

அப்போது, ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் வழங்க ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவான் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை ஒன்றிய அரசு பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்த ராணுவ வீரரின் சேவை, அவா் எந்தச் சூழ்நிலையில் இவ்வாறு ஆனார், அவரை நம்பியுள்ள குடும்பம் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியதோடு, நீதி வழங்கும்போது மனிதாபிமானப் பார்வைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட ராணுவ வீரருக்கு ஓய்வூதியம் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக ஒன்றிய அரசிடம் ஆலோசித்து பதிலளிக்குமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவானிடம் கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Comments (0)
Add Comment