புரட்சி உருவாகி மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது!

உலகம் முழுவதும் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு, இன்னும் மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்களில் தாய் நாவலும் ஒன்று.

புரட்சி என்பது ஒரே நாளில் விளைந்து விடுவது அல்ல. படிப்படியாக நெஞ்சில் கனல் மூண்ட மக்கள் எப்படி ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எழுச்சியூட்டப்படுகிறார்கள் என்பதை ஒரு சிறந்த கதை அம்சத்தோடு, மக்சிம் கார்க்கி அவர்கள் எழுதியுள்ளார்.

அதை மிக சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் தொ.மு.சி. ரகுநாதன். 1917 ரஷ்ய புரட்சிக்கு முன்பு, 1906 ஆண்டு இந்த நாவல் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. இந்த நாவலின் மற்றும் முக்கிய கதாப்பாத்திரம் நீலவ்னா பெலகேயா. அந்தப் புரட்சி தாய் பற்றிய கதை தான் தாய் நாவல்.

ஜார் அரசரின் ஆட்சியின் போது, தொழிலாளர்களும் விவசாயிகளும் சுரண்டப் பட்டார்கள். அடக்குமுறை தலை விரித்தாடியது. தொழிற்சாலை இயந்திரங்கள் தேவையான மட்டும் தொழிலாளர்களது சக்தியை உறிஞ்சி தீர்த்து விடுவதோடு, மனிதனும் தனது சவக்குழியை நோக்கி ஓரடி முன்னேறி செல்கிறான்.

ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஜனங்கள் 10 மணி வரையிலும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். கண்ணியமான இல்லறவாசிகள் தங்களிடம் இருக்கும் சிறந்த ஆடை அணிகளை அணிந்துகொண்டு, பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு செல்வார்கள்.

வீட்டிற்கு வந்து விட்டு சாப்பிட்டு விட்டு மாலை வரை தூங்குவார்கள். கொஞ்சம் அடாவடி ஆட்கள் சாராயக் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்ததும் மனைவியோடு சண்டை பிடித்து அவர்களை தங்கள் கைகள் வலிக்கும் வரை அடிக்க செய்வார்கள்.
இளைஞர்களோ அடிபட்ட முகங்களுடன் வீடு திரும்புவார்கள். சிலர் சாராயக்கடை தரையில் போதை மயக்கத்தில் கிடப்பார்கள்.

அவர்களை பெற்றோர்கள் தேடி கண்டு பிடித்து வீடு வந்து சேர்ப்பார்கள். அடுத்த நாள் காலையில் தொழிற்சாலையின் சங்கொலி ஒலிக்கும் போது வழக்கம் போல தங்களுடைய சக்தியை இயந்திரங்களின் முன் இழக்கச் சென்றுவிடுவார்கள்.

இப்படி ஆடுமாடுகளைப் போல வாழ்கின்ற மனிதர்களில் மிகயீல் விலாசவ் தொழிற்சாலையின் சிறந்த தொழிலாளி மிக பலசாலி கூட.. ஆனால் பயங்கரமான குடிகாரன். குடிப்பதும், மனைவியை அடிப்பதும் அவனின் அன்றாட செயல்களில் ஒன்று. அவனின் மனைவி தான் நீலவ்னா பெலகேயா. ஒரே மகன் பாவெல்.

குடித்து குடித்து குடல் வெந்து இறந்து விடுகிறான். அதுவரை நீலவ்னா பெலகேயா அடி உதையை தவிர எந்த ஒரு சுகமும் அனுபவித்ததில்லை. படிப்பறிவும் இல்லாதவள். அதிக உலக அறிவும் இல்லாததால், அடி உதை வாங்கினாலும் தன் கணவன், தன் பிள்ளை என்று வாழ்கிறாள்.

கணவனை இழந்த பிறகு தன் ஒரே மகன் தனக்கான ஆறுதல் என்று இருக்கும் பொழுது, தன் கணவனைப் போலவே தன் மகனும் குடித்துவிட்டு வீடு திரும்புவதை , பார்த்ததும் அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.

” உன் அப்பா உனக்கும் சேர்த்து குடித்து தீர்த்துவிட்டார். அவர் என்னை படாத பாடு படுத்தினார். உன் தாய் மீது நீ கொஞ்சமாவது பரிவு காட்ட கூடாதா? “
என்ற தாயின் கண்ணீர் , அந்த மகனை மாற்றியது. அவன் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத்தொடங்கியது.

மகன் வீட்டிற்கு புத்தகங்கள் கொண்டு வர ஆரம்பித்தான். அவற்றை எல்லாம் ரகசியமாக படிப்பான். படித்ததும் ஒளித்து வைத்து விடுவான். வெளியே சென்று வெகு நேரம் கழித்து வந்தாலும் குடிக்காமல் வீடு திரும்புவான். மெல்ல மெல்ல அவன் பழகும் முறையும் எளிமையும் மென்மையுமாக் மாறிக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் அவன் வீட்டில் ஒரு மூன்று மனிதர்கள் உரையாடியபடி ஒரு பாதையின் வழியே நடக்கும் படத்தைக் கொண்டு வந்து சுவரில் மாட்டி வைத்தான். அவன் அலமாரிகளில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.

அவன் பேச்சும் நடவடிக்கையும் தாய்க்கு பிடித்திருந்தாலும் ஏதோ ஒரு பய உணர்ச்சி அவளுக்கு இருந்தது. ஒருநாள் மகனுடன் உரையாடும் பொழுது தடை செய்யப்பட்ட புத்தகங்களை அவன் வாசிக்கிறான் என்பது தெரிகிறது.

ஆயுசு முளைக்க உழைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை இப்படி அவலமாய் இருக்க, இரண்டு கட்டடங்களாக இருந்த தொழிற்சாலைகள் எல்லாம் என்று ஏழு எட்டு பத்து என்று அதிகரித்துக்கொண்டே போகிறதே…அதன் காரணம் என்ன? நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதையெல்லாம் நான் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இது மாதிரியான புத்தகங்கள் வாசிக்கத்தான் வேண்டும் மகன் தாயிடம் மிகப் பொறுமையாக விளக்குகிறான்.

அவருடைய நண்பர்களும் வீட்டுக்கு வருகிறார்கள். புத்தகங்களைப் படிக்கிறார்கள் அவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கிறார்கள். அதில் ஹஹோல் அந்திரெய் என்பவன் யாரும் இல்லாததால் அவனையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்கிறார்கள்.
மகனின் நண்பர்களும் தோழிகளும் எல்லாம் வரும்போது, தாய்ப் படிப்பறிவு இல்லாதவராக இருந்தாலும் கூட, அவர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து விட்டு அவர்கள் உரையாடல்களை கவனிக்கிறாள்.

மெல்ல மெல்ல தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையின் அவலத்தை உணரத் தொடங்குகிறாள். தன் மகனின் நண்பர்களையும் தன்னுடைய குழந்தைகளை போல் நேசிக்கத் தொடங்குகிறாள். இந்த உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் துன்புற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்கிறாள். மெல்ல மெல்ல அவள் இதயமும் புரட்சிப் பாதையில் ஈர்க்கப்படுகிறது.

பாவெல் தான் பணியாற்றும் தொழிற்சாலையில் துண்டு பிரசுரங்களை நிர்வாகத்துக்கு தெரியாமல் விநியோகம் செய்கிறான். அதை அறிந்து காவல்துறை அதிகாரிகள் அவன் வீட்டை சோதனை செய்கிறார்கள். மகனை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். மகன் விட்டு சென்ற பணியை தொடர தாய் முடிவு எடுக்கிறாள்.

அதுவரை சாதாரண பெண்ணாக இருந்த அந்த தாய் , புரட்சி பெண்ணாக அங்கு தான் மெல்ல உருமாறத் தொடங்குகிறார். உணவு விற்பனை செய்யும் பணியாளாக தொழிற்சாலை உள்ளே நுழைகிறார். யார் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்கிறார்கள் என்று நிர்வாகம், காவல்துறையினர் குழம்பி போகின்றனர்..விடுதலை ஆகி வரும் மகன் தாயின் செயலால் பெருமிதம் அடைந்து , அவரிடம் இன்னும் நெருக்கம் அடைகிறான்.

புரட்சி இயக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து, மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது. அந்த சூழலில் வரும் மே தின அணிவகுப்பில் பாவெல் செங்கொடியை கையில் ஏந்திய படி அணிவகுப்பை தலைமை தாங்கி செல்கிறான். மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறான். தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாய் தன் வீட்டில் இருந்து வெளியேறி , நிகலாய் என்ற தோழரின் வீட்டில் தங்கி, தன்னால் ஆன எல்லா வழிகளிலும், புரட்சி இயக்கத்துக்கு உதவி செய்கிறாள். பல வேடங்களில் , சென்று தோழர்களுக்கு புத்தகங்கள் கொண்டு சேர்க் கிறார்.
இந்த கதையில் நீலவ்னா போன்று நிறைய புரட்சிப் பெண்கள் வருகிறார்கள். சாஷா, சோபியா, நதாஷா, லுத்மீலா, தத்யானா போன்ற பெண்கள் எல்லாம் சிறந்த புரட்சிப் பெண்களாக வருகிறார்கள்.

அதிலும் சாஷா, நிலப்பிரபுவின் மகளாக இருந்தாலும், அவரின் அடக்குமுறைகளால் வெறுப்பு உண்டாகி புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறார். பாவெல் நேசிக்கும் பெண்.

லூத்மீலா துண்டு பிரசுரங்களை அச்சிட்டு தரும் பெண். சிறையில் இருந்து தப்பிக்க உதவிகள் செய்ய வெளியில் இருக்கும் தோழர்கள் முயற்சி செய்தாலும், பாவெல் அதை ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தின் விசாரணைகாக காத்திருக்கிறான்.

விசாரணை எவ்வாறு நடந்தது? இறுதியில் என்னவாயிற்று என்பது தான் மீதிக்கதை.
ஆரம்பத்தில் தன் மகனின் செயலில் பயம் அடைந்தாலும், சமூகத்தில் நிலவி கிடக்கும் இந்த ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியில் தன் மகன் ஈடுபட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, தன்னுடைய ஆன்மாவையும் அந்தப் பயணத்தில் மாற்றிக்கொண்ட ஒரு அற்புதமான தாயின் கதை தான் இந்த நாவல்.

” இந்தச் சமுதாய அமைப்பு தனிமனிதனின் உடலின் மீதும், உள்ளத்தின் மீதும் சுமத்தி இருக்கும் சகல விதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும், சகலவிதமான சாதனங்களையும் எதிர்த்து போராடிய தோழர்களின் கதை.

‘தனிச்சொத்துரிமை ஒழிக’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில் ‘. ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’… ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை’ இந்த மகத்தான கோஷங்களை முன்வைத்து தான், இந்தப் புரட்சிகள் எல்லாம் எழுச்சி பெற்றது.

இந்தப் புரட்சிகள் எல்லாம் இல்லை என்றால், இன்னும் நேரம் காலம் பார்க்காமல், அடிமைகளாய் வேலை பார்க்கும் தொழிலாளர்களாகத் தான் நம்மில் பெரும்பாலானோர் இன்றும் இருந்திருப்போம். இது போன்ற கதைகள் வாசிப்பதற்கு மட்டுமல்ல, வரலாற்றில் எத்தனை விதமான கடின பாதைகளை கடந்து தாண்டி, இன்றைய சொகுசு வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளவும் தான்.

தனது ஆன்மாவை விற்று விடாத நேர்மை நிறைந்த ஒரு தொழிலாளி, மகனின் பாதையில் இணைந்து பயணிக்கும் ஒரு புரட்சித் தாய் இவர்களின் கதை தான் இந்நூல்.

நூல் : தாய் நாவல்
ஆசிரியர் : மக்சீம் கார்க்கி
விலை : ரூ.₹195
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

Comments (0)
Add Comment