நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து…
ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.
“யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி கமலாம்மாவுக்கு சமையலில் ஓர் பி.எச்டி. பட்டமே கொடுக்கலாம்” என்று சிலாகித்தார்.
“அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டேன்.
ஒருநாள் சிவாஜியும், நாகேஷூம் ஷூட்டிங் முடிந்து புறப்பட்டபோது, அதிகாலை 3 மணி. அப்போது சிவாஜி, “நாகேஷ், நீ மிகவும் சோர்வாக இருப்பது போல் தெரிகிறது. எங்க வீட்டிற்கு வந்து சூடா இரண்டு தோசை சாப்பிட்டு போ” என்று அழைத்தார்.
“எப்படி பார்த்தாலும் சிவாஜி வீட்டிற்கு செல்ல 4.30 மணி ஆகும். ரெண்டும்கெட்டான் நேரத்தில் எப்படி சாப்பிடுவது?” என்று நினைத்தாலும், சிவாஜி அழைத்ததால் மறுக்காமல் சென்றார் நாகேஷ்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து புறப்படும்போதே மனைவிக்கு போன் செய்து, நாகேஷூடன் வருவதாக சிவாஜி சொல்லிவிட்டார்.
காலை 4.30 மணிக்கு இருவரும் சாப்பிட அமர்ந்தனர். கமலாம்மா சூடான தோசையை பரிமாற, அதை ரசித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறார் நாகேஷ்.
இதை அவர் என்னிடம் சொல்லும் போது,
“ராஜேஷ்.. அந்தம்மா அந்த நேரத்தில் எழுந்து சட்னி அரைத்து, திருநெல்வேலி தோசை என்று சொல்லுவோமே.. அதுபோல குட்டி தோசைகள் இரண்டு வைத்து தேங்காய் சட்டினியை ஊற்றினார்கள்.
சட்டினியைத் தொட்டு வாயில் வைத்தேன். என்னய்யா ருசி. இரண்டுங்கெட்டான் நேரம்.. பசியே இல்லாத சமயம்.. ஆனாலும் ஐந்தாறு தோசைகள் சாப்பிட்டேன். அப்படியொரு சட்னியின் சுவையை நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை” என்றார்!
நன்றி: நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து…