டப்பிங் படங்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த காலம் மலையேறி, இப்போது ஒரேநேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஒரு படம் ரிலீஸானால் ‘பான் இந்தியா’ திரைப்படம் என்று கொண்டாடும் சூழல் வாய்த்திருக்கிறது.
அந்த ட்ரெண்டை அடியொற்றி வெளியாகியிருக்கிறது ‘நான் ஈ’ புகழ் சுதீப் நடித்திருக்கும் ‘விக்ராந்த் ரோணா’.
கேஜிஎஃப் 2வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கன்னட உலகில் இருந்து வெளியாகும் மாஸ் ஹீரோ படம் என்ற வகையில் பெரும் கவனத்தைக் குவித்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு தக்க பதிலாக அமைந்திருக்கிறதா ‘விக்ராந்த் ரோணா’.
ஹாரரா? த்ரில்லரா?
ஒரு வனக்கிராமத்தில் அடுத்தடுத்து சில சிறுமிகள் மர்மமான முறையில் இறந்துபோகின்றனர். அதற்குக் காரணம் தெரியாமல் தவிக்கின்றனர் போலீசார்.
அந்த ஊருக்கு புதிதாக மாற்றலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் விக்ராந்த் ரோணா (சுதீப்). தொடக்கத்திலேயே, ஊர் பெரிய மனிதரான ஜனார்தன் (மதுசூதன் ராவ்) உடன் மோதுகிறார்.
பூட்டிக் கிடக்கும் தனது பூர்விக வீட்டில் தங்க வேண்டுமென்கிறார்.
அதற்கு ஜனார்தன் மறுப்பு தெரிவிக்கிறார். அதையும் மீறி, அந்த வீட்டில் விஸ்வநாத் குடும்பம் தங்க நேரிட, மேலும் ஒரு சிறுமி இறந்து போகிறார்.
இறந்த சிறுமியின் விவரங்களை வைத்துக்கொண்டு, அக்கிராமத்தில் என்ன நடக்கிறது என்று கண்டறிகிறார் விக்ராந்த்.
அங்கு நிகழும் குற்றங்களின் வேரை அறியும்போது, அவரது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த இழப்புக்கும் அதற்குமான தொடர்பு தெரிய வருகிறது. அது என்னவென்பதுடன் படம் முடிவடைகிறது.
த்ரில் கூட்டும் காட்சிகள் பல இருந்தாலும், படம் முழுக்க ஒரு ‘ஹாரர்’ படம் பார்க்கும் உணர்வே மேலிடுகிறது. அதற்கேற்ப சில அம்சங்களும் படத்தில் உள்ளன. அதுவே படம் ஹார்ரா த்ரில்லரா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த நிலையில், சுதீப் ’ஆக்ஷன்’ அவதாரம் எடுக்க வசதியாக வேறொரு வில்லன் குரூப்பும் படத்தில் இடம்பெறுகிறது.
எதனை அதிகளவில் முன்னிறுத்துவது என்று இயக்குனர் அனூப் பண்டாரி தடுமாறியிருப்பது திரைக்கதையின் போக்கையே அடியோடு மாற்றியிருக்கிறது.
மேலோங்கும் குழப்பங்கள்!
நடு இரவில் காரில் வரும் ஒரு பெண்ணும் சிறுமியும் காட்டினுள் சிக்கிக் கொள்கின்றனர். ஒரு மர்ம மனிதன் அந்த சிறுமியை கடத்திச் செல்கிறார். அதிலிருந்துதான் படம் தொடங்குகிறது.
அதன்பிறகு கருமையும் பச்சையும் கலந்த பின்னணி படத்திற்கு ‘பேண்டஸி’ தோற்றத்தை தருகிறது.
முதன்மையாக விளங்கும் இந்த புதிரை முன்வைத்தே விரிந்திருக்க வேண்டிய திரைக்கதை, நடுவில் கேரளாவுக்கு பொருட்கள் கடத்தல், இன்ஸ்பெக்டரை கொலை செய்த கடத்தல்காரர்கள் என்ற கிளைக்கதையைத் துணையாக வைத்துக்கொண்டு தள்ளாடுகிறது.
இது போதாதென்று குழந்தைகளிடையே நிலவிய சாதி வேறுபாட்டினால் ஒரு குடும்பமே தற்கொலைக்கு ஆளான கதையும் வேறு சொல்லப்படுகிறது.
அனைத்தும் சேர்ந்து, தொடக்கத்தில் திரைக்கதை காட்டிய கனவுலகத்தை அடியோடு குலைத்துப் போடுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சைக்கோ கொலைகாரர்களாக மாறியதாக நீள்கிறது இக்கதை.
அதற்கான அடிப்படையாக சாதி வேறுபாடு இருப்பதாகச் சொல்வது மேலும் பல சர்ச்சைகளுக்கே வித்திடுகிறது.
த்ரில்லர் கதைகளில் புதிர் விடுபடும் இடம் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈடுபாட்டை உருவாக்க வேண்டும்.
‘விக்ராந்த் ரோணா’வில் அந்த இடம் சட்டென்று கடந்து போகிறது. போலவே, இடைவேளையில் சுதீப்பையே வில்லன் போலக் காட்டுவதும் கூட திரைக்கதையில் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
பான் இந்தியா படமா?
படம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் கழித்து அறிமுகமானாலும், அதன் பிறகு முழுக்கவே சுதீப் மட்டுமே திரையில் தோன்றுகிறார். அவரது புஜபல பராக்கிரமம் திரையில் வெளிப்பட்ட அளவுக்கு கூட நடிப்பு தென்படவில்லை.
சுதீப் தவிர நிரூப் பண்டாரி – நீதா அசோக் ஜோடி இளமைப் பொலிவுடன் வலம் வருகிறது.
இதில் நடித்தவர்களில் மதுசூதன் ராவ் மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். சுதீப்பையும் இவரையும் தவிர்த்து படம் முழுக்க நிறைந்திருக்கும் கலைஞர்கள் பாத்திரங்களாக மட்டுமே தெரிகின்றனர்.
இப்படியொரு படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸை நடிக்க வைக்க காரணம் தெரியவில்லை. அதற்கேற்ப அவர் நடித்த ‘கடங்க் ராக்கம்மா’ பாத்திரமும் உருவாக்கப்படவில்லை. அதற்கு இயக்குனர் மட்டுமே பொறுப்பாக முடியும்.
அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னணி இசை அபாரமாக அமைந்திருக்கிறது.
பழனிபாரதியின் பாடல் வரிகளும் ஜான் மகேந்திரனின் வசனங்களும் கூட பெரிதாகப் படத்துடன் ஒன்றச் செய்யவில்லை.
வில்லியம் டேவிட் படம்பிடித்த காட்சிகளை அருமையாக படத்தொகுப்பு செய்ததோடு, முழுக்க ஒரேமாதிரியான வண்ணத் தோற்றத்தை ஏற்படுத்தியதில் ஆஷிக் கசுகோலியின் டிஐக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து பல இடங்களில் விஎஃப்எக்ஸ் அற்புதமாக அமைந்திருக்கிறது.
’அடடே சுந்தரா’ போன்ற படங்களில் தமிழ் பதிப்புக்கு தகுந்தவாறு தமிழ் பெயர் பலகைகள், தினசரிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதிலும் விஎஃப்எக்ஸ் உதவியோடு அத்தகு முயற்சிகளைச் செய்திருந்தால் ஓரளவுக்கு தமிழில் தயாரான படம் என்ற தோற்றம் கிடைத்திருக்கும்.
வெறுமனே கன்னடப் படவுலகில் ஒரு நட்சத்திரமாக இருந்த காலத்திலேயே, ராம்கோபால் வர்மாவின் படங்கள் வழியாக இந்தி, தெலுங்கு, தமிழில் அறிமுகமானவர் சுதீப்.
‘நான் ஈ’ அதில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியது. அதன் பலனாகவே ‘புலி’யில் விஜய்க்கு வில்லன் ஆனார்.
ஆனாலும், ‘கேஜிஎஃப்’ வெற்றி அவரது மனதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது.
ஏற்கனவே தனது ‘பயில்வான்’ படத்தை தெலுங்கிலும் தமிழிலும் வெளியிட்டவர், அதேபோல ‘விக்ராந்த் ரோனா’வை பான் இந்தியா படமாக முன்னிறுத்தியிருக்கிறார்.
ஆனால், ஒரு கிராபிக் நாவல் போல விரியும் திரைக்கதை சட்டென்று வழக்கமான கன்னட பட பாணியில் மாறுவது அதற்கு கொஞ்சம்கூட உதவவில்லை.
அதே நேரத்தில், கர்நாடக சமூக அமைப்பு சார்ந்த கூறுகளும் முழுமையாக இடம்பெறவில்லை. ’பான் இந்தியா’ படமாக விளம்பரப்படுத்தப்படவில்லை என்றால், இந்த சிக்கல்கள் நேர்ந்திருக்காது.
உலக சினிமா என்ற வார்த்தையைப் போலவே, ‘பான் இந்தியா’ படம் என்பதும் கூட அதன் உள்ளடக்கம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஈர்ப்பதைப் பொறுத்தே அமையும்.
வெறுமனே சம்பந்தப்பட்ட படக்குழு விளம்பரப்படுத்துவது மூலமாக மட்டுமே அந்த சிறப்பு கிடைத்துவிடாது என்பதற்கு மற்றுமொரு உதாரணமாகியிருக்கிறது ‘விக்ராந்த் ரோணா’!
-உதய் பாடகலிங்கம்