இயந்திர முறையில் மணல் அள்ள கோரிக்கை!

சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

கொரோனா காலத்தின்பொழுது தமிழகத்தில் மணல் குவாரிகள் இயக்கப்படும் முடியாததால் கட்டுமானத்துறையின் மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதை பூர்த்தி செய்ய தற்பொழுது தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2022ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவேரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும் 30 குவாரிகளில் இயந்திரம் மூலம் மணல் அள்ள, சுற்றுச்சூழல் துறைக்கு நீர்வளத்துறை அனுமதி கோரியுள்ளது.

இதில் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை தாலுகாவில் வெள்ளாற்றில் 8 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் தாலுகாவில் காவேரி ஆற்றில் 3 இடங்களிலும்,

கரூர் மாவட்டத்தில் காவேரி ஆறு பாயும் மண்மங்கலம் தாலுகாவில் 5 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 2 இடங்களிலும்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு பாயும் கும்பகோணம் தாலுகாவில் 3 இடங்களிலும், பாபநாசம் தாலுகாவில் 2 இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு பாயக் கூடிய அறந்தாங்கி தாலுகாவில் 2 இடங்களிலும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பாயக்கூடிய விளாத்திக்குளம் தாலுகாவில் 1 இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பார் பாயக்கூடிய திருவாடானை தாலுகாவில் 2 இடங்களிலும்,

கோட்டக்கரை ஆறு பாயக்கூடிய ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 2 இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் இயந்திரம் மூலம் மணல் அள்ள நீர்வளத்துறையால் அனுமதி கோரப்பட்டு ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலை பாதிக்கும் மணல் குவாரிகள்:

மணல் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வது நல்ல விஷயம் தான். ஆனால், ஆறுகளை அழித்து தான் அதை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேவை எப்பொழுதுமே கிடையாது.

கட்டுமான பணிகளுக்கு மணல் தேவை என்று மணல் அள்ளி அள்ளி ஆறுகளை அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதித்து, நாம் இந்த உலகில் வாழ்வதற்கு மிக கடினம் ஆகிவிடும். இயற்கை அழித்து வீடுகளை கட்டி மட்டும் நாம் என்ன செய்யப் போகிறோம்.

மணல் குவாரிகளை இயக்குவதற்குவதற்கான விதிகளில் மணல் அள்ளுவதில் மனித சக்தி முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் மணல் அள்ளும் பணிகளை சிறப்பாகவும் வேகமாகவும் செய்து முடிக்க இயந்திரம் முறையை கையாள அனுமதி கோரப்பட்டுள்ளது.

புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் உரிய ஆய்வுகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, இதனால் ஆற்றுப்படுகை அழிந்து நிலத்தடியில் நீர் சேர்வது தடைப்படும்.

மேலும் தடுப்பணைகளின் மணல் அரிப்பு ஏற்பட்டு கட்டுமானம் பாதிப்படையும்.

மணல் குவாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும், மணல் அள்ள இயந்திர முறையை கடைப்பிடிப்பதாலும் கட்டுமான பணிகள் வேகமாக நடக்குமே தவிர, நமது சுற்றுச்சூழல் பின்னோக்கி சென்று கொண்டே இருக்கும்.

இதனால் சுழற்சி முறையில் மீண்டும் கட்டுமானம் தான் பாதிப்படையும். இந்நிலையில் ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதி பெற்று செயல்படாமல் இருந்த குவாரிகளையும் திறப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

பொதுவாக குவாரி அமைக்கும் இடத்திலிருந்து 300 மீட்டர்களில் வீடுகள் அமைந்திருந்தால் குவாரிக்கு அனுமதி வழங்கப்படாது.

ஆனால் நன்னியூர் புதிய மணல் குவாரியில் இருந்து 200 மீட்டர்களில் வீடுகள் அமைந்துள்ளன.

மேலும் வனத்துறையின் காப்புக்காடு அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை மணல் குவாரிகள் அமைக்க அனுமதி கிடையாது.

ஆனால் நன்னியூர் புதிய மணல் குவாரியில் இருந்து 700 மீட்டர் தூரத்தில்  குமாரபாளையம் படுகையில், வனத்துறையின் காப்புக் காடுகள் உள்ளது.

இதுபோன்ற தவறுகள் தெரிந்து நடத்தப்படுகிறதா தெரியாமல் நடத்தப்படுகிறதா என்பது குறித்து தெரியவில்லை.

ஆனால், இது நமது சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கப் போகிறது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மேலும் நன்னியூர் பகுதியில் ஏற்கனவே மணல் அள்ளப்பட்டு, மணல் அளவு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் ஒரு புதிய குவாரியை அமைத்தால் அது அந்தப் பகுதியை சீரழிக்குமே தவிர, அதனால் வேறு எந்த பயனும் ஏற்படாது.

சுற்றுச்சூழலையும் சற்று கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் தமிழக அரசு முடிவு எடுத்தால் அதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் உண்மையான நன்மை, அதிக மணல் மூலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதல்ல.

இளவரசன்

Comments (0)
Add Comment