அண்ணா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி இரண்டாவது நாளாக அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கலந்து கொண்டார்கள்.

பட்டமளிப்பு நிகழ்வில் கறுப்பு நிறத்திலான கௌனை பிரதமர் மோடியும், சிவப்பு நிறத்திலான கௌனை முதல்வர் ஸ்டாலினும் அணிந்திருந்தார்கள். விழாவில் பிரதமர் மோடிக்கு திருவள்ளூவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார் ஸ்டாலின்.

“பொறியியல் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், பிறருக்கு வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். இந்தியாவிலேயே உயர்கல்வி பெறுகிறவர்களில் தமிழகம் தான் முதலிடம்.” என்றார் பொன்முடி தனது வரவேற்புரையில்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டார் அதன் துணை வேந்தரான வேல்ராஜ்.

முதல்வர் ஸ்டாலின் பேசும் போது “உயர்கல்வியில் தமிழகம் சிறப்பான இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

அனைவருக்கும் தடையற்ற கல்வி என்பது தான் எங்களுடைய இலக்கு. உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது.

உயர்கல்வியில் பொற்காலத்தை உருவாக்க அயராது உழைப்போம்” என்றார் குறிப்பிட்ட சில புள்ளிவிபரங்களுடன்.

அதைத் தொடர்ந்து முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குத் தங்கப்பதக்கமும், பட்டமும் வழங்கினார் பிரதமர் மோடி.

நிறைவாக விழாவில் பேசிய பிரதமர் மோடி ”அனைவருக்கும் வணக்கம்” என்று பேச்சைத் துவக்கியவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.

“மாணவர்களின் கனவை நிறைவேற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. 125 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சுவாமி விவேகானந்தர் வந்திருக்கிறார். இளைஞர்கள் தான் வளர்ச்சியின் இன்ஜின்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் தங்கியிருந்த அறை நினைவகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அவர் இந்தப் பல்கலைக் கழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் புது தொழில் நிறுவனங்கள் 15 ஆயிரமாக உயர்ந்திருக்கின்றன. 83 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டை இந்தியா ஈர்த்திருக்கிறது.

சர்வதேச உணவுச் சங்கிலியில் இந்தியாவின் இடம் முக்கியமானதாக இருக்கிறது. உக்ரைன் போரால் உலகம் நெருக்கடியைச் சந்தித்தபோது, இந்தியா உணவு உற்பத்தியை அதிகரித்தது. கொரோனா தொற்றை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

முன்பு இளைஞர்கள் ஓரிடத்தில் பணியாற்றி மாதச் சம்பளம் பெறுவதை விரும்பினார்கள். இப்போது தொழில் முனைவோர் ஆக விரும்புகிறார்கள். வலிமையான அரசாங்கம் என்பது கட்டுப்பாடுகளை விதிப்பது அல்ல.

நாட்டின் உள்கட்டமைப்பில் நிறைய மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.” என்று பேசியதற்குப் பிறகு ஆளுநர் ரவி பேசினார்.

Comments (0)
Add Comment