கம்பருக்கு திரைக்கதை எழுதத் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனும் எழுத்தாளர் ஜெயமோகனும் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பு பற்றி உரையாடியுள்ளனர்.

இதுபற்றிய அனுபவத்தை எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான தீபா ஜானகிராமன், தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜெயமோகன் மற்றும் கமல்ஹாசன் ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்த உரையாடலில் இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான தொடர்பு குறித்து பேசியிருக்கிறார்கள். இருவருமே அவரவர் துறையில் அனுபவம் கொண்டவர்கள்.

நீண்டிருக்க வேண்டிய நேர்காணல், சுருக்கமாக முடிந்ததில் வருத்தம் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான ஒன்றைக் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

கமல்ஹாசன் பேசுகிறபோது ஒன்றைச் சொன்னார். அது நூற்றுக்கு நூறு உண்மை. திரைக்கதை எழுதுவது என்பது ஒரு டெக்னிக் என்றார்.

ஷேக்ஸ்பியரும், கம்பனும் இன்று இருந்திருந்தால் கூட அவர்கள் திரைக்கதை எழுதுவது குறித்துக் கற்றுக் கொண்ட பின்னரே எழுத முடியும் என்றார்.

மிகச் சரி. இரண்டின் மொழியும் வேறு வேறு.

தொடர்ந்து ஒன்றரை வருட காலம் கதை டு திரைக்கதை தொடர் எழுதுவதற்காக மாதம் ஒரு நாவலை வாசிக்கவும், அந்தத் திரைக்கதை வடிவத்தை வாசிக்கவும் செய்திருக்கிறேன். அது நல்ல பயிற்சியாக இருந்தது.

அதில் நான் தெரிந்து கொண்டவற்றில் ஒன்று, திரைக்கதை ஆசிரியர்கள் இலக்கிய பிரதியில் இருந்து எடுத்தாளும்போது எதைச் சொல்லவேண்டும் என்று நினைப்பதை விடவும், எதைச் சொல்லாமல் விடலாம் என்று முடிவு செய்வதில்தான் சிறந்த திரைக்கதையைத் தந்திருக்கிறார்கள்.

இதனை முக்கியமாக ஸ்டான்லி குப்ரிக்கிடம் பார்க்கலாம். அவர் அதிகமும் நாவலில் இருந்து திரைக்கதை வடிவத்தை தந்தவர்.

நாவல், சிறுகதை மட்டுமல்ல, ஒரு கட்டுரையையும், ஆவணத்தையும்கூட படமாக எடுக்க முடியும்.

இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும், EVEN THE RAIN, FLOWERS OF WAR, UNBELIVEBLE சில உதாரணங்களே.

இதில் UNBELIEVABLE நெட் சீரிஸ். புலிட்சர் விருது வாங்கிய ஒரு கட்டுரையை எடுத்திருக்கிறார்கள்.

கட்டுரையை வாசித்துவிட்டு அந்தத் தொடரைப் பார்க்கும்போது திரைக்கதை ஆசிரியர் அந்த மொத்த கட்டுரையிலும், சம்பவத்திலும் எதை முன்னிலைப்படுத்தினர் என்பது புரியும்.

எந்த உணர்வை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது ஒரு திரைக்கதை ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வேண்டியது.

எழுத்தாளர்கள் திரைக்கதை ஆசிரியர்கள் ஆவதற்கு எப்படி டெக்னிக் தெரிந்திருக்க வேண்டுமோ, அது போல ஒரு திரைக்கதை ஆசிரியர் வாசகராக இருக்கவேண்டியது இன்னும் அவசியமாகிறது.

இலக்கியமும் திரைப்படமும் தன்னையறிந்தும் அறியாமலும் அப்போது தான் சங்கமிக்கும். நல்ல நேர்காணல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment