சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவும், பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமைந்தது.
கடந்த 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, சுமார் 100 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் முதல்முறையாக இந்தாண்டு நடத்த தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி வரை போட்டி நடைபெறுவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
முதன்முதலில் போட்டி நடைபெற உள்ளதால் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவக்க விழா நடைபெற்றது.
கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில், இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் டீசரை ரஜினிகாந்த் வெளியிட்ட நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் அவர் கலந்துகொண்டார்
. இதேபோன்று நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசனின் கம்பீர குரலில், தமிழர்கள் பெருமையை ஆடியோவாக பதிவுசெய்து ஒலிக்கவிட்டு அதற்கேற்ப கலைஞர்கள் நடித்து காண்பித்த விதம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே’ என்ற அவரது காந்த குரல் ஆரம்பித்து, தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
இதேபோல் இளம் வயதிலேயே இசைத்துறையில் சாதனை படைத்து வரும் லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ இசை நிகழ்ச்சி விழாவின் ஹைலட்டாக அமைந்தது.
கண்ணைக் கட்டிக் கொண்டும், ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை அவர் வாசித்ததும் பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது.
அதேநேரத்தில் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு, மற்றும் பின்னணி பாடகி தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் இசைக்கப்பட்டு அதற்கேற்ற நடனம் ஆடப்பட்டது.
இந்தப் பாடலை தீ பாடியநிலையில், மாரியம்மாளும் கலந்து கொண்டார். அதேபோல், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் மணற் ஓவியங்களையும், தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அடையாளங்களையும் மணல் ஓவியங்களையும் வரைந்து சர்வம் படேல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.