ஆன்மிக உளவியல் தொடர் – 2
கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணி புரிந்துவந்த ஒருவர், மனநல ஆலோசகரிடம் வந்தார். அவர் பணிபுரிந்த கல்லூரி, நாகரிகத்துக்குப் பேர்போன ஒரு வர்த்தக நகரில் இயங்கிக் கொண்டிருந்தது. இவர் தமிழகத்தின் தென்பகுதியைச் சார்ந்தவர்.
அவரது பிரச்சினை, அவரது வகுப்பு மாணவிகளின் நடையுடை பாவனைகள்தாம். உடைக் கட்டுபாடு என்பதை அதிகம் வலியுறுத்தாத, இருபாலரும் படிக்கும் கல்லூரி.
தனது வகுப்பில் மாணவிகளின் உடைகள், அவர்கள் அணிந்துகொண்டு வரும் விதமும் தன்னை மிகவும் சஞ்சலப்படுத்துவதாகவும் அதை வெளியில் சொல்ல முடியவில்லை எனவும் கூறினார்.
திருமணமாகாத அவருக்கு அதைப் பற்றிய நினைவுகள் தொடர்ந்து மனதில் வந்து சஞ்சலப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்துகொண்டு இவ்வாறு நினைப்பது குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதாகவும் கூறினார்.
அவர் இன்னும் ஒரு படி மேலே சென்று, அவ்வாறு தான் நினைப்பதை அந்தப் பெண்கள் எப்படியோ தெரிந்துகொண்டு தன்னை மேலும் அமைதியிழக்கச் செய்வதுபோல நடந்துகொள்வது போலத் தோன்றுவதாகவும் அது தனக்குள் கூடுதலான அவமான உணர்வை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
மன நல ஆலோசகர் அவரிடம் மேலும் பல விவரங்களைக் கேட்டறிந்தார். இறுதியாக ஒரு யோசனை சொன்னார்.
அந்தப் பேராசிரியர் அவரது வகுப்பில் உள்ள மாணவியைப் பற்றியும் தனித் தனியாக என்னவெல்லாம் மனதில் தோன்றுகிறது என்பதைத் தடையின்றி எண்ணங்களை தடுக்காமல் அதன் போக்கில் போகவிட்டு கவனிக்கச் சொன்னார்.
அதை அந்த அந்த ஆசிரியர் உடனடியாக மறுத்து, ‘அது சரியாக இருக்காது, இது போன்ற நினைப்பு வரக் கூடாது அதற்கான வழியைத் தெரிந்துகொள்ளத்தான் உங்களிடம் வந்தேன். நீங்கள் அதைத் தொடர்ந்து நினைக்கச் சொல்கிறீர்களே? அது தவறல்லவா?’ என்று கேட்டார்.
அதற்கு, மனநல ஆலோசகர், ‘கவலைப்படாதீர்கள். நான் சொல்கிறபடி செய்யுங்கள். ஒவ்வொரு மாணவியைப் பற்றியும் உங்களது கற்பனை எந்த அளவுக்குப் போகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பின் அதை யதார்த்தத்தோடு பொருத்திப் பார்த்தால் மனம் தெளிவடையும்’ என்றார்.
மனநல ஆலோசகர் அப்படிச் சொன்னதும் ஆசிரியருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவ்வாறு செய்து பார்த்தார். அதன் பின் அவரது குழப்பம் தீர்ந்தது. அந்த அனுபவத்தை அவரே மனநல ஆலோசகரிடம் கூறினார்.
“நீங்கள் சொன்னீர்கள் என்பதால் என் மனதை அதிகமாக சஞ்சலப் படுத்திய பெண்ணைப் பற்றிய கற்பனையிலிருந்து ஆரம்பித்தேன்.
மனதை அதன் போக்கில் போக விட்டேன். அப்போதுதான், இதெலாம் வெறும் கற்பனையாக மட்டும்தான் நினைக்க முடியுமே தவிர, நிகழ்காலத்தில் எதுவும் நடக்க முடியாது எனக்குப் புரிந்தது.
ஒரு வேளை அதிகத் தூண்டுதலில் எதையாவது முயற்சித்தால், அதற்கான விளைவுகளும் மனதில் தோன்றியது. அப்போதுதான் அந்தக் கற்பனை விமானம் தரைதட்டி நின்றது.
எல்லாமே வீணான எண்ணங்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இனி எனக்குத் தடுமாற்றம் வராது” என்றார்.
அடுத்து மன நல ஆலோசகர் கூறிய விஷயம் முக்கியமானது. ஆன்மிகத்தோடு தொடர்புகொண்டது.
“உங்களுக்கு அந்தப் பெண்களைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று நினைக்க வேண்டுமானால், முதலில் அந்த எண்ணங்களின் மீதான ஆர்வத்தைக் குறையுங்கள்” என்றார்
இதையேதான் ரமண மகரிஷி, “குறிப்பிட்ட வகையிலான எண்ணங்களை நிறுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், முதலில் அதன் மீது ஆர்வம் காட்டுவதை நிறுத்துங்கள். இதுதான் எண்ணங்களை நிறுத்த ஒரே வழி” என்று கூறியிருக்கிறார்.
இதைத்தான் மனநல ஆலோசகரும் தெரிவித்தார்.
ஜே. கிருஷ்ணமூர்த்தி, “மனம் சஞ்சலப்பட்டால் தடுக்காதீர்கள். அதன் போக்கில் போக விடுங்கள். அதன் வீச்சைக் கண்டறியுங்கள். தடுமாற்றங்கள் முழுதுமாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அது மறையும்” என்று கூறியதற்காகான காரணமும் இதுதான்.
இது உளவியல் சார்ந்த விஞ்ஞானம். இந்த புரிதல் காரண காரியங்கள், செயல் / விளைவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
அவை மட்டுமே மன சஞ்சலங்களுக்கு, தடுமாற்றங்களுக்கு பதிலாக இருக்க முடியாது. இவற்றுடன் ஆன்மிகமும் சேர வேண்டும்.
நாமாக எதையும் தேர்வு செய்து சேர்க்கத் தேவையில்லை. சிறு வயதிலிருந்து நமக்குச் சொல்லப்பட்ட, கற்பிக்கப்பட்ட, தெரியவந்த மதிப்பீடுகள் நமது மனதில் எப்போதும் இருக்கும்.
அவற்றில் பெரும்பாலானவற்றை, அவை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகளை நாம் நமது அன்றாட வாழ்க்கையில், பின்பற்றாமல் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் பதிவுகளாக நமது மனதிலேயே தங்கியிருக்கும்.
அவை மூலமாகத்தான் நாம் எதிர்நோக்கும் அனுபவங்கள், சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்தையும் புரிந்துகொள்கிறோம். நல்லவை /கெட்டவை, வேண்டியவை / வேண்டாதவை, நியாயம் / அநியாயம் என ஆரம்பித்து எல்லா வகையான புரிதல்களும் இதன் மூலமாகவே நிகழ்கின்றன.
இதற்கும் பக்தி, வழிபாட்டு முறைக்கும் சம்பந்தம் இல்லை.
நமக்கானவை, நமது, குலம், இனம் சாதி, மதம் ஆகியவற்றுக்கானவை என்ற கட்டமைப்போடுதான் ஆன்மிகம் நமக்கு அறிமுகமாகிறது.
நமக்கு வாழ்க்கை அனுபவங்கள் கூடுதலாக ஆக, நாம் இயல்பாகவே நாம் உள்ளீர்த்துக் கொண்ட இந்த படிமங்கள் மூலமாகவே அனைத்தையும் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ புரிந்துகொள்கிறோம்.
இந்தப் புரிதல்கள்தாம் எண்ணங்களை உருவாக்குகின்றன.
கண்ணாடி வழியாக பார்த்துப் பழக்கப்பட்டவருக்கு, நாளடைவில் கண்ணாடி வழியாகத்தான் பார்க்கிறோம் என்கிற உணர்வு மறைந்து போகிறதல்லவா? அது போலத்தான் இதுவும்.
ஆன்மிகமும் உளவியலும் ஒன்றன் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இது இயல்பாகவே நடந்துவருகிறது.
அது எப்படி என்று பார்க்கலாம்…
– தனஞ்செயன்