ஒரு திரைப்படம் காட்டும் பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள், பின்னணியைத் தாண்டி விரியும் கதைதான் பார்வையாளர்களைத் திரும்பத் திரும்ப யோசிக்க வைக்கும்.
ஒரு கதையில் புதிர்களைப் புகுத்துவது மட்டுமே அதற்கான உத்தி அல்ல. நம் கண்ணில் விரியும் வாழ்வை முழுமையாக உள்வாங்கும்போது கூட அது நிகழும்.
அத்திரைப்படம் உருவாக்கும் மாற்றம் நம்மிலும் கொஞ்சமாய்த் தாக்கம் ஏற்படுத்தும்.
பகத் பாசில் நடிப்பில், சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், மகேஷ் நாராயணன் எழுதி, ஒளிப்பதிவு செய்துள்ள ‘மலையான் குஞ்சு’ திரைப்பாம் அத்தகைய தாக்கத்தை விதைக்கிறது.
ஆனால், அது போதுமானதாக இருக்கிறதா இல்லையா என்பதைப் படம் முடிந்தபிறகே ஒருவரால் உணர முடியும்.
வன்மத்தில் துவழும் மனம்!
ஒரு மலையோர கிராமத்தில் தாய் சாந்தம்மாவுடன் (ஜெயா குரூப்) வசித்து வருகிறார் அனில்குமார் (பகத் பாசில்). டிவி, லேப்டாப், கம்ப்யூட்டர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாவற்றையும் ‘ரிப்பேர்’ செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறார்.
சகோதரி சந்தியா (ரஜிஷா விஜயன்), திருமணத்திற்கு முந்தைய இரவன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த தீபு (அர்ஜுன் அசோகன்) உடன் வீட்டை விட்டுச் சென்றதே இதற்குக் காரணம்.
இதனாலேயே, அனிலின் தந்தை ராதாகிருஷ்ணன் (ஜாபர் இடுக்கி) தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
தந்தையின் மரணம் ஏற்படுத்திய வடுவினால், தங்கையையும் அவளது குடும்பத்தினரையும் அறவே வெறுக்கிறார் அனில்.
அதே வன்மத்தை, அப்பகுதியில் வசிக்கும் மற்றவர்களிடமும் காட்டுகிறார். ஒரு விசில், குழந்தையின் அழுகை என்று எந்த சத்தமானாலும், அது அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
அனில் வீட்டின் அருகே வசிக்கும் சுனி – ஷைனி தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
விடியற்காலை 3 மணிக்கே எழுந்து எலக்ட்ரானிக்ஸ் வேலைகளைக் கவனிக்கும் அனிலுக்கு, அக்குழந்தையின் அழுகை எரிச்சலூட்டுகிறது. இது தொடர்கதையாகவே, அத்தம்பதியரை எரிச்சலூட்டும் விதமாகச் செயல்படுகிறார்.
இந்த சூழலில், ஒருநாள் இரவு அப்பகுதியில் அதிகளவில் மழை பெய்கிறது. வெள்ளத்தில் இருந்து தப்ப, அரசு ஏற்பாடு செய்த இடத்திற்குச் செல்வதாகச் சொல்கிறார் சுனி.
ஆனால், தானும் சாந்தம்மாவும் எங்கும் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டு தூங்கச் செல்கிறார் அனில். அடுத்த நொடியே, அப்பகுதி முழுக்க மண் சரிவு ஏற்படுகிறது.
அங்கிருந்த மக்கள் என்னவானார்கள்? அனில் உயிர் பிழைத்தாரா என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது படத்தின் பின்பாதி.
இயற்கையின் கோரத் தாண்டவம் எவ்வாறு ஒரு மனிதனின் மனதில் படிந்த சாதிய வன்மத்தைத் துடைத்தெறிகிறது என்பதுதான் ‘மலையான் குஞ்சு’வின் மையம்.
அதற்காக, திரையை நோக்கி வசனம் பேசும் வாய்ப்பு எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த வித்தியாசம்தான் இப்படத்தைக் கொண்டாடவும் கைவிடவும் வைக்கும் ஒரே அம்சம்.
நுட்பமான காட்சியாக்கம்!
ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் விசில் சத்தம் அனிலிடம் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. பார்க்கச் சாதாரண காட்சியாகத் தெரிந்தபோதும், அப்பாத்திரத்தின் இயல்பு என்னவென்பது அவ்விடத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது.
அதன்பிறகு இடைவேளை வரை, ஏன் அந்த பாத்திரம் அப்படி மற்றவர்களிடம் நடந்துகொள்கிறது என்பதற்கான விளக்கம் சின்னச் சின்ன பிளாஷ்பேக்குகள் மூலமாகச் சொல்லப்படுகிறது.
இறந்துபோன தந்தையே நேரில் வந்து ‘செத்தபிறகு சாதி எல்லாம் கிடையாதுடா’ என்று அனிலிடம் சொல்கிறார். அது கனவுக்காட்சி என்றபோதும், அப்பாத்திரம் கைக்கொண்டிருக்கும் பகையுணர்வை அடியோடு நொறுக்குகிறது.
பக்கத்துவீட்டு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு ‘பொன்னி’ என்று அதன் பெயரைச் சொல்லி அழைக்கும்போதே அம்மாற்றம் தெரிந்துவிடுகிறது.
அதன்பிறகு ஒரு உயிர் இன்னொரு உயிரைக் காப்பாற்றும் போராட்டமாகப் படம் மாறிவிடுகிறது.
ஒரு படத்தொகுப்பாளராகத் தன் திரை வாழ்வைத் தொடங்கிய மகேஷ் நாராயணன், ’மலையான்குஞ்சு’வின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
முழுக்க அனில்குமார் எனும் பாத்திரத்தின் பார்வையிலேயே நுட்பமான ஆக்கத்துடன் மொத்த திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்.
மண் சரிவின் இடையே பகத் பாசில் மேலெழுந்து வரும் காட்சிகள், நாமே ஆபத்தில் சிக்குண்டிருக்கும் உணர்வை உண்டாக்குகிறது.
எந்தக் காட்சியும் தொய்வை உண்டாக்காதவாறு, சலிப்பை உருவாக்காதவாறு அருமையாக படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் அர்ஜு பென்.
ஒரு மலையடிவாரப் பகுதியின் இயல்பைத் திரையில் கனகச்சிதமாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குனர் சஜிமோன். ‘மெலோடிராமா’வாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், பாத்திரங்களின் உணர்வுகளை மிகக்கவனமாகத் திரையில் இடம்பெறச் செய்திருக்கிறார்.
இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பகத் பாசிலின் அறிமுகக் காட்சியும் அதற்கடுத்தாற்போல அவர் அவஸ்தைக்குள்ளாகும் இடமும் புல்லாங்குழலின் வெவ்வேறு துவாரங்களில் இருந்து எழும் ஒலியால் நிறைகின்றன.
உலகின் ஏதோ ஒரு மூலையில் ‘மலையான்குஞ்சு’ பார்க்க ஒருவர் முற்பட்டால், அதற்கு ரஹ்மான் ஒரு காரணமாக இருப்பார் என்பதை மறுக்க முடியாது.
முன்பாதி முழுக்க மெலடியான பாடல்களாலும் மென்மையான பின்னணி இசையாலும் நெகிழவைத்தவர், பின்பாதியில் மட்டும் அவ்வப்போது தன் ‘வழக்கமான’ ஓலத்தை இடம்பெறச் செய்திருக்கிறார்.
படம் முழுக்க பகத் பாசில் மட்டுமே நிறைந்திருக்கிறார். மற்ற பாத்திரங்கள் அவரைச் சுற்றி மட்டுமே நடமாடுகின்றன.
அதற்கேற்ப, ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளான முகபாவத்தை படம் முழுக்க கையாண்டிருப்பது சிறப்பு. அதற்கு மாறாக, கிளைமேக்ஸ் காட்சியில் அவரது உடல்மொழி அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.
பகத்தின் தங்கையாக வரும் ரஜிஷாவுக்கோ, அவரது கணவராக வரும் அர்ஜுன் அசோகனுக்கோ பெரிதாக வாய்ப்பில்லை.
ஆனாலும், கிடைத்த இடைவெளியில் இருவரும் நடிப்பில் ‘கிடா’ வெட்டியிருக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இந்த கதி என்பதால் ஜாபர் இடுக்கி, இந்திரன்ஸ் உட்படப் பலருக்கும் முகம் காட்டும் வாய்ப்பு மட்டுமே.
பாதியில் முடிந்த விருந்து!
திரையில் நிறைந்திருக்கும் யதார்த்தம், நுணுக்கமான உணர்வுகள், சினிமா பார்க்கும் உணர்வைச் சிறிதும் ஏற்படுத்தாத திரைக்கதை ட்ரீட்மெண்ட், முதல் மழை கொண்டு மண் வாசனையுடன் இசை என்று பல அம்சங்கள் இருந்தும் மொத்தப்படத்தையும் பார்த்தபிறகு, ஒரு விருந்தில் உணவுண்டிருக்கும்போதே பாதியில் எழுந்த உணர்வு மேலிடுகிறது.
ஒரு பாத்திரத்தின் மன மாற்றத்தை மிக அழுத்தமாகத் திரையில் பார்த்தே பழக்கப்பட்டது அதற்கான காரணமா என்று தெரியவில்லை.
ஆனாலும், இன்னும் கொஞ்சம் விலாவாரியாக காட்சிகள் இடம்பெற்றிருக்கலாமோ என்ற அங்கலாய்ப்பு பெருகுவதை மறுக்க முடியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம், ‘மலையான் குஞ்சு’வை பார்த்துவிட்டு குறைவான பட்ஜெட்டில் நிறைவான தரத்தில் திரைப்படங்களை உருவாக்கும் உத்வேகம் இளம் இயக்குனர்களிடம் பெருகும்.
அந்த எண்ணமே, படம் முழுக்க பின்னணி இசையுடன் ஒன்றிணைந்த மழைச்சத்தம் போல நம்முள் நிறைகிறது.
-உதய் பாடகலிங்கம்