காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்
விளையாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காமன்வெல்த் திருவிழா இன்று இங்கிலாந்தில் துவங்குகிறது.
பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்குப் பின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த். இதன் 22வது சீசன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று துவங்கி, ஆக. 8 வரை நடக்கவுள்ளது.
72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 111 வீரர், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 நட்சத்திரங்கள் 16 வகையான போட்டிகளில் 141 பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
பதக்க வேட்டை:
காமன்வெல்த் வரலாற்றில் துப்பாக்கி சுடுதல் (135), பளுதுாக்குதல் (125), மல்யுத்தம் (102) என மூன்று விளையாட்டில் இந்தியாவின் பதக்க வேட்டை அதிகம். கடந்த 2018 கோல்டு கோஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற 26 தங்கத்தில் துப்பாக்கிசுடுதலில் மட்டும் 7 கிடைத்தன.
ஆனால் பர்மிங்காமில், துப்பாக்கிசுடுதல் நீக்கப்பட்டது சர்ச்சை கிளப்பியது. 2002 முதல் தொடர்ந்து பதக்க பட்டியலில் இந்தியா ‘டாப்-5’ இடத்தை பெறுகிறது. இம்முறை துப்பாக்கிசுடுதல் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மல்யுத்தம், பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதலை இந்தியா அதிகம் எதிர்பார்த்துள்ளது.
பாட்மின்டனில் இந்தியா இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கம் வென்றது. 2018ல் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது இந்தியா. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற சிந்து, இளம் வீரர் லக்சயா சென், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். ஆறு பிரிவுகளில் பங்கேற்கும் இந்தியா அதிக பதக்கம் வெல்லும் என நம்பப்படுகிறது.
பளுதுாக்குதல் பலமா
பளுதுாக்குலில் 2018ல் 5 தங்கம் உட்பட 9 பதக்கம் வென்றது இந்தியா. இம்முறை 15 பேர் பதக்கம் வெல்வர் என நம்பலாம். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, பிந்தியாராணி, பாப்பி, ‘யூத்’ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜெரிமி, அசிந்தா, அஜய் சிங் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மல்யுத்தம் எதிர்பார்ப்பு
இந்தியாவுக்கு மூன்றாவது அதிக பதக்கம் கிடைக்கும் போட்டி மல்யுத்தம். தற்போது ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவிக்குமார், வெண்கலம் கைப்பற்றிய பஜ்ரங் புனியா உட்பட 12 பேர் களமிறங்குகின்றனர். 2014, 2018ல் சாதித்த வினேஷ் போகத், மீண்டும் அசத்தினால், காமன்வெல்த்தில் ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆகலாம்.
லவ்லினா நம்பிக்கை
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு லவ்லினா, நிகாத் ஜரீன், அமித் பங்கல் கைகொடுக்க உள்ளனர். ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், தீபிகா பல்லீகல் சாதிக்க உள்ளனர்.
சர்வதேச அளவில் ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரேசர் (தடகளம்), இங்கிலாந்து நீச்சல் வீராங்கனை ஆடம் பியாட்டி உள்ளிட்டோர் அசத்த காத்திருக்கின்றனர்.
அசத்துமா ஹாக்கி
கடந்த 1934 ல் நடந்த இரண்டாவது காமன்வெல்த்தில் இருந்து இந்தியா பங்கேற்று வருகிறது. இதுவரை ஹாக்கியில் ஒரு தங்கம், 3 வெள்ளி என 4 பதக்கம் தான் வென்றது. 2018ல் வெறுங்கையுடன் திரும்பியது.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் அணி, ஆஸ்திரேலிய ஆதிக்கத்தை தகர்த்து வெண்கலம் வென்றது, பெண்கள் அணி 4வது இடம் பிடித்தது நம்பிக்கை தருகிறது. தவிர புரோ ஹாக்கி லீக்கில் சிறப்பாக செயல்பட்டதும், இந்தியாவின் பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளது.
ஜொலிக்குமா டேபிள் டென்னிஸ்
டேபிள் டென்னிசில் கடந்தமுறை இந்தியா 8 பதக்கம் வென்றது. இதில் மணிகா பத்ரா மட்டும் 4 பதக்கம் கைப்பற்றினார். இம்முறை சத்யன், ஐந்தாவது காமன்வெல்த்தில் பங்கேற்கும் ‘சீனியர்’ சரத்கமல் பதக்கம் வெல்வர் என நம்பலாம்.
தடுமாறும் தடகளம்
தடகளத்தை பொறுத்தவரையில் இந்தியா மொத்தம் 28 பதக்கம் தான் வென்றது. கடந்த முறை தலா 1 தங்கம், வெள்ளி, வெண்கலம் மட்டும் பெற்றது. தற்போது நீரஜ் சோப்ரா விலகியது, தனலட்சுமி, ஐஸ்வர்யா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியது, பதக்க வாய்ப்பை குறைத்துள்ளது.
எனினும் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (‘டிரிபிள் ஜம்ப்’), ஹிமா தாஸ் (200 மீ.,) மீது எதிர்பார்ப்பு உள்ளது.
கிரிக்கெட் அறிமுகம்
முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட் (‘டி-20’) அறிமுகம் ஆகிறது. 8 அணிகள் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் அணிகள் உள்ளன.
ஹர்மன்பிரீத் தலைமையில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, ஷபாலி அசத்தும் பட்சத்தில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
கொடியுடன் சிந்து
காமன்வெல்த் விளையாட்டில் இருந்து, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயத்தால் விலகினார். இதனால் இன்றைய துவக்க விழாவில் 2018 போல (கோல்டுகோஸ்ட்), மீண்டும் பாட்மின்டன் வீராங்கனை சிந்து, இந்திய தேசியக் கொடியை ஏந்தி வரவுள்ளார்.
ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிய இவர், காமன்வெல்த் விளையாட்டு ஒற்றையரில் 2 பதக்கம் (2014ல் வெண்கலம், 2018ல் வெள்ளி) வென்றுள்ளார்.