ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.
இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்ற பின்னர் 40 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கேப்டன் ஷிகர் தவான் 58 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்கள் எடுத்தார். கில் 98 ரன்கள் குவித்த நிலையில், போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது.
அப்போது இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இந்திய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனால் கில் சதம் அடிக்கும் வாய்ப்பு நலுவியது. மேலும் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்கள் முடிவில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பூரனும், பிரான்டன் கிங்கும் தலா 42 ரன்கள் குவித்தனர்.
சாய் ஹோப் 22 ரன்கள் அடித்தார். கெயில் மேயர்ஸ், புரூக்ஸ், கீமோ பால், ஜெய்டன் சீல்ஸ் ஆகிய வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
இந்தியா தரப்பில் சாகல் 4 விக்கெட்களையும், சிராஜ், தாக்கூர் தலா இரண்டு விக்கெட்களையும், அக்சர், கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒயிட் வாஷ் முறையில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.