ரவி சாஸ்திரி கருத்து
சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவித்தார்.
நிறைய ஆட்டங்கள் விளையாடுவதால் ஒருநாள் போட்டிகளில் குறிப்பாக கவனம் செலுத்த முடியவில்லை என்று காரணமாக கூறியிருந்தார். இது பல சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பியது.
ஒரு நாள் போட்டிகளில் உண்மையாக மாற்றங்கள் ஏதாவது தேவையா? அல்லது ஒவ்வொரு அணியின் ஆண்டு கிரிக்கெட் அட்டவணையில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பது குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன.
முதன் முதலில் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பித்த பொழுது 60 ஓவர்கள் விளையாடப்பட்டது.
1983ஆம் ஆண்டில் இந்தியா முதல் முறையாக சர்வதேச உலக கோப்பையை வென்ற பொழுது கூட ஒரு நாள் போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டு விளையாடப்பட்டது.
முதல் முறையாக 1977ஆம் ஆண்டில் 50 ஒருவர் போட்டி வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது, ஆனால் உலக கோப்பை என்று வரும் பொழுது 60 ஓவர்களே விளையாடப்பட்டது.
1987ஆம் ஆண்டிலிருந்து தான் உலக கோப்பையிலும் 50 ஓவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி டி20 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் அதிகமாக காணப்பட்டது.
வெறும் ஆறு முதல் ஏழு மணி நேரங்களுக்குள் முடிவடையும் 20 ஓவர் போட்டிகளை காண மக்கள் அதிக ஆர்வம் செலுத்தினர்.
குறிப்பாக முதல் டி20 உலக கோப்பையை இந்தியா வென்றதும், டி20 கிரிக்கெட் முறை மிகப் பிரபலம் அடைந்தது.
டி20 கிரிக்கெட் முறை பிரபலம் அடைய ஆரம்பித்த பிறகு தான் ஐசிஎல், ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்பொழுது உலக அளவில் கிரிக்கெட் என்றாலே அனைவரும் விரும்புவது டி20 கிரிக்கெட் முறையை தான்.
குறுகிய நேரத்தில் ஆட்டம் முடிந்தாலும், ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அமையும் விதமாக டி20 கிரிக்கெட் முறை அமைகிறது.
இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் போட்டி மிக நீண்ட காலமாக 50 ஓவர்களே விளையாடப்பட்டு வருகிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்று வரும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாம் போட்டியில் வர்ணனையாளராக பேசிக்கொண்டிருந்த ரவி சாஸ்திரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ஓவர்களை குறைத்து விளையாடுவதில் எந்த தவறும் இல்லை. குறிப்பாக சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மிக நீண்ட காலமாக 50 ஓவர்களில் விளையாடப்பட்டு வருகிறது.
இதைக் குறைக்க நினைப்பதில் எந்த தவறும் இல்லை. நாங்கள் 1983ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற பொழுது கூட 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகள்தான் விளையாடினோம்.
பின்னர் அது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்பொழுது அதை 40 ஓவர்களாக குறைக்கலாமே.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் வெறும் ஆறு அணிகள் மட்டுமே விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி சில மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.
உலக அளவில் முதல் ஆறு அணிகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும் பொழுது குவாலிட்டிதான் முக்கியம் குவாண்டிட்டி கிடையாது என்றும் கூறியிருந்தார்.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வெள்ளை பந்துகள் ஆட்டங்களை நாம் உபயோகப்படுத்தலாம் என்றும் யோசனை கூறியிருந்தார்.
ஒருவகையில் பார்க்கும்போது இந்த கருத்து ஏற்கக் கூடியது ஏனென்றால் அனைத்து அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது முழுமையான ஆட்டங்களை வெளிப்படுத்துவதில்லை.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு இன்னிங்ஸ்களோடு 5 நாட்கள் விளையாடப்படுகிறது ஆனால் பல ஆட்டங்கள் ஐந்து நாட்களுக்கு முன்பே முடிந்து விடுகின்றன.
சமீபகாலமாகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த அணி வெல்ல போகிறதா அந்த அணி வெல்லப்போகிறதா இன்று விவாதமே இருக்கிறது, முன்பெல்லாம் டெஸ்ட் மேட்ச் என்றாலே அது அதிகபட்சமாக ட்ராவில் தான் முடியும்.
மேலும் பல வீரர்கள் நிதானமாக களத்தில் நின்று விளையாடி இமாலய ஸ்கோர்களை குவித்தனர்.
தற்போது டி20 கிரிக்கெட் முறை மிகப் பிரபலமானதால், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பல பேர் அடித்து விளையாடுவதை தான் நாம் பார்க்க முடிகிறது.
ஆகையால் கிரிக்கெட்டின் குவாலிட்டியை நிலைநிறுத்த டெஸ்ட் போட்டிகளையும், ரசிகர்களை தவிர சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளையும் விளையாடலாம்.
குறிப்பாக ஒரு நாள் போட்டிகள் 50 ஓவர்களில் இருந்து குறைத்து 35 ஓவர்களாகவோ அல்லது 40 ஓவர்களாகவோ விளையாடலாம்.
இதுகுறித்து ரவி சாஸ்திரியின் கருத்தை ஏற்க கூடியதாக தான் இருக்கிறது. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்களாகிய உங்களுடைய கருத்து என்ன?
– இளவரசன்