“பையனைப் படிக்க வைங்க… அவன் நிச்சயம் முன்னுக்கு வருவான்”!

– கலாமின் பெற்றோருக்கு அவரது ஆசிாியா் சொன்ன அறிவுரை
#

தன்னுடைய வாழ்வில் கடந்த சில சிரமங்களை ராமநாதபுர மாவட்டத்துக்கே உரித்தான பேச்சு வழக்கோடு பேசிய அப்துல்கலாமை சென்னையில் சந்தித்தபோது பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் :

“ராமேஸ்வரம் பஞ்சாயத்து ஸ்கூலில் எட்டாவது படிப்புப் படித்துக் கொண்டிருந்த நாற்பது மாணவர்களில் நானும், தலைமை ஆசிரியர் மகன் சிவராமனும் பாஸ் பண்ணினோம்.

அதற்குப் பிறகு மேலே படிக்க ராமநாதபுரம் போக வேண்டும்.

எங்கள் வீட்டில் அப்போது கஷ்டம். பள்ளியில் இருந்த சிவசுப்பிரமணிய அய்யர் என்கிற அறிவியல் ஆசிரியருக்கு என் மீது பாசம்.

“நீ படிச்சு முன்னேறணும்” என்று அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துவார்.
எட்டாவது வகுப்பில் நான் பாஸ் ஆனதும் என் வீட்டிற்கு வந்தார் சிவசுப்பிரமணிய அய்யர்.

“பையனைப் படிக்க வைங்க. அவன் நிச்சயம் முன்னுக்கு வருவான்” என்று சொல்லி ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் என்னைச் சேர்த்தார்.
விடுதியில் சேர மாதக்கட்டணம் பத்து ரூபாயையும் கட்டி என்னைச் சேர்த்தவர் அந்த ஆசிரியர்.

அன்றைக்கு அவர் அப்படிப் பண்ணியிருக்காவிட்டால் நான் இன்றைக்கு இப்படி இருந்திருக்க மாட்டேன்.

“விருப்பம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு–மூன்றும் இருந்தால் முன்னேறிவிடலாம்” என்று உற்சாகப் படுத்தினார் அவர்.

திருச்சியில் தூய யோவான் கல்லூரியில் இயற்பியல் இளங்கலை முடித்து சென்னையில் உள்ள ‘மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி’ என்கிற எம்.ஐ.டி.யில் சேர ஆசை.

ஆனால் பணமில்லை. சேருவதற்கு ஆயிரம் ரூபாயாவது வேண்டும் என்ற நிலை.
அப்போது தன் கைகளில் இருந்த தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார் என்னுடைய சகோதரியான சஹாரா.

ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டும் என்றால் மூன்று பேர் முக்கியம். அம்மா, அப்பா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர். நல்ல குணமான வாழ்வு வாழ வேண்டும் என்றால் இவர்களால் தான் தரமுடியும்.

மேலே சொன்ன மூவரும் சேர்ந்து பதினைந்து வயதுக்குள் ஒரு குணமுள்ள குழந்தையாக மாற்ற முடியாவிட்டால், கடவுளோ, பிசாசோ, எந்த அரசுச் சட்டமோ மாற்ற முடியாது.

என்னுடைய அனுபவத்தில் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்”-சொல்கிறார் கலாம்.

– மணா-வின் ‘கனவின் பாதை’ நூலில் இருந்து ஒரு பகுதி

Comments (0)
Add Comment