ரூ. 28,732 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல்!

– பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ.28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம்  ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனாவுடன் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரூ. 28,732 கோடிக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்கமான மற்றும் கலப்பு முறை போரின் தற்போதைய சிக்கலான போா் நடைமுறைகளை திறம்பட சமாளிக்கும் வகையில் 4 லட்சம் இலகு ரக தானியங்கி துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இது இந்தியாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சிறிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

அதோடு, சிறிய ரக ஆயுத உற்பத்தியில் இந்தியா தற்சாா்பு நிலையை அடைவதையும் இது ஊக்குவிக்கும்.

எல்லையில் எதிரிகள் தொலைதூரத்திலிருந்து குறிபாா்த்து தாக்கும் திறனுடைய துப்பாக்கிகள் (ஸ்னைஃபா்) மூலமாக நடத்தும் தாக்குதலில் இருந்தும், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைளின்போதும் வீரா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் விதமாக,

பிஐஎஸ்-6 அளவு இந்திய தரத்துடன் கூடிய பாதுகாப்பு அளிக்கும் குண்டு துளைக்காத ஆடைகளைக் கொள்முதல் செய்யவும் டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது” என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment