வீரர்களைக் காவுவாங்கும் கிரிக்கெட் அரசியல்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 31 வயதிலேயே சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது இயல்பான விஷயம் கிடையாது.

எப்படி பார்த்தாலும் ஸ்டோக்ஸ் இன்னும் சில ஆண்டுகள் ஆடியிருக்கலாம்.

தொடர்ந்து அதிக போட்டிகள் விளையாடிக்கொண்டே இருப்பதால் தனது உடல் ஒத்துழைக்காததை ஒரு காரணமாக கூறினார்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டிகள், டி20 என்று மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களில் மாறி மாறி விளையாடுவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்டோக்ஸின் இந்த முடிவு இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி அதிகப் போட்டிகளில் விளையாடுவதாகவும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் நடுவில் வீரர்களுக்கு தக்க ஓய்வெடுக்க நேரமில்லை என்றும் குற்றசாட்டுகள் எழுகின்றன.

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், அவர் இங்கிலாந்து அணியில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடுத்தடுத்துப் பல போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமலேயே அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் விளையாடிக் கொண்டிருந்த பொழுது போட்டிகளின் எண்ணிக்கை நெருக்கடியாக உள்ளது என்றும் என்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் நான் சொன்னேன்.

அதனால் நான் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் என்னை டி20 போட்டிகளிலிருந்து என்னை நீக்கியது” என்று பதிவிட்டிருக்கிறார்.

கெவின் பீட்டர்சன் கடந்த 2012 ஆம் ஆண்டில் தனது ஓய்வு அறிவித்த பொழுது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

ஏனெனில் அந்த சமயம் அவர் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார்.

இங்கிலாந்து பேட்டிங் லைனில் ஒரு மிகப் பெரிய தூணாக அமைந்திருந்தார். அப்பொழுது அவர் தன் ஓய்வை மிக சீக்கிரமாகவே அறிவித்துவிட்டார் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பின்னர் அவரே விருப்பம் தெரிவித்த பிறகும் அவர் இங்கிலாந்து டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

பீட்டர்சனுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையேயான உறவு எப்பொழுதும் கரடுமுரடாகவே இருந்தது.

பீட்டர்சன் இங்கிலாந்துக்காக 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடி மூன்று வடிவங்களிலும் முறையே 8181, 4440, 1176 ரன்கள் எடுத்துள்ளார்.

பின்னர் சில ஐபிஎல் தொடர்களிலும் விளையாடினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை டி20 அணியில் இருந்து நீக்கிய பொழுது பல முன்னால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் பல கேள்விகளை எழுப்பினார்கள்.

இருப்பினும் இங்கிலாந்து டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விளையாட்டில் அரசியல் என்பது புதிதல்ல. ஆனால் அந்த அரசியல் இன்னும் எத்தனை சிறந்த வீரர்களைக் காவுவாங்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் போன்ற அருமையான வீரரை இப்படி ஒரு காரணத்துக்காக விட்டுக் கொடுப்பது சரியானது அல்ல.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரிடம் தக்க காரணங்களைக் கேட்டு அதை சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.

கெவின் பீட்டர்சனுக்கு ஆனது போல பென்ஸ்டோக்ஸும் டி20 அணியிலிருந்து ஒதுக்கப்படுவாரா என்ற விவாதம் தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சூடு பிடித்திருக்கிறது.

ஐபிஎல் போன்ற தொடர்கள்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு முக்கியம் என்றால் இருதரப்பு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விளையாடாமல் இருப்பதே நல்லது என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தைச் சாடியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எது சரியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுத்துள்ளார்.

ஆனால், தற்பொழுது உள்ள சூழ்நிலை, இங்கிலாந்து அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு தகுந்த சூழ்நிலையாக இல்லை என்பதை எப்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உணர்கிறதோ அப்பொழுதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அமையும்.

இல்லையெனில் பென் ஸ்டோக்ஸ் போன்ற மிகச் சிறந்த திறமையான வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இழந்துகொண்டேதான் இருக்கும்.

இளவரசன்

Comments (0)
Add Comment