வாழும் காலத்தைப் பதிவு செய்த கவிஞன்!

நூல் அறிமுகம்:

கவிமுகிலின் கவிதை, கட்டுரை, புதினம் உள்ளிட்ட படைப்புகள் பற்றிய ஆய்வாளர்களின் திறனாய்வுக் கட்டுரைகளின் ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையும் அவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதாக வாழ்த்துரையில் நின்றநீர் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தனித்த அடையாளத்தை வகுத்துக்கொண்டிருக்கும் கவிமுகிலின் கவிதைகளில் காணப்படும் செய்திகள் நாவலின் மையக் கருத்தினை வெளிப்படுத்திக் கதை மாந்தரைத் திறனாய்வு செய்துள்ள முறைமை.

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய கட்டுரைகள் எனப் பல்வேறு சிந்தனைகளில் முகிழ்த்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

ராஜ்ஜா, பின்னலூர் மு. விவேகானந்தன், மு. முருகேஷ். பா. இரவிக்குமார், ஆதிரா முல்லை உள்ளிட்ட பத்து ஆய்வாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதை என்பது காலத்தின் கண்ணாடி.

கவிதையை வைத்தே கவிஞன் வாழ்ந்த காலத்தை மிகத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள்.

தான் வாழும் காலத்தைப் பதிவு செய்யாமல் எந்த கவிஞனும் இருக்கமுடியாது. அதில் கவிமுகிலும் தப்பவில்லை என்கிறார் ராஜ்ஜா.

புவி வடத்தின் பாரம் குறைப்பதற்கா
தோண்டப்படுகிறது கொத்தாய் மடியும்
கொள்ளை நோயின் கல்லறைக் குழிகள்

“1998 ஆம் ஆண்டின் ஜனவரியில் தமிழ் ஹைக்கூவின் பேரலையென வெளிவந்தது. கவிஞர் கவிமுகிலின் சூரியத் துளிகள் ஹைக்கூ கவிதை நூல்.

ஹைக்கூ நூல்களைத் தேடித் தேடி வாசித்துக்கொண்டிருந்த சூழலில் குமுதம் ஸ்பெஷல் இதழின் பல பக்கங்களில் சூரியத் துளிகள் நூலிலிருந்து ஹைக்கூ கவிதைகளும் கூடவே அதற்கான சிற்பங்களும் இடம்பெற்றிருப்பது கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்” என்று கூறும் மு.முருகேஷ்,

வெகுசன இதழ்களில் ஹைக்கூ கவிதைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறதே என்ற பெருமிதத்தோடுதான் அந்த நூலினை படிக்கத் தொடங்கினேன் என்கிறார்.

புயற்காற்றில் ஒரு போர்க்குரல் என்ற தலைப்பில் எழுதிய முனைவர் பா. இரவிக்குமார், “தமிழ் இலக்கியச் சூழலில் கவிஞர் கவிமுகிலுக்கு அறிமுகம் தேவையில்லை.

தாராபாரதியும் தமிழன்பனும் கவிமுகிலின் இரண்டு இலக்கிய விழிகள். இவர்களை உயிரில் சுமந்தே கவிமுகிலின் பயணங்கள் தொடர்ந்தன. தொடர்கின்றன” என்று அறிமுகம் தருகிறார்.

கவியரங்கக் கவிதைகள் பற்றி விமர்சித்துள்ள அவர், நிர்ப்பந்தத்திற்காகத் தலைப்புக் கொடுத்து எழுதப்பட்டதால், அவை முழுமையும் தரமானவை என்று சொல்லமுடியாது என்கிறார்.

எத்தனை தலைக்கணமும்
இங்குதான் இலக்கணம் இழக்கிறது

கவிமுகிலுக்குள் இருக்கும் தத்துவவாதியை வெளிக்கொணர்ந்த கவிதை கல்லறை என்று பாராட்டுகிறார் ரவிக்குமார்.

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலம், கருநீலம், ஊதா இவை வானவில்லின் ஏழு நிறங்கள். எட்டாவது நிறம் வானவில்லில் இல்லை என்று அழுத வானத்தின் கண்ணீரைத் துடைக்க எட்டாவது நிறமாக தன் தூரிகையால் காதலை எழுதியுள்ளார் கவிமுகில் என்று எழுதுகிறார் முனைவர் ஆதிரா முல்லை. இங்கு அவரது காதல் கவிதையைச் சுட்டிக்காட்டுகிறார்.

நீ இருந்துவிட்டால்
எது இல்லையென்றால் என்ன?

எது இருந்தாலும் காதல் இல்லாவிட்டால் வாழ்வு சுவைப்பதில்லை. எது இல்லாவிட்டாலும் காதல் இருந்தால் வாழ்வு சொர்க்கமாகிறது.

“கவிமுகிலின் கவிதைகளில் எழுத்து, சொற்களாலான மொழிக்கும் அப்பாலான ஒரு மனவுலகம் உள்ளது. அந்த மனவுலகுதான் படைப்பின் ரகசியமாகும்.

கவிஞர் கவிமுகிலின் உலகம் எழுத்துக்களுக்கும் சொற்களுக்கும் அப்பால் குறியீடுகளாலும் படிமங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் ஈஸ்வரி.

கவிஞர் கவிமுகிலின் படைப்புலகை ஆர்வத்துடன் கூர்மையான பார்வையுடன் ஆய்வாளர்கள் மறுபரிசீலனை செய்து கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

கவிமுகிலின் படைப்புப் பாதையில் ஒரு பயணம்:
கட்டுரைத் தொகுப்பு

வெளியீடு: கலையரசன் பதிப்பகம்
265/3, சக்தி கார்ஸ் வளாகம்,
வேளச்சேரி உள்வட்டச் சாலை,
ஆதம்பாக்கம், சென்னை – 88
விலை ரூ. 250

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment