மீள்பதிவு :
‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்று ஆச்சரியப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன சினிமாவில்.
கோடம்பாக்கத்தில் கிடக்கும் ஏதாவது கல்லை காட்டினால் கூட அதற்கும் ஒரு கதை சொல்வார்கள் சினிமாக்காரர்கள். அது உண்மையாகத்தான் இருக்கும்.
அப்படித்தான், வேறொரு படத்துக்கு போடப்பட்ட அரங்கத்தை வீணாக்க வேண்டாம் என்று ஒரு படத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அந்தப் படம் ‘அதே கண்கள்’!
ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அசோகன் உட்பட பலர் நடித்திருந்த மிஸ்டரி திரில்லர் படம் இது.
சி.திருலோகச்சந்தர் இயக்கிய இந்தப் படத்தின் மிரட்டலான மேக்கிங் அந்த காலகட்டத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.
ஹாலிவுட்டுக்கு இணையான.. என்று சொல்வார்களே அப்படித்தான்.
திரில்லர் படங்களுக்கு இசைதான் பலம். அதை, இசையமைப்பாளர் வேதா இதில் செய்திருந்தார்.
இந்தப் படம் உருவான கதை சுவாரஸ்யமானது. ஏவி.எம் நிறுவனம் ‘படிக்காத மேதை’ படத்தை இந்தியில் ‘மெஹர்பான்’ என்ற பெயரில் உருவாக்கியது. இதில், அசோக்குமார், சுனில்தத், நுதன், மெஹ்மூத், சசிகலா உட்பட பலர் நடித்திருந்தனர்.
பீம்சிங் இயக்கிய இந்தப் படத்துக்காக பிரமாண்டமாக செட் போட்டிருந்தார்கள். வழக்கமாக ஷூட்டிங் முடிந்ததும் செட்டை பிரித்துவிடுவதுதான் வழக்கம்.
ஆனால், இது அதிக செலவு செய்து போடப்பட்ட செட். அதனால் அதை பிரிக்க வேண்டாம் என்று நினைத்து, இந்த செட்டுக்காக ஒரு கதை ரெடி பண்ணுங்க என்றார் ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார்.
அப்படின்னா, இதுக்கு தகுந்தாப்ல த்ரில்லர் கதைதான் சரியா இருக்கும் என்று உருவாக்கப்பட்டதுதான் ‘அதே கண்கள்’.
பல த்ரில்லர் படங்களின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்ட கதைதான் இது. 1967 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.
இந்தப் படத்துக்காக, ஹீரோ ரவிச்சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பத்தாயிரம் ரூபாய்!
இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் உருவாக்கப்பட்டது.
‘அவே கல்லு’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் கிருஷ்ணா (ஹீரோ மகேஷ்பாபுவின் தந்தை) ஹீரோவாக நடித்தார்.
– அழகு