பெண்கள் மீசை வைப்பது சந்தோசமா, சங்கடமா?

பொதுவாக சில பெண்களுக்கு அரும்பு மீசை அரும்பியிருப்பதைப் பார்க்கலாம். அதை அவர்கள் அசூயையாக நினைப்பார்கள். அதிகமாக மஞ்சள் பூசி மறைக்க நினைப்பார்கள்.

சிலர் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். ஏழை எளியவர்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். இது இயற்கையின் விநோதங்களில் ஒன்றாக தொடர்கிறது.

இது சந்தோசமா சங்கடமா என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. கேரளத்தைச் சேர்ந்த
ஷைஜாவுக்கு மீசை முளைத்திருக்கிறது.

ஆனால், அவரோ கவலைப்பட்டு முடங்கிவிடவில்லை. மாறாக, பெருமையுடன் மீசையை முறுக்கிவிட்டு மிரட்டுகிறார்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது மீசையை சிலர் கேலி செய்வார்கள். சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஆனால், ஷைஜா எதற்கும் அலட்டிக்கொள்வதில்லை.

தன் வாட்ஸ் ஆப் முகப்பில் மீசையோடு உள்ள படத்தை வைத்து, தன் மீசையை மிகவும் விரும்புவதாகப் பதிவிட்டுள்ளார்.

“நீங்கள் ஏன் மீசை வைத்துள்ளீர்கள் என்று பலரும் கேட்பார்கள். எனக்குப் பிடித்திருக்கிறது என பதிலளிப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தன் புருவ முடியை திரெட்டிங் செய்துகொள்ளும் அவர், மேல் உதட்டுக்கு மேலே முளைக்கும் பூனை முடியை நீக்க விரும்பவில்லை. அப்படியே விட்டுவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த முடி அடர்த்தியான மீசையாக வளர்ந்தது. அதற்கும் அவர் கவலைப்படாமல், உற்சமாகிவிட்டார்.

மீசை இருக்கட்டுமே, அதனால் என்ன என்ற அளவுக்கு துணிச்சலாகிவிட்டார். இன்று மீசையில்லாமல் இருப்பதை ஷைஜாவால் யோசிக்க முடியவில்லை.

இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கு முகத்தில் முளைக்கும் முடியை நீக்குவதற்கு கிரீம்கள், மெழுகுகள் என பல கோடி வணிகமாக இருக்கிறது.

முற்போக்கான மாநிலமான கேரளாவிலும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.

ஷைஜாவின் மீசைக்கு குடும்பத்தினரும் நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். பிறகு வேறென்ன வேண்டும்?

பா. மகிழ்மதி

Comments (0)
Add Comment