சாத்தூர் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள கணித ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டதின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருவள்ளூர் கீழச்சேரியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி, மாடியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருக்கிறார்கள்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி அருகில் உள்ள உறைவிடப் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தால் ஏற்பட்ட கலவரம் ஒருவழியாக அடங்கித் தற்போது தான் அங்கு அமைதி திரும்பியிருக்கிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் மீண்டும் மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படும் நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்த கைதுகளும் நடக்கின்றன. ஏன் மாணவிகளின் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் நடக்கின்றன?
பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படும் நேரம் இது. அரசும், பல பள்ளி நிறுவனங்களும் கவனத்துடன் இருந்தாக வேண்டிய நேரமும் கூட.
பள்ளிகள் ஏன் மாணவிகளைப் பதற்றமடைய வைக்கும் சூழலில் இருக்கின்றன? எவ்வளவோ ஆசிரியர்கள் கல்வியைக் கற்றுத் தருவதில் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பணி மிகவும் போற்றத்தக்கது.
ஆனால், அதில் சில கரும்புள்ளிகளாகச் சில ஆசிரியர்கள் செய்யும் செயல்பாடுகள் வகுப்பறைகளில் எத்தகைய கலக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன? கல்வி கற்கப் போகும் மாணவிகள் ஏன் வாழ்வின் விளிம்பான எல்லைக்கு ஏன் தள்ளப்படுகிறார்கள்? அத்தகைய நிலைகளுக்குத் தள்ளுகிறவர்கள் எப்படி ஆசிரியர்கள் என்கிற கௌரவமான பெயரில் அழைக்க முடியும்?
பள்ளிச்சூழலில் குற்றவாளிகளாக நடமாடுகிற ஆசிரியர்கள் தொடர்ந்து எத்தனை குற்றங்கள் நடக்கக் காரணமாகி, பல மாணவிகளைத் தலைகுனிய வைத்து விடுவார்கள்?
முன்பு ‘ராக்கிங்’ என்கிற பெயரில் கல்விக்கூடங்களில் நடந்த வன்முறைகளைக் கடுமையான சட்டங்களின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததைப் போல, கடுமையான நடவடிக்கைகள் மூலமாகத் தான் மாணவிகள் மத்தியில் நிகழும் உயிரைப் போக்கிக் கொள்ள முயலும் செயல்பாடுகளைத் தடுக்க முடியும்.
- யூகி