மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்படி பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
மேலும், கடந்த 19-ம் தேதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக தலைமை செயலர் இறையன்பு, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 28ம் தேதி 2 நாள் பயணமாக சென்னை வர உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.