68-வது தேசிய விருது: 10 விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா!

இந்த ஆண்டுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆண்டு 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்களும், 28 மொழிகளில் 148 ஆவணப் படங்களும் தேசிய விருதுக்குப் போட்டியிட்டன.

இதில், கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதுடன், சிறந்த திரைக்கதைக்கான விருது மற்றும் அந்தப் படத்தில் நடித்த சூா்யா சிறந்த நடிகராகவும் அபா்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு புதுமுக இயக்குநா் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்துக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருதும் மண்டேலா படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த உறுதுணை நடிகைக்கான விருது லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும், சிறந்த படத்தொகுப்புக்கான விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கும், சிறந்த தமிழ் படத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய விருது பெற்ற விருதாளர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகளைக் குவித்துத் தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும்;

இயக்குநர் வசந்த், இலட்சுமி பிரியா சந்திரமவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும்,

மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள் என்றும், சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment