சிற்றூராட்சி தனக்கான ஓர் ஆளுகையை உருவாக்கும் போராட்டம்!

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’! * தொடர்- 1

கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஒருவருடன் நான் நடத்திய நேர்காணல் அது. ஓர் தொலைக்காட்சிக்காக இணைய வழியில் (ஜூம் மீட்டிங்) நடத்தியது.

தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிட்டிலிங் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.மாதேஸ்வரி அவர்களுடன் நடத்திய அந்த நேர்காணல்,

பழங்குடி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றதையும் அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவருக்குக் கிடைத்த உதவிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது.

மிக எளிய பின்புலத்திலிருந்து வந்துள்ள இவரை எதிர்த்து ஊராட்சி தேர்தலில் 9 பேர் கடுமையாகப் போட்டியிட்டார்கள் என்பதையும் தானோ தனது குழுவினரோ நம்பிக்கையோடும்,

எந்த சூழ்நிலையிலும் வாக்குக்குப் பணம் கொடுக்கவே கூடாது என்பதில் இறுதி வரை உறுதியோடும் இருந்து வென்றோம் என்பதை அவர் சொன்னபோது அவரிடம் ஒரு பெருமிதம் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

நேரில் செல்ல வேண்டும்

அவர் கூறிய ஒரு கருத்துதான் என்னை அந்தப் பஞ்சாயத்துக்கே நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.

உங்கள் சாதனை என்ன என்று நான் அவரிடம் கேட்டவுடன், “நாங்கள், எங்கள் பஞ்சாயத்தை எங்கள் மக்களுக்கான ஒரு அரசாங்கமாக உருவாக்கி, அதனை ஆளுகை (Governance) செய்ய மக்களைத் தயார் செய்து வருகிறேன்” என்று கூறினார்.

இப்படி ஒரு பதிலை எந்தப் பஞ்சாயத்துத் தலைவரிடமிருந்தும் கேட்கவில்லை.

நம் நாட்டில் கட்டிடங்கள் இருக்கும், அங்கே மனிதர்கள் இயங்குவார்கள், பல செயல்பாடுகள் நடக்கும்.

ஆனால், அங்கு மக்களை நோக்கிய, மக்கள் தேவையில் மக்களை மதித்து மக்களுடன் இணைந்து பணி நடக்கின்றதா என்பதுதான் கேள்வி.

அவர் கூறுகையில், “எனக்கு முன்பும் ஒரு பெண்மணி இந்த பஞ்சாயத்தின் தலைவராக இருந்தார். பஞ்சாயத்துக்கான கட்டிடம் இருந்தது, அங்கு ஒரு எழுத்தர் இருந்தார்.

வரிவசூல் நடந்தது. கிராமசபைக்கான கையெழுத்து வீதி வீதியாக வாங்கப்பட்டது. பஞ்சாயத்துக் கூட்டம் நடந்ததாக எவரும் அறிந்தது கிடையாது.

மக்களுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. யாரோ எங்கிருந்தோ திட்டம் தீட்டி ஒருவரை தேர்தலில் நிற்க வைத்து, வெற்றிபெற வைத்து, அதிகாரத்தை தன் கையில் வைத்து ஒரு பொம்மலாட்டத்தை நடத்தி வந்தார்கள்.

இந்த போக்கு மக்களைப் பெரிதும் விரக்தியடையச் செய்தது. அங்கிருந்துதான் என் பணி துவங்கியது” என்பதைத் தலைவர் மாதேஸ்வரி விளக்கும்போது கட்டாயம் இங்குச் செல்லவேண்டும் என்ற ஆர்வம் நமக்கு இன்னும் கூடியது.

சிட்டிலிங்கி பஞ்சாயத்து

“பஞ்சாயத்து என்பது ஓர் அரசாங்கம். அதில் ஒரு ஆளுகை உள்ளது, ஓர் நிர்வாகம் நடக்கிறது, மக்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர் ஒரு சிலர் இருக்கின்றனர் என்பதை மக்களிடம் இன்று பதிய வைக்கத்தான் நான் செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்….”

“அதுதான் என் முதல் செயலாக இருக்கிறது” என்றும், “இதைச் செய்வதற்குப் பல சோதனைகளை நான் கடக்க வேண்டியுள்ளது” என்றும், “ஓரளவு கடந்துவிட்டேன்” என்றும் பதிலளித்தார்.

அவர் சாதனைப் பட்டியல் என்று எதையும் கூறாமல் அவர் சந்திக்கும் சவால்களை மட்டும் அடுக்கிக் கொண்டே சென்றார்.

கடைசியாக அந்த நேர்காணலை முடிக்கும் முன் கூடிய விரைவில் உங்கள் பஞ்சாயத்துக்கு வருவேன் என அவரிடம் கூறினேன்.

அதன் அடிப்படையில் ஒரு நாள் அதிகாலை அந்த ஊருக்குச் சென்றேன். நான் அங்கு சென்ற போது பகல் 10 மணியைத் தாண்டியிருந்தது.

பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.மாதேஸ்வரி மஞ்சுநாத் பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைத்தும் ஓர் ஒழுங்கிலிருந்ததை உணர முடிந்தது. தூய்மையாகவும், ஆவணங்கள் அனைத்தும் முறையாக அடுக்கப்பட்டும் இருந்தன.

அந்த பஞ்சாயத்து அலுவலகம், ஒரு கேரள பஞ்சாயத்து அலுவலகம் போல் மக்கள் வந்து போவதைப் பார்க்க முடிந்தது.

வருவோரில் பலர் தங்களின் தேவைகளை கோரிக்கைகளாகக் கொண்டுவந்து பஞ்சாயத்துத் தலைவரிடம் கூறிவிட்டுச் செல்லும்போது ஒரு எதிர்பார்ப்புடன் அங்கு வந்து செல்வது தெரிந்தது.

சுற்றிலும் மலைகள் நிறைந்த ரம்மியமான சூழலில் அந்த ஊர்கள் அமைந்திருந்தன. எங்கு நோக்கினும் மலைகள், எங்கும் அடர்ந்த வனப்பகுதி. பசுமை குன்றாமல் இருந்தது. பெரும் பணக்காரர்கள் இல்லாத ஊராகவே காட்சியளித்தது.

ஒரு தொண்டு நிறுவனம் இந்த சமூகத்துடன் இணைந்திருந்ததை அங்கு நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின, 42 சிற்றூர்களைக் கொண்ட பெரிய பஞ்சாயத்து சிட்டிலிங்கி. 80% மக்கள் பழங்குடிகள்.

தாழ்த்தப்பட்டவர்கள் 10%. அந்தக் கிராமப் பஞ்சாயத்தை சுற்றிவர 50 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன் இருவர் தொண்டு நிறுவனம் தொடங்க தேடியபோது, யாரும் செல்லாத இடமாகக் காட்சியளித்த ஊர்தான் இந்த சிட்லிங் பஞ்சாயத்து.

சேவைகள் செல்லாத இடம்!

என் உரையாடலை ஆரம்பித்தவுடன் கிராம பஞ்சாயத்துத் தலைவர் கூறினார், எங்கள் உள்ளாட்சியில் நான் பெரும் சாதனையாக எதைப் பார்க்கிறேன் என்றால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் ஒரு சாரார் அரசாங்கத்தின் கண்களுக்குப் படாமலேயே இருந்தனர்.

அவர்களுக்குச் சாலை இல்லை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை. 7 கி.மீ. நடந்தேதான் அவர்கள் குடியிருக்குமிடம் செல்ல வேண்டும்.

அவர்களுக்கு வீடு கட்டித்தர யாரும் இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை.

காந்தி, ‘உனக்கு உன் பணியில் சந்தேகம் வரும்போதெல்லாம் உன்னையே ஒரு கேள்வி கேட்டுக்கொள்.

நீ செய்யும் பணி என்பது நீ சந்தித்த மிகவும் பரம ஏழையின் வாழ்வில் ஏதேனும் திருப்புமுனையை ஏற்படுத்துகிறதா என்று பார்.

அப்படிப் பார்க்கும் போது ஏதாவது ஒரு வழியில் சாதாரண மனிதர்கள் பலன் பெறுவார்கள் என்றால், நீ செய்வது சரி என எடுத்துக் கொண்டு உன் பணியினை தொடர்’ என்று வழிகாட்டினார்.

மகாத்மா காந்தியின் இக்கருத்தை நினைத்துப் பார்த்து என் பணியினை ஆரம்பித்தேன்” என்றார்.

இதன் அடிப்படையில் அந்த பஞ்சாயத்துத் தலைவிக்கு அவர் பஞ்சாயத்தில் கடைக்கோடியில் வாழ்ந்து வருகின்ற குடிமக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து அங்கு தன் பணியைத் தொடங்குகிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த பஞ்சாயத்தில் உள்ள ஒரு மலைப்பாங்கான இடத்தில் வசிப்போர் பற்றி அங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது இதற்கு முன் இருந்த பஞ்சாயத்துத் தலைவியோ எந்தக் கவலையும் அற்ற நிலையிலிருந்துள்ளனர்.

க.பழனித்துரை

ஆனால் இவருக்கு அந்தப் பஞ்சாயத்தில் கடைக்கோடியில் வாழும் மனிதர்கள் முகம் தெரிந்துள்ளது.

இவருக்கு எப்படி வந்தது அப்படி ஒரு பார்வை என்பதுதான் நமக்கு உதித்த முதல் கேள்வி.

இதற்குக் காரணம், தான் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியராக இருந்த காரணத்தால் அந்த நிறுவனம் எப்படி மக்களின் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்ற முறைமையை கற்றுக் கொடுத்ததுதான் என்றார் திருமதி மாதேஸ்வரி.

(தொடரும்…)

Comments (0)
Add Comment