அம்மாவைப் போல சமையலை சொல்லித் தரும் ரேவதி சண்முகம்!

ருசியான உணவைப் பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். அதிலும் உருளைக் கிழங்கின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தைப் பற்றிக்கூட ருசிபட எழுதியிருப்பார்.

அவருடைய மகள் ரேவதி சண்முகத்தை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

சமையல் என்றாலே, தொலைக்காட்சியிலும், வலைத்தளங்களிலும், புத்தகங்களிலும் ‘பாப்புலர்’ஆன ரேவதி சண்முகம் இதுவரை பல ஆயிரக்கணக்கான ரெசிபி’க்களைத் தயாரித்திருக்கிறார்.

பதினைந்து வயதில் இவருக்குத் திருமணமான போது, சமையல் பற்றிய அரிச்சுவடி கூட இவருக்குத் தெரியாது. வீட்டில் சமையலுக்கு இருந்தவர்கள் ஆண் சமையல் காரர்கள்.

ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்டில் படித்து முடித்து, எப்போதும் ரேடியோவும் கையுமாகவே இருந்த ரேவதிக்குத் திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் வந்த பிறகு முதலில் சமைத்த உணவு – உப்புமா.

சமைக்க முடியாமல், சில அவமானங்களைச் சந்தித்த பிறகு, ஒரு வெறி போன்ற உணர்வுடன் சமையலைக் கற்றுக் கொண்டார். வீட்டிற்கு எதிரே இருந்த ஆனந்தவள்ளி மாமி கற்றுக் கொடுத்தார்.

மீனாட்சியம்மாள் எழுதிய புத்தகம் கற்றுக் கொடுத்தது. தொலைபேசி  மூலம் சிலர் கற்றுக் கொடுத்தார்கள். சமையல் கலை வசப்பட்டது. எல்லோரும் இவரை வியந்து பார்த்தார்கள்.

அப்பா வழியில் செட்டிநாட்டு சமையலும், அம்மா வழியில் சென்னை வட்டாரச் சமையலும் கை கொடுத்தன. கணவரும், பிள்ளைகளும் பெருமிதப்பட்டார்கள்.

பத்திரிகைகளில் இவர் எழுதி வெளிவந்த ரெசிபிக்களுக்கு பெரும் வரவேற்பு. விதவிதமான குழம்புகளும், புளியோதரையும் பிரபலமாயின.

தொலைக்காட்சிகளிலும் ரெசிபிக்களை அவரே வெளியிட, நிறையப் பெண்களின் சமையலறைகளில் பேசப்பட்டார் ரேவதி.

எதையும் மறைக்காமல், சிரத்தையாக, ஒரு தாயாரைப் போல அவர் சொல்லிக் கொடுத்தவிதம், கடல் கடந்தும் அவருக்கான ரசிகைகளை உருவாக்கியது.

ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் சொல்லித்தந்த அவர் தனியாகச் சமையலுக்கு என்றே வகுப்புகளையும் எடுத்தார்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் வந்து கற்றுக் கொண்டார்கள். சிலருடைய வாழ்க்கையின் வெப்பம் மாறியது. சிலர் வெளிநாடுகளுக்குப் போய்ச் சமையலில் தேர்ச்சி பெற்றார்கள்.

இதுவரை பல்லாயிரக்கணக்கான ரெசிபிக்களைத் தயாரித்து அளித்திருக்கிற இவருக்குப் பிடித்தது எது தெரியுமா?

ரசம் தான். அதை அவர் சொல்கிற விதமே ரசமாக இருக்கிறது.

பெரும்பாலும், பொங்கல் தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் அசைவ உணவுகளையே சாப்பிட்டுப் பழக்கமான தனது தந்தை கண்ணதாசனுக்குச் சமைத்துப் பரிமாறிய அனுபவம் இல்லை என்றாலும்,

‘’என்னைக்கிருந்தாலும் அவரோட மகள் நான்’’ – சொல்லி நெகிழ்கிற ரேவதி இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட சமையல் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

நிறைய தொலைக்காட்சிகளில் சமையலைச் சொல்லித் தந்திருக்கிறார். சமைக்கப் பல டிப்ஸ்களை அள்ளித் தெளித்திருக்கிறார்.

தன்னிடம் இருக்கிற சமையல் வித்தையை மற்றவர்களுக்குப் பொறுமையாகச் சொல்லித் தர, தனியாக இணையதளம் ஒன்றையே நடத்திக் கொண்டிருக்கிறார் ரேவதி சண்முகம்.

அந்தத் தளத்திற்குச் சந்தாதாரர்களாக இருப்பவர்கள் மட்டும் – இரண்டே கால் லட்சம் பேர்.

Comments (0)
Add Comment