கிரிக்கெட் உலகத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைவிட அதிக பரபரப்பை ஏற்படுத்தும் போட்டி என்றால் அது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டியாகும்.
அது ஒரு நாள் போட்டியாக இருந்தாலும் சரி, டி20 போட்டியாக இருந்தாலும் சரி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பு தான்.
சேவாக், சச்சின், கங்குலி போன்ற வீரர்கள் இந்திய அணில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்தியா – பாகிஸ்தான் போட்டி வந்தால் நாடு முழுவதும் அன்று கிரிக்கெட் ரசிகர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்.
நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் பணி புரியும் இடங்களில் விடுமுறை எடுத்து, நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் உட்கார்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்து, ரசித்து, கொண்டாடும் வழக்கம் உலகமெங்கும் பரவி இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்பொழுதும் உண்டு.
அதேபோல் வருகிற ஜூலை 31ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் டி20 போட்டிக்கு டிக்கெட் விற்பனை மிக வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டியில் ஒரே ஒரு வித்தியாசம்தான். விளையாடப் போவது இந்திய ஆடவர் அணி கிடையாது, இந்திய மகளிர் அணி.
ஆம், இந்த வருட காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
இந்த வருட காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது. இந்த காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகள் வருகிற ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிவடைகிறது.
எட்டு அணிகள் விளையாடும் இந்தத் தொடரில் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குரூப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை குரூப் ‘ஏ’விலும், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேச அணிகள் குரூப் ‘பி’யிலும் இடம் பெற்றுள்ளன.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதன் முதலாக அறிமுகமாகும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஜூலை 31ஆம் தேதியன்று எட்ஜ்பாஸ்டனில் மோதுகின்றன.
இந்த நகரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் ஏற்கனவே அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் போட்டிக்கு டிக்கெட் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. இது கூடிய சீக்கிரத்தில் ‘சோல்ட் அவுட்’ ஆகும் என்று பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் தலைமை நிர்வாக அதிகாரி இயன் ரீட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காமன்வெல்த் போட்டிகளின் தலைமை நிர்வாக அதிகாரி இயன் ரீட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
“இந்த வருடம் காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனையாகி விட்டன.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பில் இந்த டிக்கெட்கள் விற்பனை நடைபெற்று உள்ளது.
குறிப்பாக இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கு டிக்கெட் விற்பனை மிக அமோகமாக நடைபெற்று வருகிறது.
இது கூடிய சீக்கிரத்தில் முழுமையாக விற்று தீர்ந்துவிடும். நானும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன் என்பதால் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வு இதுவாகும்.
இந்த விளையாட்டுப் போட்டியில் 5000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் சுமார் 45000 தன்னார்வலர்கள் மற்றும் ஊதியம் பெறும் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.
காமன்வெல்த் விளையாட்டுகளில் 72 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தற்பொழுது நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் அனைத்து 72 காமன்வெல்த் உறுப்பினர்களும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பல வருடங்களாக பிசிசிஐ, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் முயற்சியை எடுத்து வருகிறது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஒரு பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்
சில வாரங்களுக்கு முன்பு தான் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
அவர் ஓய்வு அறிவிக்கவில்லை என்றால் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் அணிக்கு ஒரு பெரிய தூணாக இருந்திருப்பார்.
இருப்பினும் தற்பொழுது இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்மன்பிரீத் கவுர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.
அவருடன் துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
சமீபகாலமாக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய மகளிர் அணி வருகிற 31ஆம் தேதி அன்று பாகிஸ்தான் மகளிர் அணியை கண்டிப்பாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான ஆட்டத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் இந்த காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிகளுக்கு இதுவரை 1.2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-இளவரசன்