இணையத்தில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலளித்தார்.
அப்போது “இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி பிரசாரம் செய்வதன் மூலமும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
2021-2022 காலகட்டத்தில் போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 யுஆர்எல்-கள் முடக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை சரிபார்ப்பதற்காக, பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவின் பிரத்யேக செல் 2020ம் ஆண்டு மார்ச் 31 அன்று உருவாக்கப்பட்டது.
இதில் மக்கள் கொரோனா தொடர்பான தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். கொரோனா தொடர்பான கேள்விகள் உட்பட 34,125 கேள்விகளுக்கு இந்த பிரிவு பதிலளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.