இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் கடந்த 9-ம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. அதனால் நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.
புதிய அதிபரை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்தல் நேற்று நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.
அவருக்கு 134 வாக்குகள் கிடைத்தன. மற்ற வேட்பாளர்களான அழகபெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.
அப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று, தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பாராளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி அவர்களை அரசாங்க பதவிகளில் இருந்து துரத்திய நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக கோரி போராட்டம் வெடித்தது.
அது போல நேற்று புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்தெடுக்கப்பட்ட போது அதிபர் மாளிகை முன்பு அவருக்கு எதிராக போராட்டஙகள் நடந்தன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.